
இந்தியாவின் ’கிக்’ பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப உணவு டெலிவரி, குவிக் காமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கான பணியாளர் தேவையும் அதிகரிக்கிறது.முன்கள பணிகளுக்கான நேர்காணல் முறை வேகமாக இருந்தாலும், நிறுவனங்கள் பல நேரங்களில் செயல்திறனற்ற நேர்காணல் முறையால் அவதிப்படும் நிலை உள்ளது.
இந்த பின்னணியில், குருகிராம் மற்றும் பெங்களூருவை தலைமையகமாக கொண்ட 'ஹுனார்.ஏஐ' (Hunar.AI) பெரிய அளவிலான பணி நியமனத்தை ஏஐ கொண்டு வேகமாகவும், நம்பகமாகவும் மாற்றி வருகிறது.

2021 ம் ஆண்டு கிருஷ்ணா கன்டேல்வால் (சி.இ.ஓ), சாந்தனு பட்டாச்சாரியா (சி.டிஓ), ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனம், புளுஜே வொர்க்டெக் லிட் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருவரும், லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட் அப் லோகசில் பணியாற்றிய போது, முன்கள பணியாளர்கள் நியமனத்தில் உள்ள பிரச்சனைகளை கவனித்தனர்.
அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்ற சாந்தனு, பயோ பிசிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அனுபவம் உள்ளவர், சில ஆண்டுகளில் இந்தியா திரும்பினார். அதன் பிறகு, லோகஸ் நிறுவனத்தின் முதன்மை தரவு விஞ்ஞானியாக இணைந்தவர், வர்த்தக குழுவை வழிநடத்திய கிருஷ்ணாவை சந்தித்தார். லாஜிஸ்டிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கான பணி நியமன பிரச்சனைகள் பற்றி அவர்கள் அடிக்கடி உரையாடினர்.
“களத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மத்தியில் குறைந்த நம்பிக்கையே இருக்கிறது. அவர்கள் தாங்கள் தவறாக நடத்தப்படுவதாக உணர்கின்றனர். இதனிடையே, பணியாளர்கள் விலகிச்செல்லலாம் என்பதாலும், குறிப்பிட்ட திறன் இல்லாதவர்கள் என்பதாலும் நிறுவனங்கள் இவர்களுக்காக முதலீடு செய்வதில் கவனம் செலுத்தவில்லை,” என்று யுவர்ஸ்டோரியிடம் பேசிய சாந்தனு கூறுகிறார்.
எனினும், நிறுவனம் மற்றும் பணியாளர்கள் இடையிலான இந்த இடைவெளி மிகப்பெரிய பிரச்சனையாக அமைகிறது. டெலிவரி அல்லது ரீடைல் பணிகளுக்கான நியமனம் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்கு தொடர்ச்சியாக நியமனங்கள் தேவை. தவறான நேரத்தில் பணியாளர்களை இழப்பது பாதிப்பை உண்டாக்கும்.
“இந்த செயல்முறையை வேகமாகவும், நம்பகமாகவும், இரு தரப்பினருக்கும் வெளிப்படையாகவும் மாற்ற தொழில்நுட்பம் உதவும் என நம்பினோம்,” என்கிறார் சாந்தனு.
ஹுனார்.ஏஐ அளிக்கும் தீர்வு, வேலைவாய்ப்பு விளம்பரம், சேகரம், சரி பார்த்தல், ஆவணமாக்கல், நேர்காணல், நியமனம் எல்லாவற்றையும் தானியங்கிமயமாக்குகிறது. இவை அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் மொபைல் சார்ந்த சாட் மேடைகளில் நிகழ்கின்றன.
எனினும், இதன் முதன்மை அம்சமாக ஏஐ சார்ந்த தகுது செயல்முறை அமைகிறது. இது நிறுவனங்கள் பரவலான பணியாளர் பரப்பை அணுகி, தரவுகள் சார்ந்து அலசி ஆராய்ந்து, தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய உதவுகிறது.
"இந்த பரப்பில் இருந்து 90 சதவீதம் சுருக்கி, பொருத்தமான நபர்களை மட்டும் தொடர்பு கொள்ளும் சாத்தியம் நேரம் மற்றும் உழைப்பை மிச்சமாக்குகிறது,” என்கிறார்.
பணியாளர்கள் சரி பார்த்தல் தவிர, வேலைவாய்ப்பு பக்கங்கள் உருவாக்கம், ஆவணங்கள் ஆய்வு, கடிதங்கள் அனுப்புவது மற்றும் நியமனங்களை நிறுவனம் மேற்கொள்கிறது. ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை வேகமாக பெற்று தாமதத்தை தவிர்க்கிறது.
இந்த சேவையை வாட்ஸ் அப் சார்ந்து உருவாக்குவது மிக முக்கிய முடிவாக அமைந்தது. இது தொடர்பாக நிறுவனத்திற்குள் உரையாடலும் நடைபெற்றது. பயனர் வீச்சு மற்றும் ஏபிஐ அணுகல் காரணமாக இது ஏற்ற மேடையாக கருதப்பட்டது.
"வாட்ஸ் அப் விநியோக ஆற்றல் வியக்க வைப்பது. வேறு எந்த செயலியையும் விட மக்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த மேடையை உருவாக்கிய பின், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமையும் ஆராயத்துவங்கினோம்,” என்கிறார் சாந்தனு.
ஹுனார் ஏஐ சேவைகள், மதிப்பீடு மற்றும் சூழல் பொருத்தம் ஆகியவற்றை கவனிக்கிறது. இந்த சேவைகள், இடையூறுகளை சமாளித்து, பின்னணி இறைச்சலை வடிகட்டி, பல மொழி பயன்பாட்டிற்கு வழி செய்வதாக கூறுகிறார்.
மேலும், வீச்சை அதிகமாக்க மெட்டா நிறுவனத்தின் பிற மேடைகள் மற்றும் வேலைவாய்ப்பு பலகைகளிலும் விரிவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் மிகவும் பொருத்தமானவை என்றாலும், வேறு பல வழிகளையும் ஆய்வு செய்வதாக கூறுகிறார்.
ரீடைல், உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகளில் 20க்கும் மேற்பட்ட பெரிய வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவிலான நியமனங்களை கவனித்து வருகிறது. லிசியஸ், ரீபெல் புட்ஸ், ஒன் எம்சிஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும். மாதாந்திர சந்தா மற்றும் பயனாளிகள் சார்ந்த பில்லிங் முறையை பின்பற்றுகிறது.
இந்த சேவை மெட்டாவின் ஏஐ மாதிரி மற்றும் ஓபன் ஏஐ ஏபிஐ கொண்டு உருவாக்கப்பட்டாலும், செயல்திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கான பிரத்யேக அடுக்குகளை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு இதன் குரல் வழி சேவை நாள் ஒன்றுக்கு 30,000 அழைப்புகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. இந்திய சந்தைக்கு ஏற்ற சூழலுக்காக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
"எல்லோரும் ஒரே அடிப்படையான ஏஐ மாதிரியை அணுகலாம் என்றாலும், நீங்கள் உருவாக்கும் முறை முக்கியமானது. ஒவ்வொரு ஏஐ உரையாடலும் சேமிக்கப்பட்டு, எதிர்கால உரையாடலின் தனிப்பட்ட தன்மைக்கேற்ற வகையில் அமைவதற்கான அடுக்கை உருவாக்கியுள்ளோம்,” என்கிறார்.
பெங்களூரு மற்றும் குருகிராமில் செயல்படும் நிறுவனம் 50 ஊழியர்களை கொண்டுள்ளது. டைட்டன் கேபிடல் மற்றும் டுகதர் ஃபண்ட் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 1.6 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
குடோஸ் நிறுவனம் போட்டியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. நிறுவனம் தனது சொந்த ஏஐ மாதிரியை உருவாக்குவதற்காக அறியப்படுகிறது.
“ஏபிஐ அழைப்புகள் மட்டும் அல்ல விஷயம். அதற்கு முன்னும் பின்னும் செய்வது முக்கியம்,” என்கிறார் சாந்தனு.
இந்த ஸ்டார்ட் அப் பல சவால்களை சந்தித்துள்ளது. இந்தியா போன்ற மிகவும் இறைச்சல் மிக்க, பல மொழி சூழலில் அதிக துல்லியத்தை நிருபிக்க மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்கிறார். இந்த சேவைகளை உருவாக்குவதற்கான திறமையாளர்கள் குழுவை நியமிப்பது இன்னொரு சவாலாக இருந்தது.
நிறுவனம் தற்போது உள்ளூர் சந்தையில் கவனம் செலுத்துகிறது.
“இந்தியாவில் இதன் செயல்பாட்டை உறுதி செய்து கொள்ள விரும்புகிறோம். இங்குள்ள இயக்க சூழல் சிக்கலானது. மற்ற பகுதிகளை பிறகு பரிசீலிப்போம்,” என்கிறார்.
வீடியோ மதிப்பீடுகள் மற்றும் மேம்பட்ட மோசடி சோதனைகள் உள்ளிட்ட அம்சங்களையும் உருவாக்கி வருகிறது. பணியாளர்களுக்கான வேலை வழிகாட்டுதல் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
அதே போல, நிறுவனங்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் மட்டும் அல்லாமல் நேரடி நியமனங்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: மேகா கோஷ், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan