+

பரோட்டா மாஸ்டர் மகன்; வடகரை கிராமத்தின் முதல் டாக்டர் - நீட் தேர்வில் வென்று சாதித்த கணேஷ்குமார்!

விருதுநகர் மாவட்டம், வடகரை கிராமத்தைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் கிருஷ்ணசாமியின் மகன், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். வறுமையான குடும்பத்திலிருந்து வந்த கணேஷ்குமாரின் இந்தச் சாதனை, குடும்பத்தினரையும், ஒட்டுமொத்த கிராம மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டில் எப்போதும் டாப் இடத்தில் இருக்கும் மாவட்டம் விருதுநகர். 'கல்வி ஒன்றே உன்னை உயர்த்தும்' என்பதை ஆழமாக நம்பும் இந்த மாவட்ட மாணவர்களின் கடின உழைப்பிற்கு இன்னொரு சான்றாகி இருக்கிறார் மாணவர் கணேஷ்குமார். நீட் தேர்வில் 454 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ கலந்தாய்வில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சீட் பெற்றிருக்கிறார் இவர்.

வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட சிறிய கிராமமான நரிக்குளம் தான் கணேஷ்குமாரின் சொந்த ஊர். இவருடைய தந்தை கிருஷ்ணசாமி பரோட்டா மாஸ்டராக இருக்கிறார், தாயார் ஜெயந்தி மில்லில் கூலி வேலை செய்கிறார். இவர்கள் குடும்பத்தில் கணேஷ் கடைக்குட்டி பையன்.

“எங்க வீடு அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சின்ன ஓட்டு வீடு. அப்பா தினமும் 200 ரூபாய் சம்பளத்துக்கு பரோட்டா மாஸ்டரா இருக்காரு, அம்மாவும் தினக்கூலி தான். அவங்க கஷ்டப்பட்டாலும் எங்களை நல்லா படிக்க வெச்சாங்க. அக்கா இளநிலை செவிலியர் படிச்சிருக்காங்க, அண்ணன் பொறியியல் பட்டதாரி. அக்கா மருத்துவத் துறையில இருக்குறத பாத்து எனக்கும் அத்துறை மேல ஆசை வந்துச்சு. அவங்க நர்ஸா இருக்குறதால நான் டாக்டராகனும்னு ஆசைப்பட்டேன்,” என்று தன்னுடைய மருத்துவர் கனவு எப்படி உருவானது என்று யுவர் ஸ்டோரி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் கணேஷ்.

" align="center">கணேஷ்குமார்

கணேஷ்குமார், சாதனை மாணவர்

1 முதல் 5ம் வகுப்பு வரை நரிக்குளம் அரசுப் பள்ளியிலேயே தொடக்கக் கல்வியை பெற்றிருக்கிறார் கணேஷ்குமார். அதன் பின்னர், 6 முதல் 12ம் வகுப்பு வரை சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியிலேயே படித்துளளார். 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது கொரோனா சமயம் என்பதால் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றிருக்கிறார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 530 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் கணேஷ்.

மூன்று முயற்சிகளுக்குப் பிறகு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது பயணம் பற்றி கூறிய அவர்,

”முதல் முறை நீட் தேர்வுக்காக நானே படித்து தேர்வு எழுதினேன். அதில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை, இரண்டாவது முறை என்னுடைய மாமா மதுரையில் பயிற்சிக்காக சேர்த்து விட்டார். 2வது முறையும் நான் தேர்ச்சி பெறவில்லை. இருந்தாலும் எப்படியாவது டாக்டராகிவிட வேண்டும் என்று 3வது முறையும் முயற்சி செய்தேன். சேலத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து, மீண்டும் முழு கவனத்துடன் படித்தேன். 3வது முயற்சியில் 454 மதிப்பெண் எடுத்தேன், அதனால் இப்போது என்னுடைய டாக்டர் கனவு நிறைவேறி இருக்கிறது,” என்கிறார் கணேஷ்குமார்.

அவர், ஒவ்வொரு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த போது அவருடைய பள்ளி ஆசிரியை சரஸ்வதி ஊக்கமளித்து வழிகாட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறார் கணேஷ்.

கணேஷ்குமார்
“முழுவதுமாக கவனம் செலுத்தி படித்தால் எல்லா மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும். நான் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் செலவிட்டு படித்தேன். என்சிஇஆர்டி பாட புத்தகங்களை படிப்பது நீட்டில் தேர்ச்சி பெற உதவும். எந்தப் பாடமாக இருந்தாலும் புரிந்து படித்தால் மதிப்பெண்களைப் பெறலாம். நீட் தேர்வையும் தமிழிலேயே எழுதி 454 மதிப்பெண் பெற்று, 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ இடம் பெற்றிருப்பதாக,” கிராமப்புற மாணவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார் கணேஷ்குமார்.

கணேஷின் வெற்றியை அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி கிராம மக்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். வடகரை கிராமத்தில் இருந்து முதன் முதலாக ஒரு மாணவன் டாக்டராகப் போவதே அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

கணேஷ்

விருதுநகர் ஆட்சியருடன் மாணவர் கணேஷ்குமார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஐஏஎஸ் மாணவன் கணேஷ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கடின உழைப்பு, விடாமுயற்சி, மற்றும் குடும்பத்தின் ஆதரவு இருந்தால் எந்தத் தடைகளையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு கணேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

facebook twitter