கடன் இல்லாதவர்களை இன்று விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும், குறிப்பாக இஎம்ஐ-க்கள் நலிந்துவிட்ட நிலையில், எதற்கெடுத்தாலும் தவணை முறையில் பொருட்களை வாங்கி நம் மக்கள் பழகி விட்டனர். வீடு, கார், இருசக்கர வாகனம் என பெரிய கடன்களை வைத்திருப்பவர்கள் ஒருபுறம் என்றால், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட சில வசதிகள் மூலம் சிறு சிறு கடன்களால் அவதிப்படுபவர்கள் மறுபுறம்.
கடன் வாங்காமல், சிக்கனமாக வாழ்ந்து, எதிர்காலத்திற்கு சேமிக்கப் பழகுங்கள் என்ற நம் முந்தைய தலைமுறையின் அறிவுரைகள் அர்த்தமுள்ளவை எனத் தெரிந்தாலும், அது இந்தக் காலத்திற்கு பயன்படாது என்றே இளம் தலைமுறையினர் நினைத்து வருகின்றனர். ஆனால், கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை எப்படிச் சாத்தியப்படுத்தினேன், என பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்துள்ள அனுபவப் பதிவு அவர்களைச் சற்றே யோசிக்க வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீகவி எனக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நபர், தனது வயது 53 என்றும், கடந்த 25 ஆண்டுகளாகச் சேமித்து, தன் வங்கி கையிருப்பில் ரூ. 1.01 கோடி வைத்திருப்பதாகவும், அது தவிர பங்குச்சந்தையில் ரூ. 65 ஆயிரம் வைத்திருப்பதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ரெட்டிட்டில் தனது 25 ஆண்டு கால வாழ்க்கையை, ‘ஒரு (பெரிய) மைல்கல்லை எட்டினேன் - 1 கோடி ரூபாயை 25 ஆண்டுகளில் சேமித்துள்ளேன்’ என்ற தலைப்பில் சிறிய பதிவாக அவர் பகிர்ந்துள்ளார்.
ப்ரூப் ரீடர் வேலை
தென்னிந்தியாவின் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாகவும், சிறு வயதில் சிவில் சர்வீஸ் படிக்க ஆசைப்பட்டதாகவும், குடும்பப் பொருளாதாரப் பிரச்சினையால், பத்தாம் வகுப்பு மேல் படிக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனது சொந்தக் கிராமம் எது என அவர் தெளிவாகக் கூறவில்லை.
தனது 27 வயதில் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்ததாகவும், அப்போது அவரது கையில் வெறும் ஐந்தாயிரம் பணம் மட்டுமே வைத்திருந்ததாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் பத்தாவது வரை மட்டுமே படித்துள்ளேன். எங்களது குடும்பம் ஏழ்மையானது என்பதால், பெற்றோரை மேலும் சிரமப்படுத்த விரும்பாமல், கடந்த 2000ம் ஆண்டு பெங்களூருவுக்கு வேலை தேடி வந்தேன். அப்போது என் சட்டைப் பையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.
இங்கு புரூப் ரீடராக பணியில் சேர்ந்தேன். அப்போது எனது சம்பளம் ரூ.4,200 ஆகும். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கிட்டப்பார்வை காரணமாக எனது வேலையை நான் ராஜினாமா செய்தேன். கடைசியாக நான் வேலையை ராஜினாமா செய்த போது, எனது சம்பளம் ரூ.65 ஆயிரம். வேலையை ராஜினாமா செய்தாலும், எனது வங்கி சேமிப்பின் மூலம் எனக்கு மாதம் அறுபதாயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
இப்போது எனது வங்கி வைப்புத்தொகையாக ₹1.01 கோடியும், பங்குச் சந்தையில் ₹65,000 பணமும் சேமிப்பாக உள்ளது. இவை அனைத்தும் ஒருபோதும் நான் கடன் வாங்காமல் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலும் சிக்கனமாகச் சேமித்த பணம்...” என அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கனமும், சேமிப்பும்
இந்தப் பதிவை வெளியிட்டுள்ள நபர், தான், தன் மனைவி மற்றும் மகள் என மூன்று பேர் கொண்ட குடும்பம் தன்னுடையது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆடம்பர வாழ்க்கை வாழாமல் தேவைக்குத் தக்க சிக்கனமாக வாழ்ந்ததால், இந்தப் பணத்தைத் தன்னால் சேமிக்க முடிந்ததாக அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.
“எனக்குச் சொந்தமாக கார் எதுவும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இருசக்கர வாகனத்தையும் விற்று விட்டேன். பெங்களூருவின் புறநகர் பகுதியில் மாத வாடகையாக ரூ.6,500க்கு ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில்தான் எனது குடும்பத்துடன் நான் வசித்து வருகிறேன். பெரும்பாலும் எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறேன். சிறிதளவு தண்ணீர்கூட குடிக்காமல் என்னால் ஐந்து கிலோமீட்டர் அளவிற்குக்கூட நடக்க முடியும்."
அந்தளவிற்கு நாங்கள் குடும்பத்துடன் எங்கள் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாத்து வருகிறோம். இதுவரை பெரிய மருத்துவ செலவுகள் வந்ததில்லை. அரிதாகவே மருத்துவரைப் பார்க்கச் செல்கிறோம். அந்தளவிற்கு ஆரோக்கிய வாழ்க்கைக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
"குடும்பச் செலவிற்கென மாதம் ரூ.25,000 செலவு செய்து வருகிறேன். அது தவிர மீதமுள்ள பணத்தை அப்படியே சேமிக்கத் தொடங்கி விட்டேன். சமீபத்தில்தான் எனது மகள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அதுவரை எனது சம்பளத்தில் மட்டுமே அனைத்து செலவுகளையும் சமாளித்து, சிக்கனமாக குடும்பம் நடத்தி, இந்தப் பணத்தைச் சேமித்துள்ளேன்,” என சிக்கனமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தனது பதிவு மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சொந்தக் கிராமத்தில் அவரது மூதாதையர் வீடு ஒன்று இருப்பதாகவும், தங்கள் வயோதிகத்தை அங்கு கழிக்க இருப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது நிதி வெற்றிக்கு பொறுமை, ஒழுக்கம் மற்றும் நல்ல ஆரோக்கியம் முக்கியக் காரணம் என்றும், கல்வி, புத்திசாலித்தனம் மற்றும் நேரம் ஆகியவை ஒருவரின் மிகப்பெரிய சொத்துக்கள் என்றும் பல வாழ்க்கை தத்துவங்களையும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குவியும் வரவேற்பு
இந்த அனுபவப் பதிவு இணையத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது நிதி ஞானத்தையும், எளிமையான வாழ்க்கைத் தத்துவத்தையும் பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“இதுவரை நான் ரெட்டிட்டில் படித்ததிலேயே மிகச் சிறந்த பதிவு இதுதான். தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை என் தலைமுறைக்கு உங்கள் பதிவு மூலம் தெளிவாக சொல்லித் தந்ததற்கு மிக்க நன்றி,” என்றும், “உங்கள் பதிவு புத்துணர்ச்சியை அளிக்கிறது. நான் ஒரு மில்லினியல். என் தலைமுறைக்கு உங்கள் பதிவு மிகவும் உபயோகமானதாக இருக்கும்,” என்றும் விதவிதமான பதிவுகளை பயனர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
மற்றொரு பயனர், “உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் பதிவைப் படிக்கும்போது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. ஏனென்றால் சேமிப்பு பற்றி நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். எனக்கு கிட்டத்தட்ட 28 வயது, சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இதுவரை எதுவும் சேமிக்கவில்லை. நீங்கள் 27 வயதில் கையில் எதுவும் இல்லாமல் தொடங்கி, தற்போது இங்கு வந்திருப்பதைப் படிக்கும்போது, மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படியாக சேமிப்பு மற்றும் திட்டமிடலின் அவசியம் குறித்து, தேவையில்லாமல் கடன் பிரச்சினைகளில் சிக்கி நிம்மதியை இழக்காதீர்கள் என்றும் தனது பதிவு மூலம் இணையத்தில் புதிய நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார் அந்நபர் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு, கோடிக்கணக்கில் பணம் சேமிக்க வேண்டும் என்றால், நிறையப் படித்திருக்க வேண்டும், லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் உள்ள பிம்பத்தை, தனது எளிய வாழ்க்கை மூலம் உடைத்துக் காட்டி, ஜெயித்திருக்கிறார் அந்த சாமானியர்.
ஐஐடி இலக்கு
வேலையை ராஜினாமா செய்து விட்டு, வீட்டில் ஓய்வில் இருந்தாலும் அவரது கனவுகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை என்பது, பயனர்களுக்கு அவர் அளித்துள்ள சில பதிவுகள் மூலம் தெரிய வருகிறது. தற்போது கணிதப் பாடங்களைப் படித்து வருவதாகவும், அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வருவதாகவும், எதிர்காலத்தில் ஐஐடியில் படிக்க வேண்டும், என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதில்கள் நெட்டிசன்களை மேலும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பணம் உள்ளது. ஆனாலும் ஓய்வெடுக்க விரும்பாமல், தொடர்ந்து புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு இணையாக இலக்குகளை நிர்ணயித்து தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவரிடம் இன்னமும் கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன, என நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.