
அறிவு, அனுபவம் மற்றும் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து, தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தில் துவங்கப்பட்ட 'Yaa Creations' எனும் மெம்பொருள் நிறுவனம் இன்று பல நாடுகளுக்கு மென்பொருள் தயாரித்துக்கொடுக்கிறது. வெறும் ஒரு பணியாளருடன் துவங்கிய இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் மட்டுமே ரூ. 1.5 கோடி. Yaa Creations நிறுவனம் Local to Global பயணித்தது எப்படி?
IT தொழில் என்றாலே அதை பெரும் MNC நிறுவனங்கள் தான் செய்யும், பன்னாட்டு நிறுவனங்களில் தான் Quality இருக்கும், அவர்களால் தான் இது சாத்தியம் என்ற கருத்து ஐடி துறையில் இன்றளவும் உள்ளது. ஐடி-யில் பணியாற்றுபவர்கள் பலரும் பெரு நிறுவனங்களில் வேலை செய்வது மட்டுமே பெருமையாக நினைப்பதும், ஸ்டார்ட் அப்’களில் பணியாற்ற மறுப்பதும் தான் இன்றைய நிலையாக உள்ளது.
ஆனால், இந்த கருத்துக்களை தவிடுபொடியாக்கி கிராமத்தில் இருக்கும் Startup நிறுவனமும் சர்வதேச அளவில் கோலோச்சும், ஆர்டர்களை கவர்ந்து அங்கீகாரம் பெறும், என நிரூபித்துக்காட்டியுள்ளது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் சிறு கிராமமான ராசிபுரத்தில் இயங்கி வரும் ‘Yaa Creations’.
அறிவு, அனுபவம், நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, வெறும் ஒரே ஒரு ஊழியரைக் கொண்டு இந்நிறுவனத்தை ஆரம்பித்த ஈஸ்வரனின் கடந்த ஆண்டு வருவாய் மட்டுமே 1.5 கோடி ரூபாய். 26 பேரைக் கொண்ட சிறு குழுவுடன், ஏழு நாடுகளுடன் தொழில், தமிழ்நாடு அரசுக்கு Software உதவிகளைச் செய்து மிளிரும் ‘Yaa Creations’ உருவாகிய கதையை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஈஸ்வரன்...

‘Yaa Creations’ நிறுவனர் ஈஸ்வரன்
நாமக்கல்லில் தொடங்கிய பயணம்
நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈஸ்வரன், ஒரு சிறிய மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் சிறிய மளிகைக் கடை நடத்தி, அவரை MCA வரையிலும், பெரிய அண்ணனை BE மற்றொரு அண்ணனை M.Sc M.Ed., வரையில் படிக்க வைத்தனர்.
“நான் அரசுப்பள்ளியில் படித்து தனியார் கல்லூரியில் B.Sc, MCA முடித்து விட்டு 2011ம் ஆண்டு மெம்பொருள் தயாரிக்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். அப்போது, என் சம்பளம் வெறும் 3,500 தான்,’’ என்கிறார் அவர்.
Junior Software Developer ஆக பணியை துவங்கி, இன்று Software-களை உருவாக்கும் ஒரு நிறுவனத்தை கட்டமைத்ததற்குப் பின்னால் பல தடைகள், சிரமங்கள், கடினமான காலங்களை கடந்து வந்துள்ளதாக தெரிவிக்கிறார் ஈஸ்வரன். தான் பணியில் சேர்ந்த அந்த நிறுவனத்தில் 2011ம் ஆண்டு முதல் 2019 வரையில் தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி இறுதியாக Technical Lead-ஆக இருந்துள்ளார். Software Development முழுமையாக கற்றிருந்த ஈஸ்வரன், உடல் நிலை சரியில்லாமல் போனபோது, சென்னையை விட்டு சொந்த ஊருக்கே திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டதாக பகிர்ந்தார்.
”அப்போது, என் அண்ணன்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தான், எனது அனுபவத்தை வைத்து நிறுவனத்தை துவங்க வேண்டுமென்ற யோசனை வந்தது. ஆனால், என்னிடம் அப்போது முதலீட்டிற்கு பணம் ஏதும் இல்லை. என் அனுபவத்தை வைத்து Software Develop செய்ய ஒரு சிறிய ஆர்டர் கிடைத்த போது, என் அண்ணனிடம் ஒரு லட்சம் ரூபாயை முதலீடாக பெற்றுக்கொண்டு சென்னைக்கு கனவுகளுடன் சென்று அங்கு, Co-Workspace ஒன்றை மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து, இருக்கின்ற பணத்தில் இரண்டு லேப்டாப்கள் வாங்கினேன். என் அண்ணன் மகள்கள் பெயர் ஜனன்யா, சிவன்யா, அண்ணியின் பெயரும் மனைவியின் பெயரும் திவ்யா. இதனால், Yaa என்பதை கம்பெனியின் பெயராக தேர்வு செய்து துவங்கிவிட்டேன்.”
Software Development பணிக்காக 30,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு பெண்ணை வேலைக்கு எடுத்திருந்தேன். முதல் இரண்டு மாதங்கள் Project வேலையில் வந்த 40 ஆயிரத்தையும் கையில் வைத்திருந்த பணத்தை வைத்து இரண்டு மாதம் சம்பளம், கம்பெனி வாடகை கொடுத்த நிலையில், ஆர்டர்கள் ஏதும் கிடைக்காமல் போனது. இது மட்டுமின்றி கொரோனா லாக்டவுன் வந்து திரும்ப வீட்டிற்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது, அந்தப்பெண்ணும் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தொடர்ந்த சிக்கல்களும், சவால்களும்
ஆர்டர்கள் கிடைக்காமல் அப்பெண்ணுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், நான் பணிக்காக அவருக்கு கொடுத்திருந்த லேப்டாப் அவரையே வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டேன். அவர் அதை மறுத்தார், ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவரும் பணியில் இருந்து நீங்கி விட்டார்.
நாள் போகப்போக நிலைமை படுமோசமாக மாறிய போது, திடீரென நான் முன்பு வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு ஒரு Project கொடுத்து, அதை ஆறு மாதத்தில் முடிக்குமாறு கேட்டார்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, 2020 பிப்ரவரி மாதம் எங்கள் கிராமத்தின் அருகிலேயே நரசிபுரம் பகுதியில் கம்பெனியை துவங்கி இருவரை வேலைக்கு எடுத்தேன். அவர்களுக்கு Training எல்லாம் திட்டமிட்டிருந்த நிலையில் மீண்டும் லாக்டவுன் வந்ததும் அவர்களை Workfrom Homeக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்ற இருவரிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. Project செய்தாலும் எனக்கு போதிய வருமானம் கிடைக்காமல் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மாதம் 50 ஆயிரம் எனக்கு தேவை என்ற நிலையில் சென்னையில் கம்பெனியை மூடிவிட்டு இங்கு வந்து, மாதந்தோறும் கடன் பெற்று வாழ்ந்ததில், 5 லட்சம் கடனாகிவிட்டது.
'‘ஒரு நாள் என் மகன் ஷூ வாங்கிக்கொடுக்கக் கேட்டான், கடைக்கு நான் சென்ற போது அங்கு நான் பார்த்த Shoeவின் விலை, 800 ரூபாய் என்னிடம் இருந்ததோ வெறும் 500. வேறு வழியின்றி 200 ரூபாய்க்கு தரமில்லாத ஷூ வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாழ்வில் முதல் முறையாக கீழே விழுந்தது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. கம்பெனியிலும் இரண்டு மாதங்கள் வாடகை பாக்கி, ஆர்டர்களும் இல்லை, கம்பெனியை மூடிவிடலாம் என்றெல்லாம் தோன்றியது,’ என கடந்து வந்த
‘என்னடா நீ கம்பெனி துவங்கியிருந்த, தொழில் செய்த இப்ப மகனுக்கு ஒரு Shoeகூட வாங்க முடியாம இருக்க. நீ தோத்துட்டயல்ல,’ என, மனதிற்குள் என்னை நானே கேட்டுக்கொண்டு உடைந்து நொந்து போனேன்.
இப்படியே நாட்கள் கடக்க, ஒரு கட்டத்தில் ஈஸ்வரனின் கடன் சுமையை அறிந்த அவரின் பெற்றோர், அண்ணன்கள் லோன் எடுத்து கடனை அடைத்து உதவி செய்தனர்.
“எனக்கு எப்போதுமே என் குடும்பத்தின் Support என்பது அளவில்லாதது. நான் வாடி நின்றால் ஒரு நாளும் அவர்கள் என்னை கைவிட்டதில்லை, வீழ்ந்து போக விட்டதில்லை. கடன்களை அடைத்து மீண்டு வந்திருந்த நிலையில், ஆர்டர்கள் இல்லாததால் கம்பெனியை காலி செய்யலாமென நினைத்தபோது, என் கம்பெனியில் பணிக்குச் சேர்ந்த இருவரில் ஒருவர், ‘சார் நீங்கள் கொடுத்த Modules, Studies எல்லாம் முடித்துவிட்டேன், பணியை துவங்கலாமா?’ என எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். மேலும், கம்பெனிக்கு இரண்டு மாத வாடகையும் வேண்டாமென உரிமையாளர் கூறினார். சில நாட்களில் எதிர்பாராதவிதமாக ‘E–Commerce’ தளத்திற்கு Wesbite தயாரிக்கும் 2 பெரிய Projectகள் வந்தன.”
மேஜிக் போல அனைத்தும் நடப்பதைப் பார்த்ததும், உள்மனதில் தோன்றியது ஒன்று தான். ‘நாம மீண்டும் கம்பெனியை நடத்தணும். நடக்கறது எல்லாமே நமக்கான Good Signs,’ என நினைத்து மீண்டும் நம்பிக்கையுடன் கம்பெனியை துவங்கினேன். மூன்று நபர்களை வேலைக்கு எடுத்து, நாட்கள் செல்ல இரண்டு Project-களிலும் வந்த பணத்தை வைத்து சம்பளம் கொடுத்துவிட்டேன்.
பாரீஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறிய கம்பெனிக்கு Mobile App develop செய்யும் ஆர்டர் கிடைத்தது, 3 லட்சம் ரூபாயை அதற்கான தொகையாக கேட்டு பணியை துவங்கினேன். ஆஹா… மூன்றாவது ஆர்டர் ரூ.3 லட்சம், கம்னெியை தொடர்ச்சியாக நடத்த ஒரு வாய்ப்பு என நினைத்து அந்த Project மூன்று மாதத்தில் முடித்துவிட்டேன். ஆனால், Client ஏமாற்றிவிட்டார், அவர்களிடமிருந்து பணம் வரவேயில்லை. பணியாளர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடியவில்லை. முதல் முறையாக தொழிலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து மன உளைச்சல் ஏற்பட்டது.
‘‘அதன்பின், விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாக பலரை சந்தித்து Project-கள் பிடிக்க ஆரம்பித்தேன். ஆர்டர்கள் வர வர நான்கு பேரும் மிகத்தீவிரமாக பணியாற்றினோம். ஒவ்வொரு Projectக்காகவும் தொடர்ச்சியாக படித்துக்கொண்டு எங்கள் அறிவை மெருகேற்றிக்கொண்டே இருந்தோம். பல நேரங்களில், ‘நாங்க மொத்தம் நாளு பேரு, நாங்க செய்த வேலையப்பாரு...’ என வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் கூட வைப்பேன்.’’

டேக் ஆஃப் ஆன 'Yaa Creations'
இப்படியே 2021 முடிந்தது, கம்பெனி துவங்கி பல தடைகளைத் தாண்டி 2021ம் ஆண்டு மொத்தமாகவே 3 லட்சம் ரூபாய்க்கான Project மட்டுமே முடிக்க முடிந்தது. சிறிய அளவில் நாங்கள் இருப்பதால், பல நேரங்களில் எங்கள் கம்பெனிக்குள் வருவோர் ‘இது Computer சென்டாரா? ஜெராக்ஸ் எடுக்க முடியுமா?’ என்றெல்லாம் கேட்டுள்ளனர். இப்படி சிறிய அளவில் செயல்பட்டு, 2022ல் காலடி எடுத்து வைக்கும் போது எங்கள் குழுவை பெரிதுபடுத்தி, 7 பேராக மாறினோம். மூன்றாவது ஆண்டில் 10 பேர், நான்காவது ஆண்டில் 15 பேர், ஐந்தாவது ஆண்டில் 20 பேராக மாறினோம்.
Health Sector, E – Commerce, Digital Marketing, என கிடைக்கின்ற அனைத்து துறைகளிலும், Website, Mobile App, Survey Work, Marketing என அனைத்து Projectகளையும் எடுத்தோம். குழு எப்படி பெரியதானதோ அதேபோல வருமானமும் உயர்ந்தது. முதல் ஆண்டில் 3 லட்சம், பின்பு 7 லட்சம், மூன்றாவது ஆண்டில் 10 லட்சம், 30லட்சம் என உயர்ந்துகொண்டே சென்றது.
“எங்கள் குழுவின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் எங்களின் அறிவு தான். சிறிய குழு என்றாலும் தினமும் படிப்பது, அதை Discuss செய்வது என, புதியதாக எந்த அப்டேட் வந்தாலும் சரி, Technical study வந்தாலும் எங்கள் குழு அதை படித்திருக்கும். இந்த அறிவு, எனது அனுபவத்தை வைத்து இன்று AI தொழில்நுட்பங்களுடன் கூடிய பல அதிநவீன Software, Mobile App தயாரித்துக்கொடுள்ளோம்,” என்றார் உற்சாகமாக.
லோக்கல் டூ க்ளோபன்
நாமக்கல் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருக்கும் இவர்கள், முதலில் தமிழக அளவிலான சிறு கம்பெனிகளுக்கு Projects செய்து கொடுத்துள்ளனர். படிப்படியாக தேசிய அளவு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கத்தார் என பல நாடுகளைக் கடந்து தற்போது, ஜெர்மனி என, 7 நாடுகளுக்கு தொடர்ச்சியாக Software development சேவைகளை வழங்கி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, திருப்பூர் மாநகராட்சிக்கு ஒரு Survey-க்காக Software Develop செய்து கொடுத்துள்ளனர்.
“இந்த Project கிடைப்பதற்கு மிகவும் போராடினோம். 25 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு பெரு நிறுவனத்துடன் போட்டியிட்டு, எங்கள் அறிவை வெளிக்காட்டி அதைப்பெற்றோம். கல்வித் துறையில் பெரிய அளவில் அனுபவம் இல்லையென்றாலும் இந்த Projectயை பெற்றோம்.”
திட்டம் என்னவென்றால், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் 10ம் வகுப்பு மாணவர்கள், 12ம் வகுப்பு மாணவர்களிடம் சர்வே நடத்த பயன்பட்டது. ஏன் குறிப்பிட்ட பாடத்தில் மார்க் குறைவு அல்லது Fail, அந்த பாடம் பிடிக்கவில்லையா அல்லது ஆசிரியர் மீது ஏதேனும் புகாரா? படித்து முடித்தபின் அடுத்த திட்டம் என்ன? Engineering, Arts அல்லது Medical? இப்படி பல தகவல்களை சேகரித்து அதை ஒருங்கிணைப்பது தான் அந்தப்பணி.
இதை நாங்கள் முடித்த பிறகு மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து, அவர்களின் அடுத்த திட்டம் என்ன? மாநகராட்சி பள்ளிகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதை அறிய முடிந்தது. இந்த பணிக்காக அரசு சார்பில் எங்களுக்கு பெரும் அங்கீகாரமும் கிடைத்தது.
தற்போது, சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு QR வழியாக செயல்படும் அடையாள அட்டையை நோயாளியுடன் வரும் உதவியாளருக்கு கொடுக்கும் Project செய்து கொடுத்துள்ளோம். மருத்துவமனைகளில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க, இந்த QR பயன்படுத்தி அடையாள அட்டையை காண்பித்து தான் உதவியாளர் மருத்துவமனைக்கு வந்து நோயாளியை பார்க்க முடியும். உதவியாளர், நோயாளி விபரம், எத்தனை முறை எந்த நேரங்களில் வந்து சென்றார் என அனைத்து விபரங்களும் வந்துவிடும்.
குக்கிராமத்தில் இருக்கும் நாங்கள், தமிழ்நாடு அரசுக்கும், பல உலக நாடுகளுக்கும் இன்று Software சேவைகளை வழங்கி வரும் Successful கம்பெனியாக இயங்கி வருகிறோம்.
‘‘வெறும் ஒரு பணியாளருடன் துவங்கிய கம்பெனி இன்று 26 ஊழியர்களுடன், 2025ம் ஆண்டில் மட்டுமே 1.5 கோடி ரூபாய்க்கு Projects செய்துள்ளோம். இதில், 20 சதவீதம் என்னுடைய லாபம். 2026ல் 3 கோடி ரூபாயை அடைந்துவிடுவோம்,’’ என்கிறார் உறுதியுடன்.
MNC-க்கள் மட்டுமே டாமினேட் செய்யும் Software துறையில் சிறிய கம்பெனியாக, குக்கிராமத்தில் இருந்து வந்த நாங்களும் எங்கள் அறிவு, நம்பிக்கையை வைத்து தடம் பதித்துள்ளோம்.
‘Yaa Creations‘ கம்பெனியின் இந்த வெற்றிக்குப்பின், என் மீது அதீத நம்பிக்கையும், அன்பும் வைத்து எனக்கு Support செய்யும் அன்பான குடும்பம், என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணிக்கும் என் கம்பெனியின் தூண்களான அறிவார்ந்த குழுவினர் தான் காரணம்,‘‘ என்கிறார் பெருமையுடன்.

எங்கள் கம்பெனி சிறியதாக இருக்கலாம். ஆனால், எங்கள் நோக்கங்கள் கனவுகள் மிகப்பெரியது. ஒரு குடும்பம் போல, சகோதரத்துவத்துடன் கம்பெனி நடக்கிறது. நல்ல Friendly atmosphere, மெட்ரோ சிட்டி அளவிற்கான சம்பளம், குறித்த நேரத்தில் விடுமுறை இருப்பதால், என் கம்பெனியில் பணிக்கு வந்து வெளியில் செல்வோரின் சதவீதம் என்பது 0.20 சதவீதம் கூட இல்லை.
‘‘நாம் எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறோம், எங்கு இருக்கிறோம் என்பதெல்லாம் முக்கியமில்லை. நாம் நம் அறிவையும், மனதையும் எப்படி வளர்க்கிறோம், எந்தமாதிரியான நோக்கத்தை நோக்கி ஓடுகிறோம் என்பதைப் பொருத்துதான் அனைத்தும் கிடைக்கும்,” என்கிறார் ஈஸ்வரன் நம்பிக்கையுடன்.