ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் சொல்யுஷன்களை வழங்கும் 'ரெட் ஹாட்' நிறுவனத்துக்கும் அதன் தாய் நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்துக்கும் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் ஐந்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
நாட்டில் ஓபன் சோர்ஸ் கட்டமைப்புகளுக்கு ஆழமான வரவேற்பும், பெருகிவரும் திறமையான மனிதவளமும் இதற்குக் காரணமாக உள்ளன என்று நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, ரெட் ஹாட்டின் உலகளாவிய உத்தியில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. முக்கியமான சந்தையாக மட்டுமல்லாமல், பொறியியல் திறமையின் மையமாகவும் இந்தியா விளங்குகிறது என்று ரெட் ஹாட்டின் இந்தியா மற்றும் தெற்காசியப் பிரிவின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான நவ்தேஜ் சிங் பால் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு வணிகமாக இருந்தது, தற்போது சிறப்பாக வளர்ந்து, உலகளவில் எங்களது மிக வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இந்தியா திறந்த மூல மென்பொருளை அதன் அடிப்படையிலேயே ஏற்றுக்கொண்டிருப்பதுதான்.
“ரெட் ஹாட் மற்றும் ஐபிஎம் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் ஐந்து சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று கூறுவேன்,” என்று பால் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் குறையக்கூடும் என்ற கவலைகள் குறித்து பேசிய பால், இந்தத் தொழில்நுட்பம் ஆண்டுதோறும் 2 முதல் 5 சதவீதம் வரை செயல்திறன் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்றாலும், இந்தியாவின் அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் சாத்தியமான வேலைவாய்ப்பு அபாயங்களை ஈடுசெய்யும், என்று தெரிவித்தார்.
“10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும், என எதிர்பார்க்கப்படும் பெயரளவிலான வளர்ச்சி விகிதம் கொண்ட இந்தியா போன்ற அதிக வளர்ச்சி சந்தையில், உற்பத்தித்திறன் மூலம் கிடைக்கும் பலன்களை உள்வாங்கிக்கொண்டு, அதே நேரத்தில் எங்களது வேலைவாய்ப்பு தளத்தையும் விரிவுபடுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் வேலைப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது மற்றும் மேலாண்மை சார்ந்த பணிகள் குறைந்து, மனித அறிவையும் இயந்திர நுண்ணறிவையும் இணைக்கும் நிபுணத்துவம் மற்றும் முடிவெடுக்கும் திறன் சார்ந்த பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும், என்று அவர் கூறினார்.
சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 2019ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ரெட் ஹாட் நிறுவனத்துக்கு டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூரில் அலுவலகங்கள் உள்ளன.
இந்தியாவின் பொது தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஓபன் சோர்ஸின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பால், தனியுரிமை கொண்ட தொழில்நுட்பக் கட்டமைப்புகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் திறந்த கட்டமைப்பு கொள்கைகளில் அதிக முதலீடு செய்து வருவதாகக் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் நிலையில், யுபிஐ, ஆதார் மற்றும் பாஸ்போர்ட் அமைப்பு உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் பொது கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்துவதோடு, அவற்றை மேலும் வட்டார மொழிகளுக்கு ஏற்றதாகவும் பயனர்களுக்கு எளிதானதாகவும் மாற்றுவதிலேயே அரசின் கவனம் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் துணை ராணுவத் துறைகளில் ‘இந்தியாவில் உருவாக்கப்பட்ட’ இறையாண்மை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகள் உருவாகும் என்றும் அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.
உலகளாவிய தொழில்துறையுடன் இந்தியாவின் தற்போதைய தொழில்நுட்பச் சூழலை ஒப்பிட்டுப் பேசிய பால், உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், தன்னாட்சி கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார்.
உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத் திட்டங்களில் பங்கேற்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு தங்களது செயல்முறைகள் மற்றும் அமைப்புகளையும் மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த தொழில்நுட்பங்களின் சக்தியை உலகில் வேறு யாரையும் விட சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் இந்திய நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகளாவிய நிறுவனங்களும் புதிய செயல்முறைகள் மற்றும் செயல்திட்டங்களைச் சோதிக்கும் தளமாக இந்தியாவைப் பார்க்கும். இதன் மூலம் இந்தியா உலகளாவிய புதுமை மையமாக உருவெடுக்கும்,” என்றார்.
எனினும், செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் சோதனை நிலையில் இருந்து முழுமையான உற்பத்தி நிலைக்கு மாறுவதில் தற்போது பல தடைகள் இருப்பதாக பால் சுட்டிக்காட்டினார்.
தற்போது, மொத்த AI சோதனைத் திட்டங்களில் வெறும் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே உற்பத்தி நிலையை எட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
“உற்பத்தி அமைப்புகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் தருணத்தில், அந்த பயன்பாடு முழுமையான நம்பகத்தன்மையுடனும் முழுக் கட்டுப்பாட்டுடனும் இயங்க வேண்டும். ஆனால், அனைவரும் தங்களது முழுமையான DevSecOps மேம்பாட்டு செயல்முறையைப் பற்றி முழுமையாகச் சிந்தித்திருக்கவில்லை,” என்று பால் விளக்கினார்.
AI பயன்பாடுகளுக்கான அதிகமான கணிப்பு செலவு, திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் நிறுவன மாற்றங்களை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியவையும் முக்கிய தடைகளாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஓராண்டில், செயற்கை நுண்ணறிவுக்கான செலவுகளை நடைமுறைச் செலவாக (Opex) கருதுவதா அல்லது மூலதனச் செலவாக (Capex) கருதுவதா என்பது குறித்து நிறுவனங்கள் அதிகளவில் முடிவெடுக்க வேண்டிய நிலையை எதிர்கொள்ளும் என்றும் பால் கணித்தார்.