தமிழ்நாட்டை இந்தியாவின் ‘புத்தாக்கத் தலைநகராக மாற்றுதல்’ என்ற கருப்பொருளைக் கொண்ட மாநாட்டை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப (iTNT) மையம் ஏற்பாடு செய்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் முதல் வருடாந்திர புத்தாக்க (IN2TN) ஐபி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 1-வது வருடாந்திர `இன்னொவேட் இன் தமிழ்நாடு` (IN2TN) ஐபி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் கருப்பொருள், 'அறிவார்த்த ஆற்றல் நிலையம்' (Intellectual Powerhouse) ஆகும்.
iTNT Hub-இல் PATHFINDER திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 5 ஆழ் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு iTNT Hub-இன் FOUNDATION நிதியத்தின் கீழ் நிதிக்கான காசோலைகளைக் கையளித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஐடிஎன்டி ஹப்பில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையம் (டிஎன்டிடிஎஃப்சி) கல்வி ஆராய்ச்சியாளர்களுக்கும் தொழில்களுக்கும் இடையே நான்கு தொழில்நுட்ப பரிமாற்றங்களை எளிதாக்கியது.
அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் இந்தியா; தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்; கணினி மேம்பாட்டு மையம், பெங்களூரு; போஷ் இந்தியா; மஹிந்திரா & மஹிந்திரா; மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் & பொறியியல் மற்றும் டிஎன்டிஎஃப்சிக்கான சட்ட கூட்டாளிகளுடன் வசதிகள் வரைபடம் மற்றும் உத்தேச ஒப்பந்தக் கடிதங்கள் உட்பட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பரிமாறிக் கொண்டது ஐடிஎன்டி ஹப்.
தொழில்துறை மற்றும் கல்வித்துறை இடையேயான ஒத்துழைப்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், காப்பீட்டு மையங்கள், தொடக்க நிறுவனங்கள், தொழில்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசுத் துறைத் தலைவர்கள் என கிட்டத்தட்ட 1,500 ஆழ் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காப்புரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் ஒரு முக்கிய அம்சம், அறிவுசார் காப்புரிமை இந்தியாவுடன் இணைந்து ஒரு நாள் முழுவதும் நடைபெறும் மாஸ்டர் வகுப்புகள் ஆகும், இதில், 270 ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஸ்டார்ட் - அப் நிறுவனர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் இரண்டாம் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 53 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காப்புரிமைதாரர்களின் iTNT Hub-இன் BEACON யோசனை சரிபார்ப்பு பட்டமளிப்பு விழாவும் IN2TN IP மாநாட்டின் சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் (IT&DS) அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக் குழுவின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ஜே. ஜெயரஞ்சன், அரசு முதன்மைச் செயலாளர், IT&DS துறை, பிரஜேந்திர நவ்னித், I.A.S., iTNT ஹப் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி வனிதா வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.