+

100 ஆண்டுகளைக் கடந்து ‘பேஷ்... பேஷ்...’ - ரூ.641 கோடி டர்ன்ஓவர் செய்யும் ‘நரசுஸ் காபி’ ப்ராண்டின் கதை!

ஒரு பித்தளை காபி ஃபில்டரில், 3-4 ஸ்பூன் காபி பவுடரை போட்டுவிட்டு, அதில் சுடச்சுட நீரை ஊற்றிவிட்டி பொறுமையாக காத்திருந்து, அந்த நீர் காபித் தூளுடன் கலந்து, ஒவ்வொரு சொட்டாக கீழே உள்ள ஃபில்டரின் அடுக்கில் விழுந்துபோது வரும் அதன் நறுமணம் வீசாத தென்னிந்திய வீடுகளே இல்லை என்ற காலம் உண்டு. அப்படி ஃப்ரெஷ்ஷ

ஒரு பித்தளை காபி ஃபில்டரில், 3-4 ஸ்பூன் காபி பவுடரை போட்டு, அதில் சுடச்சுட நீரை ஊற்றிவிட்டி பொறுமையாக காத்திருந்தால், அந்த நீர் காபித் தூளுடன் கலந்து, ஒவ்வொரு சொட்டாக கீழே உள்ள ஃபில்டரின் அடுக்கில் விழும்போது வரும் நறுமணம் வீசாத தென்னிந்திய வீடுகளே இல்லை என்ற காலம் உண்டு. அப்படி ஃப்ரெஷ்ஷா, திக்காக கிடைக்கும் டிகாக்‌ஷனை, சூடாக வீட்டில் காய்ச்சிய பாலோடு சரியான அளவு கலந்து, கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அந்த காபியை குடித்தால்... ‘பேஷ்... பேஷ்... காபினா இதுதான் ஃபில்டர் காபி...’ என்று நிச்சயம் சொல்லத்தோன்றும்.

காபியை செய்வதே ஒரு கலையாகும். அதற்கு ஒரு ஒழுக்கம், பக்குவம் எல்லாம் தேவை. அதிலும், ஃபில்டர் காபி செய்ய ஒரு அதீத ஆர்வமும் வேண்டும், அது இன்றைய ஸ்விக்கி டெலிவரியில் காபி ஆர்டர் செய்யும் தலைமுறைக்கு தெரியாமலும் இருக்கலாம். இப்படி, பார்த்து, பார்த்து செய்யும் காபிக்கு ஒரு வரலாறு இருப்பது போல, காபித்தூள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது.

அப்படி, தமிழ்நாட்டின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றான சேலத்தைச் சேர்ந்த, பாரம்பரியமிக்க புகழ்பெற்ற காபி பிராண்டான 'நரசுஸ்' (Narasu's) நிறுவனத்தின் நூறாண்டுகால வரலாற்றை பற்றி இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஃபில்டர் காபித்தூள் உற்பத்தியில் கோலோச்சிய ‘நரசுஸ் காபி’, ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கி, இன்று பல தலைமுறைகளைக் கடந்து, தனது நூற்றாண்டை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஒரு நீண்ட கால வணிகத்தை உருவாக்குவதற்கும் ஒரு ஒழுக்கம், பக்குவம், காலத்தின் சோதனைகளைத் தாங்கி நிற்கும் உறுதியான அடித்தளம், பொறுமையாகக் கடினமாக உழைக்கும் மனப்பான்மை, என எல்லாம் அவசியமாகிறது. அதனால், நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில், நரசுஸ் காபியின் பாரம்பரியக் கதையை அரிய, சேலத்தில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகம், மற்றும் ஃபாக்டரிக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

1926-ல் வி.லஷ்மி நரசிம்மன் என்பவரால் சேலத்தில் தொடங்கப்பட்டதே ‘நரசுஸ் காபி’. அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம், இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. இந்த வளாகத்தில் தான், அதன் கார்ப்பரேட் அலுவலகம், காபி கொட்டைகளை வறுக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அரைக்கும் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த நூற்றாண்டு பழைமையான அதே கட்டிடத்தில் அமர்ந்திருக்கும் தற்போதைய தலைவர் சிவானந்தம் மற்றும் அவரின் மகன் ஸ்ருதீப்பை சந்தித்து நரசுஸ் ப்ராண்டின் கதை, அங்குள்ள ஆலையில் செயல்பாடுகள், ஊழியர்கள் வளர்ச்சி, என அனைத்தையும் நேரடியாக பார்த்து, தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

" align="center">Narasus building

1926-ல் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி திறந்துவைத்த நரசுஸ் காபி நிறுவன கட்டிடம்

பிரிட்டிஷர் காலத்தில் தொடங்கிய காபி கதை

பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1926 ஆம் ஆண்டில், வி.லட்சுமி நரசிம்மன் என்பவரால் ‘நரசுஸ் மான்யூஃபேக்ச்சரிங் கம்பெனியாக’ (Narasu's Manufacturing Company) தொடங்கப்பட்டதே ‘நரசுஸ் காபி.’ அனைவராலும் 'நரசு' என்று அழைக்கப்பட்ட லட்சுமி நரசிம்மன், தான் உருவாக்கிய நிறுவனத்திற்கு அந்தப் பெயரையே வைத்துவிட்டார். சேலம் அருகே தங்கியிருந்த பிரிட்டிஷர்கள், தினமும் காபி குடிக்க விழைந்து, லட்சுமி நரசிம்மனை நல்ல காபி சப்ளை செய்யக் கேட்டபோது தோன்றிய ஐடியாவே ‘நரசுஸ் காபி’ நிறுவனம் உருவாகக் காரணமானதாம்.

அந்த காலத்தில், காபி செய்வதே ஒரு பெரிய கலையாக இருந்தது. காபி கொட்டை விளையும் இடங்களிலிருந்து வாங்கி, அதை நன்கு வறுத்து, பின்னர் அரைத்து பொடி செய்து, அவ்வப்போது அதை ஃபில்டரில் ஊற்றி, புதிய டிகாஷனில் பாலை கலந்து காப்பி பருகுவதே வழக்கமாக இருந்தது. அதைபோல், ஆங்கிலேயர்களுக்கு சுவையாக, ஃப்ரெஷாக காபி செய்து தர, சேலத்தில் ஒரு சிறிய ஆலையை தொடங்கினார் லட்சுமி நாராயணன். அப்படி தொடங்கிய ஒரு சிறுதொழில், பின்னர் சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு காபி பொடி விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாக வளர்ந்தது நரசுஸ் காபி.

40 வருடங்களில் நரசுஸ் நன்கு வளர்ந்திருந்தாலும், நிறுவனர் லட்சுமி நரசிம்மனின் குடும்பத்தின் கவனம் சினிமாவின் பக்கம் திரும்பியதால், இந்த நிறுவனம் 1966ல் நீதிமன்ற ஏலத்திற்கு வந்தது. இதை ஆர்.பி. சாரதி (தற்போதைய தலைவர் சிவானந்தத்தின் தந்தை) தலைமையிலான ஒரு கூட்டாண்மை நிறுவனம் (Partnership firm) நரசுசை விலைக்கு வாங்கியது. நிறுவனத்தை மீட்டெடுத்து லாபகரமானதாக மாற்றும் பொறுப்பு ஆர்.பி.சாரதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாரதியின் மகன் சிவானந்தம், சிறுவயதிலிருந்தே தனது தந்தை, மற்றும் அவரது சகோதரர்கள் இந்நிறுவனத்தை நடத்தி வந்த விதத்தை பார்த்தே வளர்ந்துள்ளார். பள்ளிச் சிறுவனாக இருந்தபோதே, சிவானந்தம் தனது விடுமுறை நாட்களில் நரசுஸ் வளாகத்திற்குள் கழித்தார். ஃபாக்டரி அருகில் விளையாடுவதை எவ்வளவு ரசித்தாரோ, அதே அளவு தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக அவரே கூறுகிறார்.

“சிறுவயது முதலே எனக்கு காபி அறைக்கும் அந்த மெஷின்கள் மீது அதீத ஆர்வமுண்டு. அதன் செயல்பாடை உற்றுக் கவனித்துக்கொண்டிருப்பேன். இயந்திரங்கள் மீதான எனது ஆர்வமே, என்னை இதே காபி உற்பத்தி தொழிலுக்குள் சீக்கிரமே அழைத்துவந்தது,” என்றார் சிவானந்தம்.

இந்த ஆர்வம் பல ஆண்டுகளாக வளர்ந்து, நவீன இயந்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஜெர்மனி உட்பட உலகெங்கிலும் உள்ள பல உற்பத்தி மையங்களுக்கு அவரை அழைத்துச் சென்றது. கல்லூரி முடித்தவுடனே தன் குடும்ப நிறுவன தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக கூறும் சிவானந்தம்,

”1983-ல் நான் ஜெர்மனி சென்று, அங்குள்ள நவீன இயந்திரங்களின் நுட்பங்களை உள்வாங்கி, பேக்கேஜிங் முறைகளை கற்றுவந்து, 1994ஆம் ஆண்டில் முழுமையான Form-Fill-Seal (FFS) தானியங்கி பேக்கிங் அமைப்பை எங்களது சேலம் ஆலையில் வெற்றிகரமாக செயல்படுத்தினோம். மேலும், நிறுவனத்தின் காபி க்யூரிங் (Coffee Curing) வசதியையும் வடிவமைத்து நிறுவமுடிந்தது,” என்றார்.

பின்னர், ஆலையில் உள்ள இயந்திரங்களில் சில மாற்றங்களைச் செய்து, நிறுவனத்திற்கு எது சிறப்பாகச் செயல்படுமோ அதை, அதாவது நரசுஸ் காபி தூளின் சுவையையும் வாசனையையும் எது தக்கவைக்கிறதோ, அதற்கு ஏற்றவாறு ரெடி செய்ய பல மாற்றங்களை கொண்டுவந்தார் சிவானந்தம்.

1966-ல் இவர்களிடம் நிர்வாகம் வந்தவுடன், சேலத்தை தாண்டி சென்னை, கடலூர், கும்பகோணம், காரைக்குடி, என தமிழ்நாடு முழுதும், மற்றும் புதுச்சேரியில் தங்களது சொந்த காபி கடையை திறந்தனர் நரசுஸ். அங்கே, ஃப்ரெஷ்ஷாக ஆலையிலிருந்து வரும் காபி கொட்டைகள், வறுத்து, அரைத்துத்தரப்படும். சுடச்சுட அந்த காபி பவுடரை வாங்கிச் செல்ல, மக்கள் க்யூவில் நின்ற காலமும் இருந்துள்ளது.

Narasus branch

மாட்டு வண்டியில் மார்க்கெட்டிங்

நரசுசின் சிறப்பே, அதன் சொந்த ஸ்டோர் மாடல் தான். 1966 முதல், நரசுஸ் சேலம் ஆலையிலிருந்து காபிக் கொட்டைகளை பிரித்து, காயவைத்து, தங்களது சொந்த சில்லறை விற்பனைக் கிளைகள் மற்றும் சேலத்தில் உள்ள பிற கடைகளுக்கு காபி கொட்டைகளை வழங்கி வந்தன. அப்போது அந்த காபி கொட்டைகள் கோணிப்பைகளில் நிரப்பி, அதை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு சந்தைக்குச் சென்றதை நினைவுகூர்ந்தார் சிவானந்தம்.

“காபி கொட்டைகளை பாதுகாப்பாக, மழை, தூசி மற்றும் வெயிலில் இருந்து பாதுகாத்து, வில்லு வண்டியில் (ஒரு வளைந்த விதானத்தால் மூடப்பட்ட மாட்டு வண்டி) எடுத்துச் செல்வோம். அதன் பிறகு, சைக்கிள் மற்றும் ட்ரைசைக்கிள்களுக்கு மாறினோம். அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், அம்பாசிடர் கார் மற்றும் வேன்கள், என எங்களது டெலிவரி வாகனங்கள் காலத்துக்கேற்ப மாறியது,” என்றார்

அம்பாசிடர் காரை பின்புறம் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான வேனாக மாற்றினோம். சேலத்தின் சிறிய கிராமங்கள் வழியாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தபோது, அது நரசுஸ்-க்கான நடமாடும் பிராண்டிங்காகவும் செயல்பட்டதாக பகிர்ந்தார் சிவானந்தம்.

1987 ஆம் ஆண்டில், காபியுடன் சிக்கரியைக் கலக்க நிறுவனம் நினைத்தபோது, கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. ஆனால், நிறுவனம் தனது முடிவில் உறுதியாக நின்று, 'உதயம்' (Udhayam) என்ற பெயரில் காபி-சிக்கரி கலவைகளை அறிமுகப்படுத்தியது.

சிக்கரி செடியின் ஆணிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சிக்கரி, காபிக்கு ஒரு நல்ல அமைப்பு, அடர்த்தி மற்றும் நட்டு (nutty) சுவையைத் தருவதற்காக சேர்க்கப்படுகிறது, என்று விளக்கிய சிவானந்தம்,

"எங்களைப் பொறுத்தவரை, எங்கள் மனநிலையை விடச் சந்தையே மிகவும் முக்கியமானதாக கருதினோம். வாடிக்கையாளர்கள் சிக்கரி காபிக்கு மாறிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் விரும்புவதை நாங்கள் கொடுக்க வேண்டியிருந்தது," என்றார்.

இறுதியில், நீங்கள் எந்த நிறம் மற்றும் சுவையை விரும்புகிறீர்கள், உங்கள் பானம் எவ்வளவு திக்காக அல்லது லைட்டாக இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்தது இது, என்கிறார் நீண்ட காலமாக ஃபில்டர் காபி குடித்து வந்து, சமீபத்தில் பிளாக் காபிக்கு மாறிய சிவானந்தம்.

NArasus Nagarkoil

1966-ல் திறக்கப்பட்ட நரசுசின் நாகார்கோவில் ப்ரான்ச்

புதிய தலைமை; பல சவால்கள் - மாபெரும் வளர்ச்சி

20 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்திற்கான அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொண்ட பிறகு, நரசுஸ் நிறுவன பொறுப்பை ஏற்கத் தயாரானார் சிவானந்தம். 2006ல், அவர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றதுபற்றி பகிர்கையில்,

"ஒரு தடுப்பணை திறக்கப்பட்டது போல உணர்ந்தேன். 80 ஆண்டுகால அமைப்பின் குறைபாடுகளைச் சரிசெய்யவும், செயல்பாடுகளைச் சீரமைக்கவும், வணிகத்தை விரிவுபடுத்தவும் உண்மையான மாற்றங்களைக் கொண்டுவர எனக்குச் சுதந்திரம் கிடைத்தது போல் உணர்ந்தேன்,” என்றார்.

அதுவரை விரிவாக்கத்தை, புதிய முயற்சிகளை மேற்காள்ளாத நிர்வாகத்தில், பல விஷயங்களை மாற்றினார் சிவானந்தம். அவர் எப்போதுமே பயணத்திலே இருப்பார், வெவ்வேறு கிளைகள் மற்றும் சந்தைகளுக்குச் சென்று, நேரடியாக மக்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் உடல் மொழியைக் கவனித்து, கருத்துக்களை சேகரிப்பாராம்.

அதே போல், அவர் செல்லும் கடையில், காபி பொடியைச் சேமித்து வைக்கும் டிரமின் மூடியை அவர் திறந்து பார்த்து, அங்குள்ள சேல்ஸ் அளவை தெரிந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் சிவானந்தம். கடையில் உள்ள ட்ரம் காலியாகவோ அல்லது கிட்டத்தட்ட காலியாக இருந்தால், காபி வேகமாக விற்பனையாகிறது என்பதைக் குறிக்கிறது, உடனே அந்த இடத்திலேயே அவர் ஊழியர்களுக்கு அதற்கான வெகுமதியையும் வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அதேபோல், காபி சந்தையில் உருவாகும் ஒவ்வொரு புதிய போட்டி, மாற்றங்களுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுத்து, புதிய முயற்சி எடுப்பதில் சிவானந்தம் அஞ்சியதேயில்லை. அதற்கு அவருக்கு சரியான பலனும் கிட்டியுள்ளது. உதாரணமாக, இன்ஸ்டன்ட் காபியில் (Instant Coffee) அவர் செய்த பந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பாரம்பரிய ஃபில்டர் காபியின் அசல் சுவையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்த நரசுஸ் பிராண்ட், நெஸ்கபே, ப்ரூ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இன்ஸ்டன்ட் காபி பிரிவில் நுழந்தபோது, கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இந்த மாபெரும் பிராண்டுகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ராண்ட் எப்படி போட்டியிடப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் நரசுஸ், "எங்களால் ஏன் முடியாது?" என்று, 2002 ஆம் ஆண்டில் அந்தப் போட்டிக் களத்தில் இறங்கியது. உடனடியாக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகள் இரண்டிலும் தனக்கான கதவுகளைத் திறந்து கொண்டது.

2000-மாவது ஆண்டின் முற்பகுதியில், மக்களின் வாழ்க்கை முறை மாறியதால், இந்தியாவில் இன்ஸ்டன்ட் காபி பிரபலமடையத் தொடங்கியது.

"இது தயாரிப்பதற்கு எளிதாகவும் வசதியாகவும் இருந்தது. அதிக நேரமில்லாத இளவயது வேலைக்குச் செல்லும் தம்பதிகள் இதனை விரும்பினர். எனவே, நாங்கள் இன்ஸ்டன்ட் காபி சந்தைக்குள் நுழையவில்லை என்றால், எங்களுடைய சந்தைப் பங்கு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன," என்கிறார் சிவானந்தம்.

இன்ஸ்டன்ட் ப்ரிவில் நுழைய ஒரு பிரத்யேக உற்பத்தி அமைப்பை தொடங்க, முழு வீச்சில் செயல்பட சுமார் ஒரு வருடம் ஆனது. அந்த நேரத்தில், குழுவினர் ஒவ்வொரு இரவும் வெறும் 3 மணிநேரத் தூக்கத்தில்தான் வாழ்ந்தார்கள். எல்லாவற்றையும் சரியாகச் செய்து, ஃபில்டர் காபியின் தரத்தை இன்ஸ்டன்ட் வகைக்கும் கொண்டு வர முயற்சி எடுத்த கதையை விவரித்தார் சிவானந்தம்.

"இன்ஸ்டன்ட் காபியின் முதல் மாதிரி (Sample) வெளிவந்தபோது, நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். அது வறுக்கப்பட்ட மற்றும் அரைக்கப்பட்ட (Roasted-and-ground - R&G) காபியைப் போலவே மிகவும் கருமை நிறத்தில் இருந்தது. ஆனால், அதுவே சரியான ருசியில் இருந்தது, வாடிக்கையாளர்களுக்கும் பிடித்துப் போனது. அதனால், இன்று வரை, எங்களின் அந்த முதல் இன்ஸ்டன்ட் காபி தயாரிப்பின் விற்பனை நன்றாகவே இருக்கிறது," என்கிறார் அவர்.
Narasus Sivanantham

நரசுஸ் காபி ஆலையில் தனது மகன் ஸ்ருதீப் உடன் சிவானந்தம்

சிக்கரி செடியின் ஆணிவேரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சிக்கரி, காபிக்கு ஒரு நல்ல அமைப்பு, அடர்த்தி மற்றும் நட்டு (nutty) சுவையைத் தருவதற்காக சேர்க்கப்படுகிறது.

"எங்களைப் பொறுத்தவரை, எங்கள் மனநிலையை விடச் சந்தையே மிகவும் முக்கியமானது. வாடிக்கையாளர்கள் சிக்கரி காபிக்கு மாறிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் விரும்புவதை நாங்கள் கொடுக்க வேண்டியிருந்தது,” என்றார் சிவானந்தம்.

சிவானாந்தத்தின் இந்த தொடர் முயற்சி, சந்தையின் தேவைக்கேற்ப புதுமைகளை புகுத்தும் சாமர்த்தியம், இவையெல்லாம், நரசுசின் நிறுவன வருவாய் வளர்ச்சியில் பிரதிபலித்தது.

நிதியாண்டு 2005ல் ரூ.45 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய், மூன்று மடங்குக்கு மேல் உயர்த்தி, 2008ல் ரூ.140 கோடியாக ஆனது. அதோடு, நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிகமான சில்லறை விற்பனை நிலையங்கள் (Retail Stores) விரிவாக்கம் செய்வதற்கும் அவர் முன்னிலை வகித்தார்.

காபி காய்ச்சுவது என்பது ஒரு உள்ளுணர்வு சார்ந்த விஷயம் என்று நம்பும் சிவானந்தம், வணிகங்களைப் போலவே, இந்த அம்சமே பல ஆண்டுகளில் பல்வேறு முடிவுகளில் நரசுஸ் தனது உள்ளுணர்வைப் பின்பற்றியதால், நிறுவனத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவியுள்ளதாக பகிர்ந்தார்.

மாறிவரும் மக்களின் ருசியும்; வலுவான வளர்ச்சியும்

2011ல் சிவானந்தத்தின் மகன் ஸ்ருதீப் (மூன்றாம் தலைமுறை) நரசுஸ் வணிகத்தில் இணைந்தபோது, உற்பத்தித்திறனை அதிகரிப்பதிலும் அதே நேரத்தில் செலவுகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி, உற்பத்தியில் புதிய முறைகள், ஆட்டோமேஷன் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) கொண்டு வந்தார்.

நரசுஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக ஸ்ருதீப், லட்சியத் திட்டங்களை வைத்திருந்தாலும், அவையனைத்தும் நிறுவனத்தின் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகும் வகையிலேயே இருக்கும், என்று கூறுகிறார். கல்லூரியை முடித்த கையோடு தனது 21 வயதில் குடும்பத் தொழிலில் நுழைந்த ஸ்ருதீப்,

"பாரம்பரியமாக நிறுவனம் செயல்பட்ட விதத்திற்கும், இப்போதைய தலைமுறையின் புதிய யோசனைகளை செயல்படுத்துவதற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாம் நம்மை அவர்களின் இடத்தில் வைத்து, அவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முயன்றால் விஷயம் மிகவும் எளிதாகிவிடும். நாம் அப்படிச் செய்து, அதற்கேற்ப நமது யோசனைகளை முன்வைத்தால், பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்படும். இதன் மூலம், ஊழியர்களுக்குகும் எந்தத் தடங்கலும் இல்லாமல் இந்த மாற்றம் சுமுகமாக நடக்கும்," என்று தெளிவாக பேசுகிறார் ஸ்ருதீப்.

இறுதியில், நரசுஸ் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது என்பது ஒரு கூட்டு முயற்சிதான், என்றும் அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டுகளில், நரசுஸ் எந்தவொரு வெளிப்புற நிதியுதவியையும் நம்பாமல் ஒரு வலுவான நிலைக்கு உயர்ந்துள்ளது. நிறுவனம் தொடர்ந்து பூட்ஸ்ட்ராப் (bootstrapped) நிலையில் இயங்கி, தனது மூலதனச் செலவுகளுக்காக உள் வருவாயை மட்டுமே நம்பியுள்ளது. இன்றும் அதையே தொடர நினைக்கிறார் ஸ்ருதீப்.

இன்று, நரசுஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 81 ஸ்டோர்கள் மற்றும் பெங்களூருவில் ஒரு கடையைக் கொண்ட சில்லறை விற்பனை நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இது தெற்குப் பிராந்தியத்தில் பொதுவான கடைகள் மூலமாகவும் (42 விநியோகஸ்தர்கள் வழியாக), அதன் சொந்த இணையதளம், டி-மார்ட் போன்ற நவீன சில்லறை விற்பனை வடிவங்கள், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள், இன்ஸ்டாமார்ட் மற்றும் பிளிங்கிட் போன்ற குயிக்-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறது. இது தவிர உணவகங்கள் மற்றும் கஃபேக்களுக்கும் சப்ளை செய்வதாக பகிர்ந்தார் ஸ்ருதீப்.

"தமிழ்நாட்டிற்கு வெளியே விற்பனை என்று வரும்போது, டெல்லி மற்றும் மும்பை போன்ற சந்தைகளில் குவிக் காமர்ஸ் மற்றும் இ-காமர்ஸ் விற்பனை அதிகரித்துள்ளது," என்று கூறும் நிர்வாக இயக்குநர் எஸ்.ஸ்ருதீப், இந்த பிரிவில் அவர்கள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருப்பதாக கூறினார்.
Narasus Srudeep

காபி ஆலையில் நரசுஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ருதீப்

இன்று, நிறுவனம் இரண்டு உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது: ஒன்று சேலத்திலும், மற்றொன்று ஏற்றுமதிக்காக அருகிலுள்ள வீராணம் என்ற கிராமத்திலும் உள்ளது. சிக்மகளூரு, குஷால்நகர், வயநாடு, ஏற்காடு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் அரக்கு ஆகிய தென்னிந்தியாவின் முக்கிய காபி வளரும் பகுதிகளில் இருந்து காபி கொட்டைகளை கொள்முதல் செய்கிறது. வியட்நாம், ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள்.

இப்போது Third Wave மற்றும் Blue Tokai போன்ற கஃபே வணிகத்தில் பல புதிய நிறுவனங்கள் நுழைந்துள்ளன, அவை காபியை ஒரு புதிய பாதையில் நிலைநிறுத்துவது பற்றி ஸ்ருதீபிடம் கேட்டதற்கு,

”இதையெல்லாம் கண்டு நாங்கள் கலங்கவில்லை. சொல்லப்போனால், புதிய நிறுவனங்கள் சந்தையில் நுழைவது விஷயங்களை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. கஃபே கலாச்சாரம் சந்தையின் அளவையும் காபி நுகர்வையும் அதிகரிக்க உதவியுள்ளது, மேலும், இது தரமான காபியை வழங்கும் அனைவருக்கும் பயனளிக்கிறது,” என்று கூறுகிறார்.

100 ஆண்டுகளாக தொடரும் பயணமும்...

ஆழமாக வேரூன்றிய காபி கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்கத் தடம் பதித்த நரசுஸ், வரும் ஆண்டுகளில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் தனது விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை இருப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி சந்தைகளை நோக்க இருக்கிறது.

”இன்று நரசுஸ் தமிழ்நாட்டில் காபி சந்தையில் முக்கிய இடத்தை உள்ளது. 40 சதவீத காபி சந்தை அளவுடன், லாபம் ஈட்டும், நிலையான வளர்ச்சியுடன் வளர்ந்துவரும் நிறுவனமாக உள்ளது. நிதியாண்டு 2025-26-ல் நிறுவன டர்ன் ஓவர் ரூ.641கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வருவாயை எட்டுவதை நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது, என்கிறார் ஸ்ருதீப்.

எண்பதுகளில் 'பேஷ்! பேஷ்...! ஃபில்டர் காபி...' என்ற விளம்பரம், அன்றைய காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுடன் ஒரு உணர்வுபூர்வ தொடர்பை ஏற்படுத்தியது. அதேபோல், தற்போது GenZ தலைமுறையை இலக்காகக் கொண்டு, ஒரு மல்டி-மீடியா பிரச்சாரத்தை (multi-media campaign) விளம்பரப்படுத்த இருப்பதாக கூறினார். அன்றைய விளம்பரப் பிரச்சாரத்தைப் போலவே, இதுவும் அனைவராலும் நினைவுகூரும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

narasus ad

நரசுஸ் காபியின் பழைய விளம்பரம்

நரசுஸ் நிறுவனம் இன்றளவும், பிரிட்டிஷர் காலத்தில் வாங்கிய பல இயந்திரங்களை, நன்கு பராமரித்து இன்றும் செயல்பாட்டில் வைத்துள்ளதை பார்க்கவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அன்று இருந்த அதே பிரிண்டிங் மெஷின்களைக் கொண்டு, இன்றும் காபி நிரப்பும் கவர்கள், அதன் மேலுள்ள பிரிண்டிங் என அனைத்தையும் இயக்குவது அவர்களின் பாரம்பரிய பிணைப்பை வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட நூறாண்டுகள் பழைமையான இந்த இயந்திரங்களை பராமரித்து, அதில் கோளாறு ஏற்பட்டால், சரி செய்ய நரசுஸ் ஆலையின் உள்ளேயே லேத் வொர்க்‌ஷாப்பும், அதற்கான ஊழியர்களையும் கொண்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் வாழ்நாளில் 100 ஆண்டுகள் என்பது ஒரு மிகப்பெரிய மைல்கல் ஆகும். ஆனால், நரசுஸ் நிறுவனம் தனது வெற்றிகளில் திருப்தியடைந்து அப்படியே இருந்துவிடாமல், மேலும் பல சந்தைகள், பல நுகர்வோர்கள், பல தயாரிப்புகள் மற்றும் காபியில் பல புதுமைகள் செய்து கொண்டிருந்தாலும், ‘இது வெறும் ஆரம்பம் தான்...’ என்று கூறுவது, அவர்களின் அடுத்த பெரிய இலக்குக்கான தொடக்க ஓட்டம் தான் இது என்று எனக்கு தெளிவாகப் புரிந்தது.

facebook twitter