இந்தியாவின் முன்னணி ரைடு-ஹெய்லிங் தளமான Rapido, Prosus தலைமையில் நடைபெற்ற புதிய முதலீட்டு சுற்றில் 240 மில்லியன் அமெரிக்க டாலர் முதன்மை நிதியை திரட்டியுள்ளது. இந்த முதலீட்டில் WestBridge Capital, Accel உள்ளிட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த முதலீட்டின் மூலம் நிறுவனத்தின் பிந்தைய நாணய மதிப்பீடு 3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
ராபிடோ வெளியிட்ட அறிக்கையில், இந்த நிதி புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்யவும், ஏற்கனவே செயல்பட்டு வரும் நகரங்களில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மனிதவள முதலீட்டிலும் கவனம் செலுத்தப்படும், என கூறப்பட்டுள்ளது.
இந்த முதலீடு, மொத்தம் 730 மில்லியன் டாலர் மதிப்பிலான primary மற்றும் secondary financing ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா கூறுகையில்,
“ராபிடோவில், இயக்கத்தின் உண்மையான அளவுகோல் என்பது பயணங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல; அது உருவாக்கப்படும் வாழ்வாதாரங்களும்தான் என்று எப்போதும் நாங்கள் நம்புகிறோம். இந்த முதலீடு, அந்த இரண்டையும் கட்டமைப்பு ரீதியாக விரைவாக விரிவுபடுத்துவதற்கான எங்கள் திறனை அதிகரிக்கும். தேவை அதிகமாக இருந்தாலும், சேவை வழங்கல் இன்னும் சிதறலாகவே உள்ளது. சந்தைகளில் நாங்கள் ஆழமாகச் சென்று, கேப்டன்களுக்கு நிலையான, எதிர்பார்த்த வருமானத்தை வழங்கும் வலுவான வலையமைப்பை உருவாக்குகிறோம்,” என்றார்.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராபிடோ தற்போது இந்தியாவின் 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. பைக் டாக்ஸி, ஆட்டோ ரிக்ஷா, கார் சேவை, பார்சல் டெலிவரி, விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் உணவு விநியோகம் போன்ற பல்வேறு சேவைகளை நிறுவனம் வழங்கி வருகிறது.
இதுபற்றி அஷுடோஷ் சர்மா கூறுகையில்,
“இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடிப்படை அத்தியாவசியமாக மொபிலிட்டி துறை உருவெடுத்து வருகிறது. இது பொருளாதார பங்கேற்பை பெரிய அளவில் அதிகரிக்கும் திறன் கொண்டது. அணுகல் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பெரிய சவால்களுக்கு தீர்வு வழங்கிக்கொண்டே, நிலையான வளர்ச்சியை நோக்கி ராபிடோ நகரும் திறன் மீது எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது,” என்றார்.
அடுத்த கட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக, பெண்கள் அதிக அளவில் தளத்தில் இணையவும், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அணுகல் வசதிகளை மேம்படுத்தவும் ராபிடோ சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், Tier-I நகரங்களுக்கு அப்பாற்பட்ட சந்தைகளிலும் பெரும் வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.
சுமிர் சத்தா, கூறுகையில்,
“மலிவான கட்டணம், செயல்திறன் மற்றும் ஓட்டுநர் அதிகாரமளிப்பு ஆகியவற்றில் ராபிடோ காட்டும் கவனம் தொடர்ந்து பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது. அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அவர்கள் நகரும் இந்த கட்டத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
அபிநவ் சதுர்வேதி கூறுகையில், “ராபிடோ சாதாரண point-to-point mobility சேவையைத் தாண்டி, அதிக அடிக்கடி பயன்படுத்தப்படும் hyperlocal network ஒன்றை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு புதிய பயணியும் கேப்டனும் இணையும் போதும் அதன் network effect மேலும் வலுவடைகிறது,” என்றார்.
ராபிடோவின் இந்த புதிய நிதி திரட்டல், இந்தியாவின் வாடகைச் சவாரி வாகனப் போக்குவரத்துத் துறையில் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகுவதோடு, Uber மற்றும் Ola போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கும் சவால் எழுந்துள்ளது. Namma Yatri நிறுவனமும் இந்த துறையில் முக்கிய போட்டியாளராக உருவெடுத்து வருகிறது.