
ஐஐடி மெட்ராஸ்-ன் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்திற்கான இந்திய மைய (India Centre for Lab Grown Diamond – InCent-LGD) ஆராய்ச்சி குழு, வைரத்தைப் பயன்படுத்தி குவாண்டம் தொழில்நுட்பம், போட்டோனிக்ஸ், சென்சிங், மெட்ராலஜி ஆகிய துறைகளில் இந்தியாவின் ஆராய்ச்சியை உலக அரங்கிற்கு கொண்டு செல்கிறது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட இந்த ஆய்வுக் குழு, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரத்தொழில் துறையில் இந்தியாவை உலகளவில் முன்னணி நாடாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், இந்திய ஸ்டார்ட்-அப் களுக்கும் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படும். இதன் மூலம், ரத்தினத் தரம், மின்னணு தரத்திலான வைரங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா சுயசார்பு பெறும்.
தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி, ஏற்றுமதியை உயர்த்தி, புத்தாக்கம், தொழில் முனைவுத்திறன் ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இந்த ஆராய்ச்சி குழு,
“வைரம் மற்றும் வளர்ந்துவரும் பொருட்கள்- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு (iCDEM 2026),” என்ற சர்வதேச மாநாட்டை 2026 மார்ச் 11 முதல் 13ம் தேதி வரை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடத்தியது.
இந்த மாநாடு வைர அறிவியல், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறை மின்னணு பொருட்களில் முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட உலகளாவிய மேடையாக அமைந்தது.
வைரத்தின் சிறந்த வெப்ப கடத்துத்திறன், கதிர்வீச்சு எதிர்ப்புத் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் வகையில், எரிசக்தி, விண்வெளி, ப்யூசன் சார்ந்த பயன்பாடுகளுக்கு வைரத்தையும் கார்பன் பொருட்களையும் பயன்படுத்துவது இம்மாநாட்டின் முக்கிய மையமாக இருந்தது.
பொருள் அறிவியல், மின்னணுவியல், குவாண்டம் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றும் ஏறத்தாழ 250 சர்வதேச மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
துல்லியம், அளவிடக்கூடிய தன்மை, தொழில்துறை பொருத்தத்தை உறுதி செய்வதற்காக, வைரங்கள் மற்றும் கார்பன் சார்ந்த பொருட்களின் உற்பத்தி முறைகளை மேம்படுத்த மாடலிங், சிமுலேஷன் மற்றும் ஏஐ/எம்எல்-மூலம் கண்காணிக்கப்படும் நுட்பங்கள் போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உள்ளடக்குவதிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.
“எங்கள் ஆராய்ச்சிக் குழுவின் நோக்கம், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத் தொழில்நுட்பங்களுக்கான நவீன வசதிகளை உருவாக்கும் தேசிய மையத்தை நிறுவுவதாகும். இது உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் மூலம் வைர வளர்ச்சி செயல்முறைகளை மேம்படுத்த உதவும். மேலும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத் துறைக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்கும் பயிற்சி பாடத்திட்டங்களையும் விரைவில் வழங்கத் தொடங்குவோம்.” என எம்எஸ் ராமச்சந்திரராவ், InCent-LGD, ஐஐடி மெட்ராஸ் முதன்மை ஆய்வாளர் தெரிவித்தார்.
மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய iCDEM 2026 தலைவரும் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியருமான எம்.எஸ். ராமச்சந்திரராவ், அடுத்த iCDEM-2027 மாநாடு 2027 ஜனவரி 27 முதல் 29ம் தேதிவரை வரை ஐஐடி மெட்ராஸ்-ல் நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்த மையத்தை நிறுவுவதற்காக, இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஆதரவுடன், 2023–2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுக்கான ஆராய்ச்சி நிதியாக ரூ.242.96 கோடி அறிவிக்கப்பட்டது. இந்த மையத்தின் பலன்கள், மேலும் பல ஸ்டார்ட்-அப்புகளுக்கு தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்து, வேலைவாய்ப்புகளை அதிகரித்து, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களின் ஏற்றுமதியை உயர்த்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும்.
முக்கிய மாநாட்டு விளைவுகள்
இந்த மாநாட்டின் முக்கிய முடிவுகள்:
- வைரம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
- ஆய்வக வைரங்களில் உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுயசார்பை மேம்படுத்துதல்.
- தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்காக கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரித்தல்.
Edited by Induja Raghunathan