+

மூலிகை கலந்த, ஆரோக்கிய சானிட்டரி பேட் ப்ராண்ட் Zoy-இன் இணை நிறுவனரானார் நடிகை சமந்தா!

மூலிகை கலந்த, ஆரோக்கியம் சார்ந்த சானிட்டரி பேட்களைத் தயாரிக்கும் Zoy நிறுவனத்தில் இணை நிறுவனராக இணைந்துள்ளார் நடிகை சமந்தா.

சமீபகாலமாக திரைத்துறையைச் சாந்த பலர் நடிப்பையும் தாண்டி, தொழில் முனைவோராவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், குறிப்பாக நடிகைகள் பலர் பேஷன், உணவகம் போன்ற துறைகளைவிட, பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த தொழில்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகை சமந்தா, இயற்கை சார்ந்த சானிட்டரி பேட்களைத் தயாரிக்கும் 'ஜோய்' (Zoy) நிறுவனத்தில் இணை நிறுவனராக இணைந்துள்ளார்.

சமந்தா

ஸ்னோ லோட்டஸ் தெரபி பேட்கள்

பெண்களின் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில், மருந்து மற்றும் மூலிகை கலந்த சானிட்டரி பேட்கள் மற்றும் பிசிஓஎஸ் (PCOS) மேலாண்மைக்கான காப்புரிமை பெற்ற ஸ்னோ லோட்டஸ் தெரபி பேட்களையும் ஜோய் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

பெண்களின் ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு நல்ல முயற்சியாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார் அதன் நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி.

மாதவிடாய் என்பது தீண்டத்தகாத ஒரு சொல் என்ற நிலை மாறி, அது பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த ஒரு விசயம் என்ற விழிப்புணர்வு சமீபகாலமாக மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பொதுவெளியில் இது தொடர்பான வெளிப்படையான உரையாடல்களே அதன் ஆரோக்கியப் போக்கை வெளிக்காட்டுவதாக உள்ளது. தொழில் போட்டி காரணமாக சந்தையில் கிடைக்கும் மலிவு மற்றும் பிளாஸ்டிக் கலந்த சானிட்டரி பேட்களினால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு கேடு என்ற விழிப்புணர்வையும் சமூக ஆர்வலர்களும், மருத்துவர்களும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தா மாதிரியான பிரபலங்கள் இது போன்ற ஆர்கானிக் சானிட்டரி பேட் நிறுவனத்தில் இணைந்துள்ளது வரவேற்கத்தக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது.

சமூக மாற்றம் தரும் முயற்சி

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் அடிப்படையிலான சுகாதாரப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில், ZOY தன்னை ஒரு ஆரோக்கியம் சார்ந்த மாற்றாக நிலைநிறுத்திக் கொள்கிறது, என அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேதியியல் ரீதியாக பதப்படுத்தப்பட்ட பட்டைகள் மற்றும் பிற வழக்கமான பொருட்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், PCOS மற்றும் கருவுறுதல் சிக்கல்கள் உள்ளிட்ட பல பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணங்களாக மாறி வரும் நிலையில், தங்களது ஜோய் நிறுவனம், அதற்கு தீர்வு தரும் ஒரு மாற்றாக கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
zoy founder

Zoy நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி

மாதவிடாயை சீரமைக்கும் வடிவில், மருந்து கலந்த சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் வலியைக் குறைக்க ஏழு மூலிகைகள் கலந்த சானிட்டரி பேட்கள் மற்றும் பிசிஓஎஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் காப்புரிமை பெற்ற ஸ்னோ லோட்டஸ் தெரபி பேட்கள் என வித்தியாசமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது ஜோய் நிறுவனம். அதோடு, கூடுதலாக பெண்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான மாதவிடாய் உள்ளாடைகள் மற்றும் மாதவிடாய் கோப்பைகளையும் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

"பல தலைமுறைகளாக, தரமற்ற மாதவிடாய் பொருட்களைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு தாங்களே கேடு விளைவித்து வருகின்றனர். பெண்கள் தங்களது மாதவிடாய் ஆரோக்கியத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. அதை இலக்காக வைத்து உருவாக்கப்பட்டதுதான் ஜோய். தற்போது எங்கள் முயற்சியில் நடிகை சமந்தாவும் இணைந்திருப்பது எங்கள் பலத்தைக் கூட்டுவதாக அமைந்துள்ளது,” என்கிறார் ஜோய் நிறுவனர் மகேஸ்வரி.


உடல்நலனில் அக்கறை வேண்டும்

திரைப்படங்களில் பிஸியான முன்னணி நடிகையான வலம் வரும் நிலையில், புதிய ஸ்டார்ட் அப்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை சமந்தா. ஜோய் நிறுவனம் மட்டுமின்றி, மேலும் 12 ஸ்டார்ட் அப்களில் முதலீட்டாளராகவும், இணை நிறுவனராகவும் அவர் பங்காற்றி வருகிறார்.  

samantha

இந்நிலையில், ஜோய் உடன் இணைந்துள்ளது குறித்து சமந்தா கூறுகையில்,

“நச்சுத்தன்மையற்ற, முழுமையான மற்றும் பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை ஆரோக்கியமாக அனுபவிக்கும் விதத்தில்,  உண்மையான மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம். அதற்கான ஒரு பிராண்டைத்தான் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

ஜோய் பிராண்டுடன் இணைவது தொடர்பாக நான் எடுத்த முடிவு எனது நல்வாழ்வுக்கு வலிமை சேர்ப்பதாகவே கருதுகிறேன். இது மாதவிடாய் கால பராமரிப்பு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த பெண்களின் ஆரோக்கியத்தையும் மறுபரிசீலனை செய்யும் ஒன்று. பெண்கள் எப்போதும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முழு அதிகாரமும் பெற்றவர்கள் என்பதை உணர வேண்டும், என நான் விரும்புகிறேன்.

"செலிபிரிட்டி அந்தஸ்தைவிட மக்கள் நலன் முக்கியம். அதனால்தான் எனது படங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன். மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை மாற்றத்திற்கு உதவும் பிராண்டுகளையே நான் தேர்வு செய்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

இ-காமர்ஸ், சில்லறை விற்பனை மற்றும் 'Zoypreneur' கம்யூனிட்டி மூலம் இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஜோய் திட்டமிட்டுள்ளது. தங்களது இந்த முயற்சி பெண்களின் மாதவிடாய் நல்வாழ்வு தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக மட்டுமல்லாமல், அவர்கள் நிதி சுதந்திரத்திற்கான வாய்ப்பாகவும் இருக்கும், என ஜோய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

facebook twitter