மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
இருபத்தொரு வயதான ஆல்ரவுண்டர் ஷஃபாலி வர்மா, 87 ரன்களையும் பிற்பாடு 2 முக்கியமான விக்கெட்டுகளை முக்கியமான தருணத்தில் வீழ்த்தி ஆட்ட நாயகி விருது வென்றார். இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது. கடைசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு இழந்தது தென் ஆப்பிரிக்கா.
இந்திய அணியில் தீப்தி சர்மா 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகி விருதைத் தட்டிச் சென்றார். 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முறையே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தோற்று, உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா இரண்டு முறை நெருங்கி வந்த பிறகு இது ஒரு கனவு வெற்றியாகும்.
நவம்பர் 19, 2023 அன்று ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றபோது ஏற்பட்ட காயத்தின் வடுக்களை டி20 உலககக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பைகளை வென்று குணப்படுத்தினர். அப்போது 2023 ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது ஸ்டேடியத்தில் இருந்த மகளிர் உலகக்கோப்பை வெற்றிக் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் இந்திய அணியின் வெற்றிக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்த காட்சியைப் பலரும் பார்த்திருப்பர்.
அப்போதே ஹர்மன்பிரீத் முடிவெடுத்திருப்பார் நாம் இந்தியாவில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பையை வென்றேயாக வேண்டும் என்று. நேற்று கடைசியில் நடைன் டி கிளார்க் அடித்த ஷாட்டை எக்ஸ்ட்ரா கவர் திசையில் கவுர் பின்னாலேயே சென்று கேட்ச் எடுத்த தருணத்தை மே.இ.தீவுகளின் வர்னணையாளர் இயன் பிஷப் ”உத்வேகமான தலைமுறைகள்” என்று வர்ணித்தது எத்தனைப் பொருத்தமானது.
அதுவும் வெற்றி பெற்ற போது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடல் அந்த உற்சாகத்திற்கு ஒரு கவித்துவ வாசனையை அளித்தது. இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் தான் இந்திய அணிக்காக ஆடாவிட்டாலும் ஒரு உலகக்கோப்பை வெற்றியில் பங்கேற்றிருப்பதை நிச்சயம் வாழ்நாளில் மறக்க மாட்டார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
"ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமை மற்றும் நம்பிக்கையைக் காட்டுகிறது" என்று அவர் X இல் ஒரு பதிவில் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, "இந்தத் தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக அணியாகத் திரண்டு ஆடியதையும், அவர்களது விடாமுயற்சியையும் காட்டியது. எங்கள் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும்," என்றார்.
Lok Sabha Speaker Om Birla கூறும்போது, “2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! என்ன ஒரு தைரியம், திறமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடு. நீங்கள் ஒரு கோப்பையை வென்றது மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள இதயங்களையும் வென்றுள்ளீர்கள். ஒவ்வொரு இந்தியரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறார்கள்! 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா'. இந்திய கிரிக்கெட்டுக்கும் விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களுக்கும் ஒரு பொன்னான தருணம்!" என்று அவர் X-ல் கூறினார்.