
தென்கொரியாவில் உள்ள குமி நகரில், 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 43 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில், 59 வீரர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்களும் அடக்கம்.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில், இந்திய வீராங்கனையான ஜோதி யர்ராஜி, தனது இலக்கை சரியாக 12.96 வினாடியில் கடந்து, தங்கப் பதக்கம் வென்றதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு நடந்த போட்டியிலும், ஜோதி தங்கம் வென்றிருந்தார். தனது முந்தைய சாதனையை தற்போது மீண்டும் அவரே முறியடித்துள்ளார்.
தனது இந்த தடை ஓட்ட வெற்றியினால் மட்டுமல்லாமல், தன் வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி, சாதனை படைத்துள்ளதால், சமூகவலைதளப் பக்கங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறார் ஜோதி.

நிஜ வாழ்க்கையிலும் தடை ஓட்டம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜோதிக்கு தற்போது 25 வயதாகிறது. இவரது தந்தை சூர்யநாராயணா தனியார் நிறுவனமொன்றில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். தாயார் குமாரி அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்பவராகவும், தனியார் மருத்துவமனை ஒன்றில் துப்புரவு தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார்.
பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், தடகளம் மற்றும் கல்வியில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற தீவிர அர்ப்பணிப்பை சிறுவயதில் இருந்தே, தனது ஒவ்வொரு செயல்களிலும் வெளிப்படுத்தினார் ஜோதி. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்ற தெளிவு, அந்தக் குட்டிப் பெண்ணிடம் அப்போதே இருந்துள்ளது.
சிறுவயதில் இருந்தே தடை ஓட்டத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஜோதிக்கு, அவரது பள்ளியில் இருந்த உடற்கல்வி ஆசிரியரே முதல் தடகள ஆசானாக இருந்துள்ளார். ஆங்காங்கே நடந்த போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். அவரது வெற்றிக்கு, அவரது உயரமும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் சிறு சிறு போட்டிகளில் விளையாடிய ஜோதிக்கு மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் கிடைத்த வெற்றி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியான, ஹைதராபாத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அங்கிருந்த திறமையான தடகள பயிற்சியாளர்களின் சரியான வழிகாட்டுதல், ஜோதியின் திறமையை மேலும் மெருகேற்ற உதவியது. அதன் பலனாக அடுத்தடுத்து கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் வெற்றிகளைக் குவித்தார் ஜோதி. அவரது திறமைக்கு கிடைத்த பரிசாக, ரிலையன்ஸ் அறக்கட்டளை அவருக்கு பயிற்சி அளிக்க முன்வந்தது. இது தேசிய அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.

பின்னடைவுகளும் உண்டு
ஜோதியின் வாழ்க்கையில் வெற்றிகள் மட்டுமே இல்லை... பல பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்தது. காயங்கள் காரணமாக அவர் சில மாதங்கள் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டி இருந்தது. தேசிய சாதனைகளை முறியடிக்க அவர் பலமுறை முயன்றும் நூலிழையில் அந்த வாய்ப்புகள் பறி போனது. ஆனாலும் தனது தோல்விகளால் அவர் சோர்வடையவில்லை. ஒவ்வொரு தோல்விக்கும் பின்பும், பின்னடைவிற்குப் பின்னும் பன்மடங்கு சக்தியுடன் மீண்டும் களத்தில் இறங்கினார் ஜோதி.
தொடர் பயிற்சி மற்றும் முயற்சிகளின் பலனாக, 2022ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில், 12.7 வினாடிகளில் தனது தனிப்பட்ட சாதனையைப் பதிவு செய்தார். இதன்மூலம் மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றையும் ஜோதி படைத்தார்.
தொடர்ந்து தனது முந்தைய சாதனைகளைத் தானே முறியடித்து, மேலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார் ஜோதி. இந்தியாவின் வேகமான பெண் தடை தாண்டும் வீராங்கனை என்ற பெருமையையும் ஜோதி பெற்றுள்ளார். தற்போது ஆசிய தடகளப் போட்டியில் அவரது வெற்றி, அவரது வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரத்தைச் சேர்ந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

வாழ்த்துகளும், பாராட்டுகளும்
ஜோதியின் இந்த சாதனையைப் பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஆந்திர மாநில முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
“தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்தியாவின் வேகமான பெண் தடை தாண்டும் வீராங்கனையும், தெலுங்கு மகளுமான ஜோதி யர்ராஜிக்கு வாழ்த்துக்கள். அவர் நாட்டையும் ஆந்திராவையும் பெருமைப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” எனப் பாராட்டியுள்ளார்.
இதேபோல், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியும் ஜோதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது நேர்காணல்களில், ‘ஜோதி தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தவும், அவரது பெற்றோரின் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்புவதாக’ கூறியது குறிப்பிடத்தக்கது.