
சான் பிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான Anthropic, அமெரிக்க பங்குச் சந்தையில் ஆரம்ப பொது பங்கு வெளியீடு (IPO) மேற்கொள்வதற்காக, அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான (SEC) முன் ரகசிய S-1 விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், OpenAI-யை விட முன்னதாக பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலாகும் AI நிறுவனமாக மாறும் போட்டியில் ஆன்த்ரோபிக் முன்னிலை பெற்றுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“SEC ஆய்வு செயல்முறை முடிந்த பின் பங்குச் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை இந்த தாக்கல் வழங்குகிறது. IPO நடைபெறுவது சந்தை நிலவரம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்தது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம், கடந்த வாரம் 'ஆன்த்ரோபிக்' (Anthropic) நிறுவனம் Series H நிதி திரட்டல் சுற்றில் 65 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்று, சுமார் 965 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியதைத் தொடர்ந்து வந்துள்ளது. இதன் மூலம், மதிப்பீட்டில் OpenAI-யை முந்தியதாக கூறப்படுகிறது.
ரகசிய S-1 தாக்கல் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதால், நிறுவனத்தின் நிதிநிலை, அபாயக் காரணிகள், பங்கு அமைப்பு மற்றும் IPO விலை நிர்ணயம் போன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு உடனடியாக வெளியிடப்படாது. SEC ஆய்வு நிறைவடையும் இறுதிக்கட்டத்தில் மட்டுமே அவை வெளிப்படுத்தப்படும்.
ஆன்த்ரோபிக்-இன் IPO, விரைவில் பங்குச் சந்தைக்கு வரவுள்ள SpaceX நிறுவனத்தின் IPO-வுடன் ஒரே காலகட்டத்தில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்களின் கவனத்தையும் முதலீட்டு நிதியையும் ஈர்க்கும் போட்டி உருவாகலாம். SpaceX சுமார் 2 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை இலக்காகக் கொண்டு மிகப்பெரிய IPO-களில் ஒன்றைத் திட்டமிட்டு வருகிறது.
Anthropic பின்னணி என்ன?
2021-ஆம் ஆண்டு, முன்னாள் OpenAI ஆராய்ச்சியாளர்களும் நிர்வாகிகளுமான டேரியோ அமோடிய் மற்றும் டேனியலா அமோடிய் ஆகிய சகோதரர்கள் இணைந்து ஆன்த்ரோபிக் நிறுவனத்தைத் தொடங்கினர். மனிதர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிறுவனம், Claude எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியாளரின் மூலம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
ஆன்த்ரோபிக்கின் ஐபிஓ, செயற்கை நுண்ணறிவு துறையின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது AI நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கைக்கான புதிய அளவுகோலை உருவாக்கக்கூடும்.