
வியட்நாமைச் சேர்ந்த முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான Vinfast, தூத்துக்குடியில் அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. உலக அளவில் மின்சார வாகன உற்பத்தியில் சிறந்த நிறுவனமாக உள்ள 'வின்பாஸ்ட்' தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்கி இருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
₹16,000 கோடி முதலீட்டில், ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக தமிழக அரசுடன் வின்பாஸ்ட் நிறுவனம் கடந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்ட நிலையில், முதற்கட்டமாக சிப்காட்டுடன் இணைந்து ₹1,119.67 கோடி செலவில் 113.699 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் அமைந்துள்ள முதல் முனையத்தில் கார் உற்பத்தி தொடங்கியது.
இந்த தொழிற்சாலையில் இரண்டு பணிமனைகள், இரண்டு குடோன்கள் மற்றும் கார் பரிசோதனை மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வின்பாஸ்ட் தொழிற்சாலையை 2025 ஆகஸ்ட் 4 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட கார்களை அறிமுகம் செய்யும் போது அவற்றில் கையெழுத்திட்டார்.

தூத்துக்குடி வின்பாஸ்ட் தொழிற்சாலை
உள்ளூர் வேலைவாய்ப்பு மேம்பாடு
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைந்துள்ளதால பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது.
தற்போது இங்கு பணியாற்றும் 400 பேரில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். 2025-ம் ஆண்டு இறுதிக்குள் பணியாளர்களின் எண்ணிக்கை 700 முதல் 800 ஆக உயரும் போது உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், என திட்ட இயக்குனர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், கார்ப்பரேட் சுற்றுச்சூழல் பொறுப்பு (CER) திட்டத்தின் கீழ், தூத்துக்குடி வாஉசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ₹10 கோடி மதிப்பில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024-25ம் ஆண்டில் 229 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 135 பேர் ஏற்கனவே பணியில் சேர்ந்துள்ளனர், எஞ்சியவர்களும் விரைவில் சேர உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி
வின்பாஸ்ட்டின் ₹16,000 கோடி முதலீடு தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும். இதன் விளைவாக, சாலை வசதிகள், மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படும் என்பது தொழில்துறையினரின் கணிப்பாக உள்ளது.
தூத்துக்குடி துறைமுகமும் அருகிலேயே அமைந்திருப்பதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும், இது தமிழ்நாடு மற்றும் வியட்நாமுக்கு இடையே வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும். மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைந்திருப்பதனால் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வருவதற்கு வாய்ப்புள்ளது, இதனால் ஒரு தொழில் தொகுப்பு (industrial cluster) உருவாகும்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தை விரிவாக்கம்
வின்பாஸ்ட் ₹8 லட்சம் முதல் ₹16 லட்சம் வரையிலான விலையில் கார்களை உள்பத்தி செய்கிறது. இந்தியாவில் பிரத்யேகமாக மக்களின் வசதிகளுக்கு எற்ப மிட்-பிரீமியம் ரக ஆடம்பர விஎப்-6 மற்றும் விஎப்-7 மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கார்களில் டூயல்-சேனல் கூலிங், சன் ரூஃப், 60-70 கிலோவாட் பேட்டரி உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. விஎப்-3 ரக கார் உற்பத்திக்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன.

உலகத்தரம் வாய்ந்த கார் உற்பத்தியை தூத்துக்குடியில் செய்வதனால் உள்ளூர் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப திறன்களை வழங்கி, தூத்துக்குடியை மின்சார வாகன உற்பத்தி மையமாக வின்பாஸ்ட் மாற்றும், என நிபுணர்கள் கருதுகின்றனர்.
எதிர்காலத்திற்கான புரட்சிகர திட்டம்
வின்பாஸ்ட் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று, உள்ளூர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான உத்திரவாதம் அளித்துள்ளது. தொழிற்சாலையுடன் தொடர்புடைய சிறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்கள் மூலம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும், இது உள்ளூர் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும்.
தூத்துக்குடியில் உள்ள வின்பாஸ்ட் தொழிற்சாலையின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையால், தென் மாவட்டத்தின் தொழில் துறையை மறுவரையறை செய்யும். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவித்து, இந்தியாவின் மின்சார வாகனத் துறையில் தூத்துக்குடியை ஒரு முக்கிய மையமாக மாற்ற வின்பாஸ்ட் ஆலை வழிவகுப்பதோடு, நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கும் பங்களிக்கும் என்று நம்பப்படுகிறது.
தகவல் உதவி: நன்றி சன்நியூஸ்