
ஒருகாலத்தில் அமெரிக்கா செல்லும் விசா மறுக்கப்பட்ட இளைஞர் இன்று உலகளவில் கவனம் பெற்ற விண்வெளிப் புத்தாக்க ஊக்கியாக உயர்ந்துள்ளார். ஆனந்த் மேகலிங்கம் தற்போது இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் மிகவும் பேசப்படும் பெயர்களில் ஒருவராக திகழ்கிறார்.
அமெரிக்க அரசுத் துறையால் தேர்வு செய்யப்பட்ட சர்வதேச தலைமைத்துவ திட்டத்தில் பங்கேற்று, நாசா வழிநடத்திய மேம்பட்ட பயிற்சிகளையும் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 23 நிபுணர்களில் ஒருவராக அவர் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த சாதனையை அவர் அடைந்தது ‘கேக் வாக்’ இல்லை, அவ்வளவு சவுகரியமாக எட்ட முடியவில்லை. இதற்குப் பின்னால் மிகுந்த போராட்டம் நிறைந்த வாழ்க்கைப் பயணம் உள்ளது. கிராமப்புறத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆனந்த் மேகலிங்கத்தின் தந்தை குடும்பத்தை நடத்த டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றினார். சிறிய கூரை வீட்டில் வசத்துவந்த ஆனந்த், சிறுவயதில் பள்ளிக்கு தினமும் சுமார் ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று, வாழ்க்கையின் கஷ்டங்களை மிகவும் இளம் வயதிலேயே எதிர்கொண்டார்.
கனவை நோக்கிய பயணம்
தொடக்கத்தில் நிலையான வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணினி அறிவியல் படிப்பில் ஆனந்த் மேகலிங்கம் சேர்ந்தாலும், அதில் தனது ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்தார். கல்வியில் சிரமங்களை சந்தித்த அவர், அந்த படிப்பை விட்டு வெளியேறினார். பலருக்கு அது தோல்வியாக தோன்றியிருக்கும். ஆனால், ஆனந்திற்கு அது தனது உண்மையான கனவை நோக்கி எடுத்த முதல் முக்கியமான முடிவாக மாறியது.
அதன்பின், அவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். அங்கு அவர் சிறந்து விளங்கி, 9.8 CGPA மதிப்பெண்களுடன் தங்கப்பதக்கம் பெற்றார். ஒரு சாதாரண மாணவராக இருந்தவர் இந்தியாவின் முன்னணி விண்வெளி புத்தாக்க நிபுணர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
இந்தியாவும் உலக விண்வெளி போட்டியில் முன்னணி நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் ’Space Zone India’ நிறுவனத்தை தொடங்கினார். இந்த முயற்சியில் அவரது முதல் துணை அவரது தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த வளங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் இந்தியாவின் முக்கிய தனியார் விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. அவரது தலைமையில் RHUMI-H என்ற இந்தியாவின் முதல் மீள்பயன்பாட்டு ஹைபிரிட் ராக்கெட் மொபைல் தளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொடர்ந்து RHUMI-1 திட்டமும் சர்வதேச விண்வெளி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது.
தடைகள் தாண்டி நாசா விஞ்ஞானி ஆன ஆனந்த் மேகலிங்கம்
இவ்வளவு சாதனைகள் இருந்தபோதும், ஒருகட்டத்தில் அவரது அமெரிக்க விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பின்னர் அவரது வாழ்க்கை தத்துவமாக மாறியது.
“எல்லைகள் மனிதர்களுக்காக இருக்கலாம்; புதுமைக்கு எல்லைகள் கிடையாது,” என்று அவர் கூறியிருந்தார்.
அதன்பின், நடந்த மாற்றமே இன்று பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒருகாலத்தில் அனுமதி மறுக்கப்பட்ட அதே அமெரிக்கா, பின்னர் அவரை நாசா வளாகங்களில் சிறப்பு விருந்தினராக வரவேற்றது. கடுமையான சர்வதேச தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நாசா விஞ்ஞானிகள், விண்வெளி நிபுணர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் ஸ்பேஸ் ஃபோர்ஸ் கட்டுப்பாட்டாளர்களுடன் நேரடியாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்த பயிற்சிகள் மூலம் விண்வெளி தொழில்நுட்பம், பாதுகாப்பு அமைப்புகள், ஏவுதள கட்டமைப்புகள் மற்றும் புதுமை மேலாண்மை தொடர்பான மேம்பட்ட அறிவுகளை அவர் பெற்றுள்ளார்.
“அமெரிக்க விண்வெளி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிக உயர்ந்தது. அங்கு கற்றுக்கொண்ட அனுபவங்களை இந்தியாவில் வரும் திட்டங்களில் பயன்படுத்த உள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ராக்கெட் புரட்சி செய்யும் நிறுவனம்
தற்போது ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம் அடுத்த கட்டமாக “RHUMI Twin Mission” திட்டத்தை தயாரித்து வருகிறது. சென்னை நகரிலிருந்து ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவுவது இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும். இதனுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், மீள்பயன்பாட்டு ஏவுதளங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த மேம்பட்ட அமைப்புகளிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
“எங்களின் இலக்கு ராக்கெட்டுகளை ஏவுவது மட்டும் அல்ல. இந்தியாவை வலிமையான, பாதுகாப்பான மற்றும் உலகம் மதிக்கும் தொழில்நுட்ப நாடாக மாற்றும் அமைப்புகளை உருவாக்குவதுதான்,” என்று ஆனந்த் மேகலிங்கம் கூறியுள்ளார்.
டிராக்டர் ஓட்டுநரின் மகனாக தொடங்கிய வாழ்க்கை இன்று நாசா வளாகம் வரை சென்றுள்ளது. ஆனந்த் மேகலிங்கம் அவர்களின் பயணம், தோல்வி முடிவல்ல, நிராகரிப்பு நிரந்தரமல்ல, கனவுகளை விடாமுயற்சியால் வெல்ல முடியும் என்பதற்கான உயிர்ப்புள்ள எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.