
AI இன் விரைவான வளர்ச்சி அடுத்த 15 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான மனித வேலைகளை அழிக்கக்கூடும், இதன் விளைவுகளின் சுமையை நடுத்தர வர்க்கத்தினர் சுமக்க நேரிடும், என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வர்த்தக அதிகாரி மோ காவ்டாட் எச்சரித்துள்ளார்.
பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர்,
"செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வடிவமான செயற்கை பொது நுண்ணறிவு மனிதன் செய்யக்கூடிய அனைத்து அறிவுசார் பணிகள் அத்தனையும் செய்யும் திறனுடன் வளர்ந்து நிற்கும். ஒவ்வொரு மனித வேலையிலிருந்தும் மனிதன் நீக்கப்படுவான். நாம் இப்போது பாதுகாப்பு என்று நினைத்திருக்கும் ப்ரோகிராமர்கள், செயலதிகாரிகள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளிகளின் பணிகள் முற்றிலும் இல்லாது போகும்," என்றார்.
"நீங்கள் ஒரு விவசாயியாகவோ அல்லது டாப் 0.1%-ல் ஒருவராகவோ இல்லையெனில், முடிந்தது கதை என்கிறார் அவர். பொது செயற்கை நுண்ணறிவு; சி.இ.ஓ. வேலையையும் பார்த்து விடும். அடுத்த 15 ஆண்டுகாலம் நாம் சொர்க்கம் செல்லும் முன் நரகமாகவே இருக்கும். இந்தச் செயற்கை நுண்ணறிவினால் மத்தியதர வர்க்கத்தை ஆதரிக்கும் சமூக-பொருளாதார அமைப்புகள் உடைந்து நொறுங்கி விடும். வேலைகள் செயற்கை நுண்ணறிவின் மூலம் தானியக்கமாவதற்குள் ஏதாவது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரிய பிரச்சனைதான்," என்கிறார் காவ்டாட்.

இதற்கு உதாரணமாக காவ்டாட் கூறும் விஷயம் என்னவெனில் உணர்ச்சி ரீதியானஅறிவார்ந்த AI-ஐ மையமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப்பில் தனது சொந்த அனுபவத்தை காவ்டாட் மேற்கோள் காட்டினார்.
மனித உறவுகளை உருவகப்படுத்தக்கூடிய AI-ஐ உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த வணிகம், மூன்று நபர்களுடன் மட்டுமே செயல்படுகிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேவைப்பட்டிருக்கும் பணி இது.
செயற்கை நுண்ணறிவின் காட் ஃபாதர் என்று கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் எதிர்கால செயற்கை நுண்ணறிவு மாடல்கள் தனக்கான உள் மொழியை உருவாக்கிக் கொள்ள முடியும். இதனால் மனிதர்கள் அந்த மொழியை புரிந்து கொள்ளவோ கட்டுப்படுத்தவோ முடியாது.
“அது அதன் மொழியில் சிந்திக்கத் தொடங்கினால் அது என்ன சிந்திக்கிறது என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடும்,” என்கிறார்.
வெறும் பணிகள் அழிந்து போவது மட்டுமல்ல, வேறு சில சமுக நெருக்கடிகளையும் அவதானிக்கிறார் காவ்டாட். மக்கள் மரபான வேலைகளை இழந்து விடுவார்கள். இதனால் அடையாளமற்றுப் போதல், தனிமை, மனச்சிதைவு நோய் ஆகிய தீமைகளும் ஏற்படும் மேலும் சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும்,. இதனால் வருவாய் சமத்துவமின்மை, சமூகக் கட்டமைப்பின் அடித்தளமே ஆட்டம் கண்டு விடும், என்று சமூகப் பொறுப்புடன் விமர்சிக்கிறார் காவ்டாட்.