
இந்தியாவின் மறைமுக வரியான ஜிஎஸ்டி, செப்டம்பர் 22 முதல் ஒரு பெரிய மாற்றத்தை காணத் தயாராக உள்ளது. ஜிஎஸ்டி 2.0-வில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரி அடுக்குகளில் 12% மற்றும் 28% அடுக்குகளை நீக்கி 5%, 18% என இரண்டு அடுக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட அதிரடியாக அநாயவசியமான பொருட்களுக்கான வரியை 40% ஆக உயர்த்தி அதிரடி காட்டி இருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
காற்றூட்டப்பட்ட பானங்கள், புகையிலை பொருட்கள் போன்ற ஆடம்பர மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்காகவே பிரத்தியேகமாக இந்த வரி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிகரெட்டுகள் 40% வரி அடுக்கில் வைக்கப்பட்டிருந்தாலும், மற்ற காரணிகளும் இதில் பங்கு வகிப்பதால் அவற்றின் விலைகள் உடனடியாக உயராது என்று தெரிகிறது. பான் மசாலா, குட்கா மற்றும் மெல்லும் புகையிலை போன்ற பொருட்களுக்கு, நிலுவையில் உள்ள தொழில் கடன்கள் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்படாததால், அதிக வரி விகிதம் பிறகுதான் நடைமுறைக்கு வரும்.
40% ஜிஎஸ்டி விதிக்கப்படும் பொருட்களின் முழு பட்டியல்:
புகையிலை மற்றும் பான் மசாலா (பாவப் பொருட்கள்)
- பான் மசாலா
- குட்கா
- மெல்லும் புகையிலை
- பதப்படுத்தப்படாத புகையிலை மற்றும் புகையிலை கழிவுகள் (இலைகள் தவிர)
- சிகரெட்டுகள்
- சிகார், செரூட், சிகாரிலோஸ் மற்றும் அதைப் போன்ற மாற்றுகள்
காற்றூட்டப்பட்ட மற்றும் சர்க்கரை பானங்கள்
- கார்பனேட்டட் பானங்கள்
- சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள்
- காஃபின் கொண்ட கார்பனேட்டட் பானங்கள்
ஆடம்பர கார்கள்
- 1200 சிசி-க்கு மேல் என்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் கார்கள்
- 1500 சிசி-க்கு மேல் என்ஜின் திறன் கொண்ட டீசல் கார்கள்
உயர்தர மோட்டார் சைக்கிள்கள்
- 350 சிசி-க்கு மேல் என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்
சூப்பர்-ஆடம்பர கடல் மற்றும் விமான போக்குவரத்து சாதனங்கள்
- படகு (Yachts)
- தனிப்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட
பிற ஆடம்பர பொருட்கள்
- ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் சேவைகள்
- ரிவால்வர்கள் மற்றும் பிஸ்டல்கள்
இந்த பொருட்கள் அனைத்திற்கும் ஏற்கனவே இருந்த 28% ஜிஎஸ்டி வரியை 12% மேலும் உயர்த்தி 40%ஆக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதுவரை 12% வரி விதிக்கப்பட்ட அகர்பத்தி மற்றும் 2,500 ரூபாய்க்கு மேலான ஆடைகளுக்கான வரி விகிதம் 6% உயர்த்தி 18%ஆக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை குறையப் போகும் பொருட்கள் எவை?