தமிழக ஸ்டார்ட் அப்’கள் கிளவுட் சேவை கட்டணத்தில் சலுகை பெற ‘Data Voucher Scheme' அறிவிப்பு!

11:40 AM Sep 05, 2025 | cyber simman

தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தரவு உள்கட்டமைப்பிற்கான செலவை குறைக்க வழி செய்யும் ’டேட்டா வவுச்சர் திட்டம்’ (Data Voucher Scheme) துவங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஸ்டார்ட் அப்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்டார்ட் அப்களுக்கான தரவுகள் மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சியை குறைக்க வழி செய்யும், ’ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம்’, தமிழக பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஸ்டார்ட் அப்கள் கிளவுட் சேவைக்கான கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை மூன்றாண்டுகளுக்கு திரும்ப பெற வழி செய்கிறது.

மேலும், சர்வதேச கிளவுட் சேவை நிறுவனங்களிடம் இருந்து பெறும் கிளவுட் சேவைக்கான கட்டணத்தில் 5 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி  பெறவும் வழி செய்கிறது.

”கிளவுட் சேவைகள் வழங்கும் கூகுள், ஆரக்கிள், சிஃபி, உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் கட்டணங்களில் 5% - 40% தள்ளுபடி கிடைக்க இந்த டேட்டா வவுச்சர் திட்டம் உதவும்.”

இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சலுகை பெற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எல்காட் அலுவலகத்தில் உள்ள முதன்மை தொழில்நுட்ப அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Induja Raghunathan