
செயற்கை நுண்ணறிவு உலகில் ஜென் ஏஐ உண்டாக்கிய வியப்பும், பரபரப்பும் இன்னும் அடங்கவில்லை, அதற்குள் ஏஐ ஏஜெண்ட் மற்றும் ஏஜெண்டிக் ஏஐ (Agentic Ai) என குறிப்பிடப்படும் தன்னாட்சி ஏஐ சேவைகள் கவனத்தை ஈர்க்கத்துவங்கியிருக்கின்றன.
மனித தலையீடு இல்லாமல் சுயமாக செயல்படக்கூடிய திறன் கொண்டதாக சொல்லப்படும் தன்னாட்சி ஏஐ அமைப்புகள் குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி, தானாகவே யோசித்து, திட்டமிட்டு, சிக்கலான செயல்களை திறம்பட சிறப்பாக செய்து முடிக்க வல்லவையாக திகழ்கின்றன.

சாட்பாட்கள் போல சொன்னதை செய்து முடிக்கும் ஏஐ உதவியாளர்கள் அல்ல, இவை அதற்கும் மேலாக சுயமாக செயல்படும் திறன் கொண்டவை என 'ஏஜெண்டிக் ஏஐ' புகழ் பாடுகின்றனர் வல்லுனர்கள். வர்த்தக நிறுவன தலைவர்களும் இதை முன்மொழிகின்றனர்.
நிதிநுட்பம் துவங்கி சைபர் பாதுகாப்பு வரை பல்வேறு துறைகளில் ஏஜெண்டிக் ஏஐ பயன்பாடு துவங்கியிருக்கிறது. இவை நேரத்தை குறைத்து, செயல்திறனை மேம்படுத்தும், என சொல்லப்படுகிறது.
இந்த பரபரப்ப்புக்கு இடையே பிரெப்ளக்சிட்டி ஏஐ சார்பில் அறிமுகம் ஆகியிருக்கும் 'காமெட்' பிரவுசரும் ஏஐ ஏஜெண்ட் வகையைச் சேர்ந்தது என்கின்றனர். ஏஜெண்டிக் ஏஐ சேவையை மையமாகக் கொண்ட புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அறிமுகமாகத் துவங்கியுள்ளன. இன்போசிஸ் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றன.
ஏஜெண்டிக் ஏஐ இத்தனை பரபரப்பை ஏற்படுத்த என்னக் காரணம்? அவற்றின் சாத்தியங்களும், தாக்கமும் என்ன? விரிவாக பார்க்கலாம்.
ஜென் ஏஐ என்றால் என்ன?
ஏஜென்டிக் ஏஐ எனப்படும் சுயமாக செயல்படும் ஏஐ அமைப்புகளை புரிந்து கொள்ள முதலில் ஜென் ஏஐ நுட்பத்துடன் இவற்றை ஒப்பிட்டு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
எல்.எல்.எம் (LLM) எனச் சொல்லப்படும் பெரும் மொழி மாதிரிகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெனரேட்டிவ் ஏஐ (Gen Ai) மனிதர்கள் போலவே ஆக்கத்திறன் கொண்டதாக அமைகின்றன. பெரிய அளவில் தரவுகளை திரட்டி பயிற்சி அளித்தால் மனிதர்கள் போலவே எழுத்து வடிவங்களையும், ஆடியோ, வீடியோ ஆக்கங்களையும் உருவாக்கித்தருகின்றன.
சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் மொழி மாதிரிகள் சார்ந்து தான் செயல்படுகின்றன. மிட்ஜர்னி போன்ற சேவைகள் காட்சிகளை உருவாக்கித்தருகின்றன. ஏஐ சாட்பாட்களின் திறன் மேம்பட்டு அவற்றின் அடுத்தடுத்த வடிவங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருப்பதோடு, பல்வடிவ திறனும் பெற்றுள்ளன. (எழுத்தும், ஆடியோ,வீடியோ).

தன்னாட்சி அமைப்புகள்
ஏஐ சாட்பாட்கள் நிகழ்த்தும் சாகசங்களை மீறி, ஆக்கத்திறன் ஏஐ நுட்பம் அடிப்படையில் எதிர்வினை ஆற்றக்கூடியவை தான். அதாவது, பயனாளிகள் கட்டளைகளை ஏற்று சுயமாக செயல்படக்கூடியவை. இவற்றை தான் பிராம்ட் என்கிறோம். பிராம்டையும் நன்றாக பட்டைத்தீட்டினால் தான் அவற்றின் செயல்படும் சிறப்பாக இருக்கும்.
இதற்கு மாறாக, கட்டளையிடப்படாமலேயே சூழலை புரிந்து கொண்டு தானாக செயல்பட்டு இலக்குகளை நிறைவேற்றி தரக்கூடிய திறன் பெற்ற ஏஐ அமைப்புகள் ஏஜெண்டிக் ஏஐ எனப்படுகின்றன. இவை தானாக செயல்படக்கூடிய வழக்கமான தானியங்கி புரோகிராம்கள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளை விட மிகவும் மேம்பட்டவை. இவை புரோகிராம் செய்யப்பட்டது போல செயல்படக்கூடியவை அல்ல. தரவுகள் சார்ந்து சுயமாக இயங்கக்கூடியவை.
இவற்றுக்கு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டு. இலக்குகளை அடைய சிக்கலான செயல்களை சிறு பகுதிகளாக பிரித்து செயல்படுத்தக்கூடிவை. அவற்றோடு, தங்கள் செயல்பாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை. சிந்தித்து செயல்படக்கூடிய ஏஐ உதவியாளர் என வைத்துக்கொள்ளலாம். செயலுக்கு உரிய காரணங்களை அலசும் திறன் கொண்டவை. முக்கியமாக தரவுகள் சார்ந்து சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளக்கூடியவை.
ஏஐ ஏஜெண்ட்கள்
ஏஜெண்டிக் ஏஐ சேவைகள் பற்றி பேசும் போது ஏஐ ஏஜெண்ட்கள் பற்றியும் குறிப்பிடப்படுவதை கவனித்திருக்கலாம். அதென்ன ஏஐ ஏஜெண்ட்? அப்படி என்றால் ஏஜெண்டிக் வேறு, ஏஐ ஏஜெண்ட் வேறா? போன்ற கேள்விகள் எழலாம். ஏஜெண்டிக் ஏஇ மற்றும் ஏஐ ஏஜெண்ட் இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை தான். ஏஐ மற்றும் ஜென் ஏஐ போல இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். ஏஐ நுட்பத்தின் உட்பிரிவாக ஜென் ஏஐ அமைவது போல, ஏஜெண்டிக் ஏஐ உட்பிரிவு ஏஐ ஏஜெண்ட் என கொள்ளலாம்.
ஏஜெண்டிக் ஏஐ பிரேம்வொர்க் என்றால் அவற்றுக்குள் செயல்படக்கூடியவை ஏஐ ஏஜெண்ட்கள் என தொழில்நுட்ப மொழியில் விளக்கம் தருகின்றனர். ஏஜெண்டிக் ஏஐ அமைப்பிற்குள் பல்வேறு ஏஐ ஏஜெண்ட்கள் இருப்பதாகவும் கொஞ்சம் எளிமையாக புரிந்து கொள்ளலாம். இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், ஏஐ ஏஜெண்ட்கள் குறிப்பிட்ட செயல்களை தானாக செய்து முடிக்கும் திறன் பெற்றவை. இவற்றுக்கும் தன்னாட்சி உண்டென்றாலும் அதற்கு வரம்புகள் உண்டு.

தன்னாட்சி அமைப்புகள்
மேலும், ஏஐ ஏஜெண்ட்கள் ஒற்றை செயல்பாடுகளுக்கானவை. டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தயார் செய்தால் அதை மட்டும் செய்து முடிக்கும். ஆனால், ஏஜெண்டிக் ஏஐ விடுமுறை சுற்றுலா இலக்கு என்றால், பயண திட்டத்தை தயார் செய்து, பார்க்க வேண்டிய இடங்களை சரி பார்த்து, தங்குமிடத்தை ஆய்வு செய்து, டிக்கெட் பதிவு செய்து முழு திட்டத்தையும் தயார் செய்து கொடுத்துவிடும். அதே போல, பயனாளிகள் பழக்கங்களை புரிந்து கொண்டு அவர்கள் தேவைக்கேற்ப தானாக செயல்படும்.
இத்தகைய தன்னாட்சி அமைப்புகள் நான்கு முக்கிய கட்டங்களாக செயல்படுகின்றன. இவை தங்களுக்கான தரவுகளை சேகரிக்கும் திறன் கொண்டவை. அந்த தரவுகளை அலசி ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் புரிதலை பெறக்கூடியவை. இந்த புரிதலின் அடிப்படையில் முடிவெடுத்து செயல்படக்கூடியவை.
அதோடு, இந்த செயல்கள் அடிப்படையில் கற்றுக்கொண்டு செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியவை.இவையும் மொழி மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை தான். ஆனால் நோக்கத்திலும் ஆற்றலிலும் வேறுபட்டவை.
சிக்கலான செயல்கள்
சிந்தித்து செயல்படகூடியவை என்பதால் இவை சிக்கலான செயல்களை கூட செய்து முடிக்க வல்லவை. மனிதர்கள் திட்டமிடுவது போலவே சிக்கலான செயல்களை சின்ன சின்ன துண்டுகளாக பிரித்து நிறைவேற்ற வல்லவை. சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்து தானாக செயல்படுத்தக்கூடியவை. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் தன்மை கொண்டவை.
முக்கியமாக பிராம்ட் வடிவிலான தூண்டுதல் அல்லது மனித தலையீடு தேவையில்லாதவை.
ஏஐ ஏஜெண்ட்களோடு ஒப்பிடும் போது சுயமாக செயல்படும் ஏஐ தன்னாட்சி அமைப்புகளின் தானியங்கி செயல்பாடு அதிகமானவை. மேலும் இவை இலக்கு சார்ந்து செயல்படக்கூடியவை. சூழலோடு தொடர்பு கொண்டு செயல்படும் மற்றும் முடிவெடுக்கக் கூடியவை. உதாரணத்திற்கு சரக்குகள் தீர்ந்து போவதை உணர்ந்தால் புதிய சரக்கை தானாக ஆர்டர் செய்யக்கூடியவை. அதோடு தானாக தங்கள் செயல்களையும் வழிகளையும் மாற்றிக்கொள்ள கூடியவை.
பயன்பாடுகள்
ஏஐ ஏஜெண்ட்கள் பல துறைகளில் பயன்படுகின்றன. ஏஜெண்டிக் ஏஐ சேவைகளும் பல துறைகளில் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அமேசான் போன்ற நிறுவனங்கள் விநியோகத்தில் தானியங்கி ரோபோ செயல்பாட்டிற்கு இவற்றை நாடுகின்றன. சரக்கு கையிருப்பு நிர்வாகத்தை இவை திறம்பட கையாளும் திறன் கொண்டுள்ளன. இதே போல நிதிநுட்பம், சுகாதாரம், சைபர் பாதுகாப்பு என பல துறைகளில் அறிமுகம் ஆகியுள்ளன. சைபர் பாதுகாப்பை பொருத்தவரை, தாக்குதல் வாய்ப்புகளை கண்டறிந்து தானாக தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடியவை.
இன்னும் பல விதங்களில் ஏஜெண்டிக் ஏஐ பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. இவை செயல்திறனை மேம்படுத்துவதோடு பல துறைகளில் மனிதர்களுக்கு பதிலீடாக அமையலாம் என அஞ்சப்படுகிறது. அதைவிட, இந்த அமைப்புகளின் தன்னாட்சி தன்மை கட்டுப்பாட்டை இழந்தால் அல்லது மேற்பார்வை இல்லாமல் செயல்படும் சூழல்களில் என்னாகும் எனும் கவலையும் பெரிதாக இருக்கிறது.
Edited by Induja Raghunathan