தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம், என அனைத்து தரப்பும் தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் தகவலை எஸ்எம்எஸ் மற்றும் இணைய வழியில் எளிதில் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.
எஸ்ஐஆர் பணிக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த தயாராக உள்ள இந்த வேளையில், தங்களது வாக்குச்சாவடி, வாக்காளர் பட்டியலின் பாகம், அதன் வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை வாக்காளர் சீட்டு மூலம் அறிந்து கொள்ளலாம். இதே விவரத்தை ஆன்லைன் மூலம் அறிய முடியும். இதற்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண் தேவைப்படுகிறது.
அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, வாக்காளர் இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in தளத்தில் மிக எளிதாக சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ள வாக்காளர் அனைவரும் இந்த விவரத்தை பெற முடியும்.
வாக்காளர் தகவலை இணைய வழியில் பெறுவது எப்படி?
- இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in இணையதள பக்கத்தில் சேவை (Services) பிரிவில் உள்ள வாக்காளர் பட்டியலில் ‘உங்கள் பெயரை தேடுங்கள்’ (Search you Name in Voter List) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் ‘வாக்காளர் அடையாள அட்டை (Search by EPIC) எண்’ மூலம் தேடுக என உள்ள ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பின்னர், மொழியை தேர்வு செய்யுமாறு கேட்கப்படும்.
- அதில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் எண் மற்றும் மாநிலத்தை உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து Captcha கோடினை உள்ளிட்டு ‘Search’ என உள்ள ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பின்னர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளரின் பெயர், வயது, உறவினர் பெயர், மாநிலம், மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி, பாகம் மற்றும் வரிசை எண், வாக்குச்சாவடி மையம் மற்றும் அதன் முகவரி உள்ளிட்டவை டிஸ்பிளே ஆகும்.
- அதன் பக்கத்தில் ‘ஆக்ஷன்’ என்ற பிரிவில் விவரங்களை பார்வையிட என உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் மேலே சொன்ன வாக்காளரின் விவரங்களுடன் தேர்தல் தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
- அதில் வாக்காளர் தகவலை அச்சிடவும், என உள்ள லிங்கை கிளிக் செய்தால் வாக்காளர் தகவலை பிடிஎஃப் ஃபைல் வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- இந்த விவரங்களை கொண்டு வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தலாம். இது ஆவணமோ அல்லது அடையாள அட்டையோ அல்ல. இதோடு வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.
- தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள் வாக்காளர் விவரத்தை விரைந்து சரி பார்க்க மட்டுமே இந்த ‘வாக்காளர் தகவல்’ சீட்டு பயன்படுகிறது.
- இதே வாக்காளர் தகவல் விவரத்தை தேர்தல் ஆணையத்தின் ECINET என்ற மொபைல் செயலி வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.
- அதிலும் இதே நடைமுறைதான். மொபைல் செயலி என்பதால் வாக்காளர் அட்டை எண், வாக்காளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், க்யூ.ஆர் கோட் அல்லது பார் கோடினை (இது வாக்காளர் அட்டையில் இருக்கும்) ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் தேடி பெறலாம்.
வாக்காளர் தகவலை எஸ்எம்எஸ் மூலம் அறிவது எப்படி?
- வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை மிகவும் எளிதாக எஸ்எம்எஸ் மூலமாகவும் வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- எஸ்எம்எஸ் மூலம் விவரங்களை அறிய ‘1950’ என்ற எண்ணுக்கு வாக்காளர்கள் மெசேஜ் செய்ய வேண்டும்.
- ECI என டைப் செய்து ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை சேர்த்து 1950-வுக்கு மெசேஜ் செய்ய வேண்டும்.
- நீங்கள் கேட்ட விவரங்களை விரைந்து அனுப்புகிறோம் என இந்திய தேர்தல் ஆணையம் மெசேஜ் மூலம் பதில் தரும்.
- அடுத்த சில நிமிடங்களில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகத்தின் எண், சட்டப்பேரவைத் தொகுதி, மாவட்டம் மற்றும் மாநிலம் உள்ளிட்ட விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் அறியலாம்.
வாக்காளர்கள் கவனத்துக்கு: சைபர் கிரைம் பிரிவு அலர்ட்
‘வாக்காளர் விவரங்களை சரிபார்க்க’ வேண்டும், என லிங்க் உடன் வரும் மோசடி மெசேஜ் குறித்து தமிழக சைபர் கிரைம் பிரிவு மக்களை அலர்ட் கொடுத்துள்ளது. இதற்காக பிரத்யேக அனிமேஷன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
- ‘உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் அப்டேட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்’
- ‘உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்’
- ‘உங்கள் வாக்காளர் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் அண்மையில் வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்’
- ‘நீங்கள் அப்ளை செய்த உங்கள் வாக்காளர் அட்டையின் விவரம் உங்கள் ஆதார் கார்டில் அப்டேட் ஆகவில்லை. அதை உடனே அப்டேட் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்,’ என வாக்காளர்களுக்கு மெசேஜ் வருகிறது.
இப்படி உங்கள் வாக்காளர் அடையாள தொடர்பாக வரும் எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில், தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு எந்தவொரு லிங்கையும் அனுப்பாது. இணையவழி களவாடிகள் தனிநபர் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்டவற்றை அறிய இது மாதிரியான மோசடி மெசேஜ்களை அனுப்பலாம்.
மேலும், உங்கள் வாக்காளர் அட்டை சார்ந்த தகவல்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது சைபர் கிரைம் பிரிவை தொடர்பு கொள்ளலாம், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan