+

'புதிய H-1B விசாக்களுக்கு மட்டும் $100,000 கட்டணம்; மற்றவர்களை பாதிக்காது' – டிரம்ப் நிர்வாகம் விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பணிக்குச் செல்வதற்கான H-1B விசாக்களின் கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக அதிகரித்ததையடுத்து உலகெங்கும் பதற்றம் அதிகரித்தது. ஆனால் புதிய உத்தரவின் கீழ் விதிக்கப்பட்ட $100,000 கட்டணம் புதிய H-1B விண்ணப்பங்களுக்கே மட்டும் பொருந்தும் என அமெரிக்க குடியுரிமை மற்ற

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பணிக்குச் செல்வதற்கான H-1B விசாக்களின் கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக அதிகரித்ததையடுத்து உலகெங்கும் பதற்றம் அதிகரித்தது. ஆனால், புதிய உத்தரவின் கீழ் விதிக்கப்பட்ட $100,000 கட்டணம் புதிய H-1B விண்ணப்பங்களுக்கே மட்டும் பொருந்தும், என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை (USCIS) தெளிவுபடுத்தியுள்ளது.

"நடப்பு H-1B விசா வைத்துள்ளவர்கள், அவர்களது விசா புதுப்பிப்புகள் மற்றும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது இந்த கட்டணம் பொருந்தாது, என USCIS அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்கள் இந்தக் கட்டண உயர்வால் பாதிக்கப்படாது. தற்போது அமெரிக்காவிற்கு வெளியே உள்ள விசா வைத்திருப்பவர்களும் நாட்டிற்குள் மீண்டும் நுழைவதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
h1b

ஏன் இந்த கட்டண உயர்வு? அமெரிக்க அரசு கூறுவதென்ன?

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறுகையில்,

"இந்த நடவடிக்கை அமெரிக்க வேலைவாய்ப்புகளை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற முறையில் விசாக்களை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் இது ஒரு சாதாரண நியாயமான தீர்வாகும். அமெரிக்க தொழிலாளர்களை முதன்மைப்படுத்துவதே இதன் நோக்கம்.. மேலும் இந்த பொது நன்மைக்கான நடவடிக்கை நிறுவனங்கள் அமைப்பை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்தும் ஊதியங்களைக் குறைப்பதிலிருந்தும் தடுக்கிறது,” என்றார்.

மேலும், அவர் விளக்கும் போது, “உண்மையில் உயர் திறன் கொண்ட பணியாளர்களை நமது மகத்தான நாட்டிற்குக் கொண்டுவர விரும்பும் அமெரிக்க வணிகங்களுக்கு இது உறுதியையும் அளிக்கிறது. இது இதுநாள் வரை துஷ்பிரயோகங்களால் காலில்போட்டு மிதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து குடியேற்றமற்ற தொழிலாளர்களின் நுழைவு மீதான கட்டுப்பாடு என்ற ட்ரம்ப்பின் பிரகடனம் இன்னும் தாக்கல் செய்யப்படாத மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று USCIS இயக்குனர் ஜோசப் எட்லோ பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

"அதிகரிக்கப்பட்ட விசா கட்டணம் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பயனாளிகள், தற்போது அங்கீகரிக்கப்பட்ட மனுக்களின் பயனாளிகள் அல்லது செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்ட H-1B குடியேற்றமற்ற விசாக்களை வைத்திருப்பவர்கள்," ஆகியோருக்கு இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பு பொருந்தாது.

"தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால்", $100,000 என்பது வருடாந்திர கட்டணம் அல்ல, ஆனால் புதிய மனுவிற்கு மட்டுமே பொருந்தும் ஒரு முறை கட்டணம் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் X-இல் பதிவிட்டுள்ளார்.

“ஏற்கனவே H-1B விசாக்களை வைத்துள்ளவர்கள், தற்போது நாட்டிற்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் நுழைவதற்கு $100,000 கட்டணம் வசூலிக்கப்படாது. H-1B விசா வைத்திருப்பவர்கள் வழக்கம்போல நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம்; அவர்கள் செய்ய வேண்டிய எந்த திறனுடைய வேலையும் நேற்றைய கட்டண உயர்வினால் பாதிக்கப்படாது.”
US Visa

உயர்த்தப்பட்ட கட்டணம் ஏற்கனவே நாட்டில் உள்ள H-1B விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்துமா, புதுப்பித்தல்களுக்குப் பொருந்துமா அல்லது முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்குப் பொருந்துமா என்று கேட்டபோது, ​​வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் பதிலளிக்கையில், புதுப்பித்தல்கள், முதல் முறையாக, நிறுவனம் முடிவு செய்ய வேண்டும். அந்த நபர் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு $100,000 செலுத்தும் அளவுக்கு மதிப்புமிக்கவரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அப்படி இல்லையா அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அமெரிக்கரை அந்த இடத்திற்கு தேர்வு செய்ய வேண்டும்.

பணியாற்றும் காலம் மொத்தம் ஆறு வருடங்களாக இருக்கலாம், எனவே வருடத்திற்கு $100,000. அந்த நபர் நிறுவனத்திற்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் மதிப்புமிக்கவராக இருக்கலாம், அல்லது அவர்கள் வெளியேறப் போகிறார்கள், அல்லது நிறுவனம் ஒரு அமெரிக்கரை வேலைக்கு அமர்த்தப் போகிறது.

குடியேற்றம் என்பதன் அர்த்தமே அதுதான். அமெரிக்கர்களை பணியில் அமர்த்துங்கள், அப்படி வெளிநாட்டிலிருந்து வரவழைக்க வேண்டுமா, அவர் உண்மையில் திறமையில் டாப்பில் இருக்க வேண்டும். இலவசமாக விசாக்களைப் பெற்றுக் கொண்டு இந்த நாட்டில் வரும் அர்த்தமற்ற செயல் இனி நடக்காது. அதிபர் ட்ரம்ப் இதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறார். மதிப்பு மிக்கவர் மட்டும்தான் அமெரிக்காவுக்கு வர வேண்டும் நோ- நான்சென்ஸ்,” என்றார்.

ஹெச்1 பி விசா உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

  • இந்த புதிய கட்டணம் ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டியதாகும்.

  • இது முதன் முறையாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கே பொருந்தும்.

  • செப்டம்பர் 21, 2025க்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட H-1B விண்ணப்பங்களுக்கு இது பொருந்தாது.

  • தற்போது H-1B விசாவுடன் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப விரும்புவோருக்கும் இந்த கட்டணம் தேவையில்லை.

  • இது விசா புதுப்பிப்புகளுக்கு பொருந்தாது.

இந்த அறிவிப்பின் மூலம், அமெரிக்காவில் H-1B விசாவுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. முன்னதாக, இந்த கட்டணம் அனைத்துப் பயணங்களுக்கும் பொருந்தும் எனத் தவறான தகவலால் பலர் பயணங்களை ரத்து செய்தனர், மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்ப முயன்றோர் பதட்டமடைந்தனர்.

H-1B விசா ஒரு non-immigrant விசாவாகும். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறையில் நிபுணத்துவம் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நியமிக்க அனுமதிக்கிறது. இந்த விசா முதலில் மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும், மேலும் மற்றொரு மூன்று ஆண்டுகள் வரை புதுப்பிக்கலாம்.

சுருக்கமாக: டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள $100,000 H-1B விசா கட்டணம், புதிய விண்ணப்பங்களுக்கே பொருந்தும். நடப்பு விசா வைத்திருப்பவர்களுக்கும், விசா புதுப்பிக்க விரும்புவோருக்கும் இது பொருந்தாது என USCIS மற்றும் வெள்ளை மாளிகை உறுதியாக தெரிவித்துள்ளது.

facebook twitter