+

பழங்குடியின மாணவி வாழ்வில் ஒளி ஏற்றிய ஆசிரியர் மகாலட்சுமி - ஓர் உத்வேக பயணம்

எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல இருந்த துர்கா என்ற பழங்குடியின மாணவி தற்போது உயர் கல்வி நோக்கி பயணிப்பதன் பின்னணியில் ஆசிரியர் மகாலாட்சுமியின் மகத்தான அணுகுமுறை இருக்கிறது.

ஓர் ஆசிரியர் நினைத்தால், எந்தவொரு பாதகச் சூழலில் சிக்கிய மாணவரின் எதிர்காலத்தையும் நல்லபடியாக மாற்றியமைக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் ஆசிரியர் மகாலட்சுமி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் கணித ஆசிரியராக இருக்கிறார் மகாலட்சுமி. ஜவ்வாது மலைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் தொடர்ந்து கல்வியைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாகச் செயல்பட்டு வருகிறார் இவர்.

வேலை காரணமாக அடிக்கடி இடம்பெயரும் அப்பகுதி பெற்றோரிடம் பேசி, அவர்களின் குழந்தைகளைக் கல்வியைத் தொடர வைத்தவர் என்ற பெருமை எப்போதுமே மகாலட்சுமிக்கு உண்டு. அவரது நம்பிக்கையின் பலனாக அங்குள்ள குழந்தைகள் பலர் அப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி பெற்றோரின் வேலை காரணமாக அடிக்கடி குடும்பத்தோடு இடம் பெயரும் நிலையில் வாழ்ந்து வந்தவர்தான் மாணவி துர்கா. இவரது பெற்றோர் வருடத்தின் நான்கு மாதங்கள் கர்நாடகாவின் சிக்கமகளூருக்கு வேலைக்குச் சென்று விடுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் சென்றால் ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகுதான் ஊருக்கு வருவார்கள். அங்குள்ள காப்பி தோட்டங்களில் அவர்கள் வேலை பார்ப்பதால், ஒவ்வொரு வருடமும் அங்கு சில மாதங்களும், இங்கு சில மாதங்களும் என மாறி மாறி வாழ்வது அவர்களது வாழ்க்கை முறை.

பெற்றோரின் இந்த வாழ்க்கை முறையால், திருவண்ணாமலை அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் படிப்பைத் தொடர்வது துர்காவுக்கு கடினமாக இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவரது குடும்பம் வேலை நிமித்தம் கர்நாடகாவுக்குச் செல்லும் போதெல்லாம், துர்காவும் நான்கு மாதங்கள் அவர்களுடனேயே சென்று தங்கியுள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இப்படித்தான் அவரது பள்ளி வாழ்க்கை சென்றுள்ளது.

ஆனால், ஒன்பதாம் வகுப்பிலும் இப்படியே இருந்தால், துர்காவால் பத்தாம் வகுப்பிற்கோ, அதனைத் தொடர்ந்து மேல் வகுப்புகளுக்கோ செல்ல முடியாது என்பதை ஆசிரியர் மகாலட்சுமி உணர்ந்தார். அவர் நினைத்தது மாதிரியே, எட்டாம் வகுப்போடு துர்காவின் கல்வியையும் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

துர்காவும் மகாலட்சுமியும்

எப்படி துர்காவை மீண்டும் பள்ளிக்கு வரச் செய்தார் என்பதைப் பற்றி ஆசிரியை மகாலட்சுமியே, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை எழுதியுள்ளார். அதில், அவர், “எட்டாம் வகுப்பு வரை அவளே விரும்பவில்லை என்றாலும் கட்டாயமாகக் கல்வியை அவளிடம் திணித்தேன். கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு.

அவளுக்குக் கல்வியின் மீதான ஆசையைத் தூண்டிவிட்டு , பின் பள்ளிக்குள் சேர்த்துக்கொள்ள மறுத்தேன். இரண்டு வாரம் நீ தொடர்ந்து வந்தால் சேர்த்துக்கொள்கிறேன் எனக் கூறி, அந்த இரண்டு வாரங்களை அவள் கல்வியை விட்டு ஓட முடியாதபடிக்கு ஆசையைத் தூண்டி எடுத்துக் கொண்டேன்.

இரண்டு வாரம் முடிந்து வந்த முதல் பள்ளி வேலை நாளில் உங்க வீட்ல இருந்து எல்லோரும் எனக்கு ‘இந்த ஆண்டு நாங்கள் இவளை எங்கேயும் அழைத்துச் செல்ல மாட்டோம், தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவோம்’ என்று லெட்டர் எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் சேர்த்துக்கொள்கிறேன் என்று நிபந்தனை விதித்தேன். அவர்களது குடும்பமும் அப்படியே செய்தது.

ஒன்பதாம் வகுப்பை முழுமையாக முடித்தார். ஆனாலும் எழுதுதலையும் வாசித்தலையும் அந்தக் குழந்தையால் முழுமையாக உட்கிரகிக்க முடியவில்லை. பத்தாம் வகுப்பு வந்ததும் பயமின்றி வந்தக் குழந்தைக்கு, “இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம்” என்ற ஒற்றை வாக்கியம் பயத்தை வாரி விசிறியது. தொடர் டெஸ்ட் அந்த பயத்தைக் கூட்டிவிட்டது. இந்தக் குழந்தையால் ரிசல்ட் அடிவாங்கும் என்ற பேச்சுக் குழந்தையின் காதுகளுக்கே சென்று சேர்ந்தது. மறுபடியும் வாரத்தில் ஒருநாள், இரண்டு நாள் என விடுப்பெடுக்க ஆரம்பித்தாள்” எனத் தெரிவித்துள்ளார் மகாலட்சுமி.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு

மனம் தளராத ஆசிரியர் மகாலட்சுமி, வீட்டில் இருந்தாலும் சரி, தோட்டத்தில் இருந்தாலும் சரி, மாணவியை பள்ளிக்கு வரச் செய்து, தொடர்ந்து கல்வியைப் பெற வைத்துள்ளார்.

மகாலட்சுமியின் இந்த முயற்சிக்கு துர்காவின் தாயார் மற்றும் குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே, அவர்களது குடும்பம், கர்நாடகாவுக்கு வேலைக்குச் சென்ற போதும், துர்காவை இங்கேயே விடுதியில் தங்க வைத்துப் படிக்க வைத்துள்ளார் மகாலட்சுமி.

“டீச்சரு... எப்படியாவது அவள நீதான் படிக்க வைக்கணும். நாங்கதான் கர்நாடகாவுக்கும் கேரளாவுக்கும் போயி அம்மாம் கஷ்டப்பட்றோம்னா இவங்களும் நாளைக்கு இதேமாதிரிதான் கஷ்டப்படணுமா ? நாலெழுத்துப் படிச்சிட்டு, எங்கயாவது நிழல்ல இருந்து சம்பாதிக்கிட்டுமே” என துர்காவின் அம்மா என்னிடம் கூறினார். நானும் அதற்காக என்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

teacher

உன்னை எல்லா பாடத்திலயும் 35 மார்க் எடுக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. உன்னால் முடியும்னு நான் நம்புகிறேன். உனக்காக வேணாம், எனக்காக இங்க இரு. எந்த டீச்சர்சும் உன்னை எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கிறேன். Pls மா... உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். எனக்காக இன்னும் ஆறே மாசம் மட்டும் இரு.Pls...." என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே துர்காவிடம் கேட்டேன்.

வார்த்தைகள் வந்து விழ விழ அனிச்சையாகக் கண்ணீரும் கன்னத்தில் விழுந்தது. வார்தைகளைக் கூறி முடித்துவிட்டு கண்ணீரைத் துடைப்பதற்குள் அவள் என்னை இறுக அணைத்துக் கொண்டிருந்தாள். அவளின் அழுகையும் கண்ணீரும் என் கரம் பற்றி வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றது.

இதோ... 60% மதிப்பெண்களுடன் அந்தக் கண்ணீர் மீண்டும் எங்கேயோ இருந்து ஆனந்தத்தில் கசிகிறது.

அவள் மீண்டு.. மீண்டும் வருகிறாள்!

அவளே... பெரும் உதாரணம்!” என நெகிழ்ச்சியோடு அந்தப் பதிவை முடித்திருக்கிறார் ஆசிரியை மகாலட்சுமி.

60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நாளன்று, துர்கா தனது குடும்பத்தோடு கர்நாடகாவில் இருந்துள்ளார். அதனால், அவரது சகோதரர் காட்டுராஜா, மகாலட்சுமிக்கு போன் செய்து தனது தங்கை தேர்ச்சி பெற்று விட்டாரா என ஆர்வமாகக் கேட்டுள்ளார்.

அதற்கு மகாலட்சுமி, ‘துர்காவின் கடின உழைப்பின் பலனாக அவர், 10-ம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 301 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதை’த் தெரிவித்துள்ளார்.

“ஒரு ஆசிரியராக, அவளுடைய திறமையை நான் அறிந்திருந்தேன். அவள் கணிதத்தில் சிறந்தவளாக விளங்கியதைப் பார்த்து, தொடர்ந்து அவளை நான் ஊக்குவித்தேன். அவளுடைய குடும்பத்தினர் கர்நாடகாவில் இருந்தபோது, அவள் விடுதியில் தங்கி படிப்பைத் தொடர்வதற்கு நாங்கள் தேவையான வேலைகளைச் செய்தோம். நாங்கள் நினைத்தது போலவே, துர்கா தற்போது பள்ளிக்குப் பெருமை சேர்த்து விட்டார். இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
teacher

துர்கா 500-க்கு 301 மதிப்பெண்கள் எடுத்ததாக நான் காட்டுராஜாவிடன் கூறியபோது, பின்னணியில் துர்கா அழுவது எனக்குக் கேட்டது. அவள் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாள் என்றும், பிளஸ்-ஒன்னில் சேருவீர்களா என்றும் கேட்டேன். அவள் ஆம் என்று கூறினார். நான் விரும்புவதும் அதைத்தான்” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் மகாலட்சுமி.

அமைச்சர் பாராட்டு:

ஆசிரியர் மகாலட்சுமியின் முயற்சியின் பலனாக இன்று, ஒரு பழங்குடியின மாணவி, உயர் கல்வியில் சேர்வது உறுதியாகியுள்ளது. இது துர்காவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல... மகாலட்சுமியின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றிதான்.

மகாலட்சுமியின் இந்த முயற்சியையும், துர்காவின் வெற்றியையும் பாராட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அனைவரும் அவசியம் வாசியுங்கள்.
இதுதான் அரசுப் பள்ளி!

“ஆசிரியர்கள்தான் இரண்டாம் பெற்றோர்கள்” என்பதை நிரூபித்துள்ளார் ஆசிரியர் மகா லட்சுமி அவர்கள்.

அன்பு மாணவி துர்கா படைக்கப்போகும் சாதனைகளுக்கு இது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. காடு மலையைக் கடந்து அவளின் புகழ் உலகம் முழுதும்…

— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 20, 2025 " data-type="tweet" align="center">

அப்பதிவில் அவர், “அனைவரும் அவசியம் வாசியுங்கள். இதுதான் அரசுப் பள்ளி!

“ஆசிரியர்கள்தான் இரண்டாம் பெற்றோர்கள்” என்பதை நிரூபித்துள்ளார் ஆசிரியர் மகாலட்சுமி அவர்கள். அன்பு மாணவி துர்கா படைக்கப்போகும் சாதனைகளுக்கு இது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. காடு மலையைக் கடந்து அவளின் புகழ் உலகம் முழுதும் பரவும். லவ் யூ துர்கா” எனத் தெரிவித்துள்ளார்.

தான் பணியில் சேர்ந்த நாள்முதலே, இப்படி ஜவ்வாது மலைகளில் வாழும் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை, அவர்களின் பெற்றோரின் சம்மதத்தோடு கல்வியைத் தொடர வைக்கும் அரும்பணியை மேற்கொண்டு வருகிறார் மகாலட்சுமி. அவரது இந்த முயற்சிகளுக்காக கடந்த காலங்களில் அவர் பலமுறை விருதுகள் தரப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Induja Raghunathan

facebook twitter