பிரபல SaaS நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸின் நிறுவுநர் கிரீஷ் மாத்ருபூதம் டிசம்பர் 1, 2025 முதல் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்!
அமெரிக்க நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி சர்வீஸ் சாஃப்ட்வேர் நிறுவனமான 'ஃப்ரெஷ்வொர்க்ஸ்' (Freshworks) நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய SaaS துறையின் முக்கிய முகமானவருமான கிரீஷ் மாத்ருபூதம், டிசம்பரில் எக்ஸிக்யூட்டிவ் சேர்மன் (Executive Chairman) பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க மத்திய பங்கு பாதுகாப்பு ஆணையத்துக்கு (US SEC) ஃபைலிங் செய்யும் போது,
"இந்த முடிவு நிறுவனம் தொடர்பான எந்தவொரு கருத்து வேறுபாடுகளாலும் அல்ல; மாத்ருபூதம் தற்போது தன்னால் நிறுவப்பட்டுள்ள 'Together Fund' எனும் வென்ச்சர் கேபிட்டல் நிதியத்தை முழுமையாக கவனிக்க விரும்புகிறார் என்பதே காரணம்," என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு குறித்து கிரீஷ் மாத்ருபூதம் தன் லிங்க்டுஇன் பதிவில்,
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒரு சிறிய அலுவலகத்தில், ஒரு கனவுடன், கடன் வாங்கிய ஃபர்னிச்சர்களுடன் இந்தியாவிலிருந்தே உலக தரமான மென்பொருள் உருவாக்க முடியும், என்ற நம்பிக்கையுடன் நான் Freshworks-ஐ தொடங்கினேன்.
அந்த ‘கேரேஜில்’ தொடங்கிய பயணம், இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் ஒரு பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. நாஸ்டாக் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது, மற்றும், ’இந்தியாவிலிருந்தும் உலகளாவிய தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கலாம், என்பதை நிரூபித்தோம்.
இன்று, 2025 டிசம்பர் 1 முதல், நான் Freshworks நிறுவனத்தின் Executive Chairman பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இது எளிதான முடிவல்ல, ஆனால் இந்த கட்டத்தில் இது எனக்காக சரியானது என்று நம்புகிறேன்.
நமது நிறுவனத்தின் அடுத்த தலைவராகும் ராக்ஸான் ஆஸ்டினுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். என் மீதும் என் தொலைநோக்கின் மீதும் நான்கு வருடங்களுக்கு முன்பே அவர் நம்பிக்கை கொண்டார். இன்று வரை Freshworks மற்றும் அதன் எதிர்காலத்திற்கு அவர் முழு ஆதரவு அளித்து வருகிறார்.
Freshworks எனக்கு வெறும் ஒரு நிறுவனம் அல்ல — அது ஒரு குடும்பம், ஒரு சமூகம், மற்றும் ஒரு நிறைவேறிய கனவு. இது நடக்கக் காரணமான அற்புதமான குழுவுக்கும், ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கும் என்றும் நன்றி.
அடுத்து என்ன செய்வேன் என்றால்: Together Fund மூலம், புதிய தலைமுறை AI ஸ்டார்ட்அப்’களோடு பணியாற்ற நான் என் நேரத்தை செலவிடப் போகிறேன். நாம் ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துள்ளோம், மற்றும் இந்தியாவிடம் திறமையும், லட்சியமும் உள்ளது — உலகளாவிய தயாரிப்பு நாடாக மாறும் பொறுப்பு நமக்கே.
இந்த மறக்கமுடியாத பயணத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. Freshworks என்றென்றும் என் இருதயத்தில் இடம் பெற்றிருக்கும்.” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
Freshworks-ன் தொடக்கமும் வளர்ச்சியும்
2010-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட ஃப்ரெஷ்வொர்க்ஸ், கிரீஷ் மாத்ருபூதத்தின் தலைமையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. இந்நிறுவனம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரை வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய ஸ்டார்ட்அப்’பாக பெயர் பெற்றது.
கடந்த 2024 மே மாதத்தில், கிரீஷ் மாத்ருபூதம் தனது CEO பதவியிலிருந்து விலகி, Executive Chairman ஆக மாற்றப்பட்டார். அந்த நேரத்தில், அவர், "இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல; ஆனால் நிறுவனத்தின் எதிர்காலத்தையும், எங்கள் குழுவின் திறமையையும் நம்பியெடுத்த முடிவு," என்றே கூறினார்.
இப்போது, அவர் தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலையில், Board-இன் Lead Independent Director ஆக இருந்த ராக்ஸான் ஆஸ்டின் 2025 டிசம்பர் 1 முதல் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
சமீபத்திய காலாண்டு முடிவுகளின்படி, ஃப்ரெஷ்வொர்க்ஸ் 18% வளர்ச்சியுடன் $204.7 மில்லியன் வருமானத்தை அறிவித்துள்ளது. மேலும், 2025-ம் நிதியாண்டுக்கான முழு வருமானத்துக்கான வழிகாட்டுதலையும் உயர்த்தி, $822.9 மில்லியனுக்கும் $828.9 மில்லியனுக்கும் இடையே இருக்கும் எனக் கணித்துள்ளது. முன்பிருந்த வழிகாட்டுதல் $815.3M - $824.3M என இருந்தது. சரிசெய்யப்பட்ட நிகர வருமானம் $153மில் - $157மில் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.