+

பங்குகள் மற்றும் கடன் மூலம் ரூ.250 கோடி நிதி திரட்டிய Simple Energy நிறுவனம்!

பெங்களூருவைச் சேர்ந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் சீரிஸ்-பி (Series B) சுற்றில் ரூ.250 கோடியை ஈக்விட்டி மற்றும் கடன் வடிவில் பெற்றுள்ளது. இந்த முதலீட்டிற்கு அரோகியசாமி வேலுமணி குடும்ப அலுவலகம் தலைமை வகித்தது. இந்த நிதி திரட்டலில் நிறுவனத்தின் நிறுவனர்களான சு

பெங்களூருவைச் சேர்ந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான 'சிம்பிள் எனெர்ஜி' நிறுவனம் சீரிஸ்-பி (Series B) சுற்றில் ரூ.250 கோடியை ஈக்விட்டி மற்றும் கடன் வடிவில் பெற்றுள்ளது. இந்த முதலீட்டிற்கு அரோகியசாமி வேலுமணி குடும்ப அலுவலகம் தலைமை வகித்தது.

இந்த நிதி திரட்டலில் நிறுவனத்தின் நிறுவனர்களான சுஹாஸ் ராஜ்குமார் மற்றும் அங்கித் குப்தா ஆகியோரும் பங்கேற்றனர். மொத்த நிதியில் ரூ.123 கோடி கடனாக வழங்கப்பட்டதுடன், அதனை ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, கேப்பிடல் வென்ச்சர்ஸ் மற்றும் பிற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கின.

திரட்டப்பட்ட நிதியின் பெரும்பகுதி உற்பத்தித் திறன் விரிவாக்கம், தொழிற்சாலை மேம்பாடு மற்றும் தயாரிப்பு திறனை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விற்பனை, சந்தைப்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பணிகளுக்கும் இந்த நிதி செலவிடப்பட உள்ளது. இதன் மூலம் தயாரிப்பு வரிசையையும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேலும் வலுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“இந்த முதலீடு, நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நீண்ட தூர பயண திறன் மற்றும் உயர்தர செயல்திறன் கொண்ட எங்கள் மின்சார ஸ்கூட்டர்களை நாடு முழுவதும் விரிவாக கொண்டு செல்ல இது உதவும்,” என்று சுஹாஸ் ராஜ்குமார் தெரிவித்தார்.
Simple Energy

தற்போது மாதத்திற்கு சுமார் 1,500 மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிறுவனம், 2027 மார்ச் மாதத்திற்குள் மாதாந்திர விற்பனையை 10,000 யூனிட்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 38 நகரங்களில் 71 விற்பனை மையங்களை கொண்டுள்ள நிறுவனம், பெங்களூரு, டெல்லி, பாட்னா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் ராஞ்சி, புவனேஸ்வர், கட்டக் போன்ற நகரங்களுக்கும் விரிவடைய திட்டமிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், தனது வருவாய் FY25-இல் ரூ.40 கோடியில் இருந்து FY26-இல் ரூ.170 கோடியாக, நான்கு மடங்கு உயர்ந்ததாக தெரிவித்துள்ளது. தற்போது மாதத்திற்கு 3,000 வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ள நிறுவனம், முழுமையான மின்சார வாகன உற்பத்தியாளராக (Full-stack EV OEM) மாறும் நோக்கில் தனது பேட்டரி உற்பத்தி வரிசையிலும் முதலீடு செய்துள்ளது.

விற்பனை, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாளர்களை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், கனரக அரிய மண் தனிமங்கள் (Heavy Rare Earths) இல்லாத மோட்டார்களை வணிக ரீதியாக தயாரித்த முதல் இந்திய வாகன உற்பத்தியாளர் தாங்களே என சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

facebook twitter