+

தேர்வுச் சீர்திருத்தங்கள் குழுத் தலைவராக நந்தன் நிலேகனி நியமனம்- பிரதமர் மோடி அறிவிப்பு!

வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தேர்வு முறையை வினாத்தாள் கசிவில்லாததாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்

வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தேர்வு முறையை வினாத்தாள் கசிவில்லாததாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படும், என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்றும், தேர்வு முறை மீது நம்பகத்தன்மையை உறுதி செய்வதுடன், தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையையும் ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியில் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் 36 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த மறுநாளே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்யும் இந்தக் குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற உள்ளனர்.

நந்தன் நிலேகனியுடன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் எஸ். சோமநாத், உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் தேகா, ஐஐடி சென்னை இயக்குநர் வி. காமகோடி, முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கர்வால் மற்றும் தளவாட நிபுணர் அமித் லால் மீனா ஆகியோர் குழுவில் இடம்பெறுகின்றனர்.
Infosys Nandan

ஆதார் திட்டத்தின் வடிவமைப்பாளராகவும், இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சூழலை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவராகவும் நந்தன் நிலேகனி திகழ்கிறார்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

“மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக வலுவான சட்டத்தை கொண்டுவரும் வகையில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும்," அவர் கூறினார்.

“ஆனால் நாம் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதையும், தொழில்நுட்பம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக, உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

“இது தேர்வுச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும். அதன் அறிக்கை கிடைத்தவுடன், எதிர்காலத் தேர்வு முறைகள் நம்பகமானதாக இருப்பதை உறுதி செய்ய அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

வினாத்தாள் கசிவைத் தடுக்கும் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில், திங்கள்கிழமை மக்களவையில் மசோதா ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. பொது தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) திருத்த மசோதா, 2026-ன் கீழ், வினாத்தாள் கசிவு வழக்குகளுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதுடன், விசாரணைகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் கடுமையான தண்டனை விதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. வினாத்தாள் கசிவு தொடர்பான திட்டமிட்ட குற்றங்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்றது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், NEET-UG 2026 வினாத்தாள் கசிவு குறித்து பொறுப்பேற்க வேண்டும், CBSE-யின் திரையில் மதிப்பீடு செய்யும் முறையில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன், பொது தேர்வுகளை நடத்தும் முறையில் விரிவான சீர்திருத்தங்களையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது. ஜூலை 18-ஆம் தேதி, போலீஸார் அவரை வலுக்கட்டாயமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றினர். இது மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் பரவலான கோபத்தை ஏற்படுத்தியது.

ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியும் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டனர்.

மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சனிக்கிழமை CJP மற்றும் அரசு இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, CJP உடனடியாக தனது போராட்டத்தை வாபஸ் பெற்றது.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு “கண்ணியமான” இழப்பீடு வழங்கவும், டெல்லி மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) திரும்பப் பெறவும் அரசு ஒப்புக்கொண்டது.

தகவல் உதவி: பிடிஐ

facebook twitter