+

Meesho-வின் இழப்பு பாதியாகக் குறைய, வருவாய் 48% உயர்வு!

2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மீஷோவின் நிதிச் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் நிகர இழப்பு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்ததுடன், வருவாய் 48.3% உயர்ந்துள்ளது. இ-காமர்ஸ் சந்தை தளமான மீஷோ, 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண

2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மீஷோவின் நிதிச் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் நிகர இழப்பு கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்ததுடன், வருவாய் 48.3% உயர்ந்துள்ளது.

இ-காமர்ஸ் சந்தை தளமான மீஷோ, 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.132.8 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த இழப்பு ரூ.289.3 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,713 கோடியாக உயர்ந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 48.3% வளர்ச்சியாகும். ஆர்டர்கள் ரத்துக் குறைந்ததும் டெலிவரி நிறைவு விகிதம் மேம்பட்டதுமே வருவாய் வளர்ச்சிக்குக் காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீஷோவின் நிகரப் பொருள் மதிப்பு (NMV) ஆண்டுக்கு ஆண்டு 34% உயர்ந்து ரூ.11,614 கோடியாக அதிகரித்துள்ளது. தளத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பயனர்கள் மற்றும் மேம்பட்ட பயனர் ஈடுபாடு ஆகியவை இதற்குக் காரணமாக அமைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

meesho

ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிவர்த்தனை செய்யும் பயனர்களின் (ATUs) எண்ணிக்கை 29% உயர்ந்து 27.4 கோடியாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், ஒவ்வொரு பயனரும் ஆண்டுக்கு மேற்கொள்ளும் கொள்முதல் பரிவர்த்தனைகளின் சராசரி எண்ணிக்கை 10.3 ஆக உயர்ந்துள்ளது.

இந்த காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ஆர்டர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு 29% உயர்ந்து 72.5 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், தனது சந்தைத் தளத்தின் விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீஷோ தெரிவித்துள்ளது.

மீஷோவின் தலைமை நிதி அதிகாரி தீரேஷ் பன்சால் கூறுகையில்,

“இந்த காலாண்டில், பங்குச்சந்தைப் பட்டியலுக்குப் பிறகு எங்களின் பங்களிப்பு வரம்பும், சந்தைத் தளத்தின் சரிசெய்யப்பட்ட EBITDA-வும் மிகச் சிறந்த நிலையில் இருந்தன. சில மாநிலங்களில் எரிபொருள் செலவுகள் அதிகரித்ததுடன், குறைந்தபட்ச ஊதிய உயர்வுகளும் இருந்தபோதிலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் தளத்தில் மேற்கொண்ட கட்டமைப்பு ரீதியான மேம்பாடுகளை இது பிரதிபலிக்கிறது,” என்றார்.

செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்துப் பேசிய நிறுவனம், தயாரிப்புகளைத் தேடுதல், விற்பனையாளர்களின் வளர்ச்சி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தனது வணிகத்தின் ஒவ்வொரு நிலையிலும் AI அடிப்படைப் பங்காற்றத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தது. முதல் காலாண்டில் மட்டும் மீஷோ சுமார் 72.5 கோடி ஆர்டர்களைச் செயல்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு வினாடிக்கு சராசரியாக 90-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

“AI தொடர்ந்து புதுமைக்கான செலவைக் குறைத்து வரும் நிலையில், மூலதனத்தை ஒழுங்குடன் பயன்படுத்தியபடி, சிறந்த தயாரிப்புகளை வேகமாக உருவாக்கவும், நீண்டகால மதிப்பை உருவாக்கவும் இது எங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று CFO தெரிவித்தார்.

எதிர்கால வளர்ச்சி குறித்து மீஷோ கூறுகையில், தற்போதைய பொருளாதாரச் சூழலை தொடர்ந்து கவனமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தது. இந்த காலாண்டில் கச்சா எண்ணெய் விலைகள் மிதமான நிலையில் இருந்ததால், சில்லறை எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை. இதன் நேரடி தாக்கம் தனது வணிகத்தில் குறைவாகவே இருப்பதாகவும், தளத்தில் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

facebook twitter