இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வெஞ்சர் டெப்ட் (Venture Debt) நிதியுதவி 2025ஆம் ஆண்டில் 12% வளர்ச்சி பெற்று, மொத்தம் $1.38 பில்லியனாக உயர்ந்துள்ளது, என அறிக்கை தெரிவிக்கிறது. 2024ஆம் ஆண்டில் இது $1.23 பில்லியனாக 238 ஒப்பந்தங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 187 ஒப்பந்தங்கள் மூலம் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
Stride Ventures வெளியிட்ட 'The Global Private Debt Report 2026: A Venture & Growth Credit Lens' அறிக்கையில், இந்தியாவின் தனியார் கடன் சூழல் கட்டமைப்பு மாற்றத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. வெஞ்சர் டெப்ட் தற்போது முக்கியமான நிதி ஆதாரமாக மாறியுள்ளதுடன், வளர்ச்சி கடன் (Growth Credit) பின்னடைவு கட்ட வளர்ச்சிக்கான முக்கிய கருவியாக உருவெடுத்து வருகிறது.
2025ஆம் ஆண்டில் வெஞ்சர் டெப்ட் ஒப்பந்தங்களின் சராசரி அளவு $3.5 மில்லியனாக இருந்தது. இதில் பெரும்பாலான முதலீடுகள் Series A மற்றும் Series B கட்டங்களில் செய்யப்பட்டுள்ளன. மொத்த ஒப்பந்தங்களில் 60% மற்றும் முதலீட்டுத் தொகையில் 51% இந்த ஸீரிஸ் ஏ மற்றும் சீரிஸ் பி-யில் இருந்தன.
துறைகள் வாரியாகப் பார்த்தால், ஃபின்டெக் துறை $600 மில்லியனுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து நுகர்வோர் துறை $188 மில்லியனும், கிளீன்டெக் துறை $108 மில்லியனும் பெற்றுள்ளன.
பூகோள ரீதியாக, டெல்லி NCR மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் மொத்த முதலீட்டின் மூன்றில் நான்கு பங்கைக் கொண்டுள்ளன. இந்த நகரங்கள் கட்டமைப்பு நிதியை ஈர்க்கும் திறன் பெற்ற வளர்ந்த ஸ்டார்ட்அப் மையங்களாக இருப்பதை இது காட்டுகிறது.
இதற்கிடையில், வளர்ச்சி கடன் (Growth Credit) வேகமாக வளர்ந்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் $1.68 பில்லியன் மதிப்பிலான 32 ஒப்பந்தங்கள் மூலம் இது வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தங்களின் சராசரி அளவு $52 மில்லியனாக இருந்தது. இங்கும் ஃபின்டெக் துறை முதலிடத்தில் உள்ளது; அதன் பின் நுகர்வோர், B2B மற்றும் தொழில்துறை துறைகள் வருகின்றன.
வெஞ்சர் டெப்டை விட வளர்ச்சி கடன் பல நகரங்களில் பரவலாக காணப்படுகிறது. மும்பை, டெல்லி NCR, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நிதி மையங்களில் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது பெரிய மற்றும் வளர்ந்த நிறுவனங்களின் தேவைகளுடன் பொருந்துவதை காட்டுகிறது.
அறிக்கையின் படி, எதிர்காலத்தில் தனியார் கடன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும், என 70%க்கும் மேற்பட்ட நிறுவனர் எதிர்பார்க்கின்றனர். பங்கு குறையாமல் நிதி பெறுதல், விரைவான செயல்முறை மற்றும் நெகிழ்வான கட்டமைப்பு ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகும். வெஞ்சர் கேபிடல் முதலீட்டாளர்களும் கடனை ரக கருவியாகக் கருதி பயன்படுத்துகின்றனர்.
எதிர்காலத்தில், ஆரம்ப கட்டத்தில் பங்கு முதலீடு (equity), அதன் பின் வெஞ்சர் டெப்ட், பின்னர் வளர்ச்சி ஈக்விட்டி மற்றும் வளர்ச்சி கடன் ஆகியவற்றை இணைக்கும் ஒருங்கிணைந்த நிதி அமைப்பு இந்தியாவில் உருவாகும், என அறிக்கை கூறுகிறது. இது உலகளாவிய முன்னேற்றமான சந்தைகளின் மாதிரியை பிரதிபலிக்கிறது.
‘வெஞ்சர் டெப்ட்’ என்பது என்ன?
வெஞ்சர் டெப்ட் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை கடன் நிதியாகும். இது பொதுவாக வெஞ்சர் கேபிடல் முதலீட்டை ஏற்கனவே பெற்றுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. பங்கு வழங்காமல் (non-dilutive) நிதி பெறுவதற்கு இது உதவுவதால், நிறுவனத்தின் உரிமை பங்கில் குறைவு ஏற்படாது. வளர்ச்சி கட்டத்தில் செலவுகளை நிர்வகிக்க, செயல்பாடுகளை விரிவாக்கிக்கொள்ள மற்றும் நிறுவனத்தின் ‘runway’-ஐ நீட்டிக்க வெஞ்சர் டெப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது.