
பல தசாப்தங்களாக, தாரு பழங்குடியினப் பெண்கள் தங்களது கிராமங்களின் எல்லைகளுக்கு அப்பால் அரிதாகவே துணிந்து சென்ற நிலையில், ஆர்த்தி ராணாவின் துணிகர முயற்சி, 10,000 தாரு பெண்களை கைத்தறி மற்றும் பாரம்பரிய கைவினைகளில் ஈடுப்படுத்தி அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளது.
அதற்காக, அவர் 2016 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அரசால் "ராணி லட்சுமி பாய் துணிச்சல்" விருதும், 2020 ஆம் ஆண்டிற்கான பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான "நாரி சக்தி புரஸ்கார்" விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பல தசாப்தக் கட்டுப்பாடுகளிலிருந்து வெளிவந்த ராணா!
மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒரு தாரு பழங்குடியினப் பெண் அவளது வாழ்நாள் முழுவதையும் அவரது கிராமத்தைத் தாண்டியொரு உலகத்தைப் பார்க்காமலே கழித்திருப்பார். அவளுக்கு 11 அல்லது 12 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, மீதமுள்ள வாழ்க்கையை சமையலறையிலோ அல்லது வயல்களிலோ கழித்து, பல குழந்தைகளை வளர்த்தும், நரைதட்டும் வயது அடையும் வரை வீட்டில் உள்ள பெரியவர்களைப் பராமரித்து்ம் அவரது காலத்தை முடித்துவந்தார்.
இன்று, லக்கிம்புரி கேரியில் உள்ள ஒரு தாரு பெண் ஒரு புதிய உலகில் குடும்பத் தலைவிகளாக பரிணமித்துள்ளனர். இதற்கு, கைத்தறி நெசவாளரும், சமூக தொழில்முனைவோரான ஆர்த்தி ராணாவின் தொலைநோக்குப் பார்வையே காரணம். ஏனெனில், 350 சுயஉதவி குழுக்களில் 10,000 தாரு பெண்களை கைத்தறி மற்றும் பாரம்பரிய கைவினைகளில் ஈடுப்படுத்தி அவர்களது வாழ்க்கையை மாற்றியதுடன், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளார் ராணா.
தாரு பழங்குடியினச் சமூகம் முதன்மையாக நேபாளத்தின் டெராய் பகுதியிலும், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட வட இந்தியாவின் அருகிலுள்ள மலையடிவாரப் பகுதிகளிலும் வசிக்கிறது. நாட்டின் பிற பழங்குடி சமூகங்களைப் போலவே தாரு சமூகம், வலுவான இயற்கை மருத்துவ பாரம்பரியத்தை பாதுகாத்தாலும், அவர்களின் பாரம்பரிய நடைமுறைகள், அவர்களின் நிலங்களிலிருந்து இடம்பெயர்வு, காலனித்துவம், சாதியம் மற்றும் நவீன மருத்துவ மேலாதிக்கம் ஆகியவற்றின் கலவையால் செல்லாத்தாக்கப்பட்டன.
இந்த பழங்குடி இனக்குழுவில் மற்ற பெண்கள் வளர்ந்ததைப் போலவே ராணாவும் வளர்ந்தார். 18 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டநிலையில், 20 வயதில் தாயாரானார். ஆனால், திருமணமான ஆரம்ப ஆண்டுகளிலே, அவர் ஒரு தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NRLM) திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் கண்டுபிடித்தார். அது அவரது வாழ்க்கையை மட்டுமல்ல, அவரது பஞ்சாயத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையும் மாற்றியது. 2015ம் ஆண்டில், NRLM திட்டம் அவரது கிராமத்திற்கு வந்தபோது, அவரது மாமியாரின் எதிர்ப்பையும் மீறி, அதில் சேர்ந்த ஐந்து பெண்களை உள்ளடக்கிய 25 பேரில் இவரும் ஒருவர்.
"என் கிராமத்திற்கு வெளியே சீதாப்பூருக்கு பயணம் செய்தது அதுதான் முதல் முறை. ஒரு மாணவனைப் போல உணர்ந்தேன், வீட்டை விட்டு விலகி, என் கடமைகளிலிருந்து விலகி, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன். நாங்கள் தறியில் வேலை செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டோம். தாரிகளை (நெசவு செய்து தயாரிக்கப்படும் பாய்கள்) செய்தோம். கரும்பு இலைகளைக் கொண்டு கூரைகளை கூட தைத்தோம். வீட்டிலிருந்து கிளம்பும்போது எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் காட்டில் இருந்து விறகு சேகரிப்பது மற்றும் மீன் பிடிப்பது மட்டும் தான்," என்று கூறினார் ஆர்த்தி.
அத்திட்டத்தின் ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, அம்மாவட்ட நீதிபதி பயிற்சியில் கலந்துகொண்ட பெண்கள் அவர்களது சொந்த கிராமங்களில் சுய உதவிக்குழுக்களை அமைத்து, கைத்தறி வேலையை மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க ஊக்குவித்தார். அந்த யோசனை ராணாவை ஈர்த்தது. பயிற்சிக்கு சென்ற 25 பேரில் ராணா மட்டுமே, மற்றப் பெண்களுக்கு பயிற்சியளித்து தலைமை தாங்கும் முடிவை எடுத்தார். அதற்காக அவரது பஞ்சாயத்து முழுவதும் பயணம் செய்தார். கிராமப் பெண்களை அணுகினார். அவர்களின் குடும்பத்தாரிடம் பெண்களை பங்கேற்க அனுமதிக்கும்படி வற்புறுத்தினார்.
"எப்படி பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை அவர்கள் சௌகரியமாக உணர்ந்தார்களோ அதே போல், தங்கள் வீட்டுப்பெண்கள் வெளியே சென்று வேலை செய்யும் யோசனையை எந்த குடும்பமும் வரவேற்கவில்லை. ஆனால், அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் கடுமையான வானிலையின் போது இறப்பதையும், அறுவடை எப்போதும் சாதகமாக இல்லாததையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். மறுபுறம், கைத்தறியின் மூலம் நாங்கள் உற்பத்தி செய்ததை விற்பனை செய்து கைமேல் பலனை அடைந்ததையும் அவர்கள் கண்டனர். இது ஒரு நிரந்தர வருமான ஆதாரமாக இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தினோம்.
ஒரு மாதத்தில், நாங்கள் 44 கிராமங்களில் 350 சுய உதவிக்குழுக்களை உருவாக்கினோம். ஆரம்பத்தில், மூலப்பொருட்கள் தேவைப்படும் போதெல்லாம் சீதாப்பூருக்குப் பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால், அது நிலையானதாக இல்லை. எனவே, மக்களிடமிருந்து பழைய, பயன்படுத்தப்படாத துணிகளை நன்கொடையாகக் கேட்கத் தொடங்கினோம். அவற்றை புதிய பாய்களாக மறுசுழற்சி செய்தோம், என்று உற்சாகத்துடன் பகிர்ந்தார் ராணா.
பழங்குடியினம் எதிர்கொள்ளும் சவாலும்; ராணாவின் சாதனையும்;
ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டுத் திட்டம் (ITDP) மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) போன்ற அமைப்புகளின் ஆதரவுடன், ராணா அவரது முயற்சிகளை விரிவுபடுத்தினார். கோவிட்-19 லாக்டவுனில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பொதுவாகக் காணப்படும் உயரமான, உறுதியான புல் வகையான மூஞ்சி புல்லைப் பயன்படுத்தி பெண்கள் கூடைகள் மற்றும் பேனா ஸ்டாண்டுகளை உருவாக்கினர். இது அவர்களின் கைத்தறிகளுடன் சேர்ந்து, இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் அரசாங்க கண்காட்சிகளில் பிரபலமடைந்தது.
இந்த மூஞ்சி புல்கள் அவர்களின் சொந்த கிராமங்களைச் சுற்றியுள்ள காடுகளில் ஏராளமாக வளர்ந்தாலும், அவர்கள் அதை வாங்குவதற்கு பெரும்பாலும் மற்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
"மூஞ்சி புல்கள் எங்களது பகுதியிலே இருக்கிறது, ஆனால் அதைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதி இல்லை," என்று அவர் வேதனையுடன் கூறினார்.
இந்த கட்டுப்பாடு ஒரு சிரமம் மட்டுமல்ல; இது ஒரு ஆழமான, நீண்டகால பிரச்சனையை பிரதிபலிக்கிறது. பல காடுகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்களைப் போலவே, தாருக்களும் தலைமுறை தலைமுறையாக, இந்த நிலத்தில் வசித்து வருகின்றனர். ஆனால், அதன் இயற்கை வளங்களை அணுகவோ அல்லது நிர்வகிக்கவோ அவர்களுக்கு முறையான உரிமைகள் இல்லை. உள்ளூரில் இருந்து பெறப்படும் வாழ்வாதாரமாக இருக்க வேண்டியவை, ஆதிவாசி சமூகங்களை அந்நியப்படுத்தும் கொள்கைகளில் வேரூன்றி, ஒரு தளவாட மற்றும் பொருளாதார சுமையாக மாறுகின்றன.
ஆனால், இந்த சவால்கள் இருந்தபோதிலும், கைத்தறி நெசவு மற்றும் கைவினைப்பொருட்களில் கவனம் செலுத்தும் சுய உதவிக்குழுவான 'தாரு ஹத் கர்கா கரேலு உத்யோக்' மற்றும் கம்பளங்கள், கூடைகள் மற்றும் பைகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதில் பெண்களை ஈடுபடுத்தும் NRLM இன் கீழ் உள்ள 'கௌதம் சுயதொழில் குழு' ஆகிய இரண்டு குழுக்களை ராணா வெற்றிகரமாக நடத்தினார். பின் இவை வெற்றிக் கதைகளாக மாறின.
பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மூலம் பழங்குடிப் பெண்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதற்காக ஆர்த்தி ராணாவிற்கு, 2016 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அரசால் "ராணி லட்சுமி பாய் துணிச்சல்" விருதும், 2020 ஆம் ஆண்டிற்கான பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான "நாரி சக்தி புரஸ்கார்" விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
"21 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால், பல பழங்குடி சமூகங்களில் நிலவும் அடிப்படை யதார்த்தம் வேறு கதையைச் சொல்கிறது. நாங்கள் வேலைக்குச் செல்லும்போது பாகுபாடு இன்னும் பின்தொடர்கிறது. மற்றவர்களின் கீழ் பணிபுரியும் போது சுரண்டல் பொதுவானது. அதனால்தான் சுயஉதவிக் குழுக்கள் மிகவும் முக்கியம். அவை பெண்களை தங்கள் சொந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்குள்ளேயே வாழ்க்கையை நடத்த அனுமதிக்கின்றன. தினசரி எவ்வளவு வேலை செய்ய வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். மிக முக்கியமாக, அவர்கள் தங்கள் எதிர்காலத்தையே கவனித்துக்கொள்கிறார்கள்," என்று பல பெண்களின் வாழ்க்கையை மாற்றிய உற்சாகக்குரலில் கூறிமுடித்தார் ஆர்த்தி ராணா.
தமிழில்: ஜெயஸ்ரீ
பழங்குடியின மாணவி வாழ்வில் ஒளி ஏற்றிய ஆசிரியர் மகாலட்சுமி - ஓர் உத்வேக பயணம்