+

TCS ஊழியர்கள் பணி நீக்கம் - விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஐடி அமைச்சகம்!

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2026 நிதியாண்டில் அதன் உலகளாவிய பணியாளர்களை சுமார் 2% அல்லது தோராயமாக 12,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவு குறித்து கவலையடைந்துள்ள மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவன நிர்வாகத்திடம் வி

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2026 நிதியாண்டில் அதன் உலகளாவிய பணியாளர்களை சுமார் 2% தோராயமாக 12,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவு குறித்து கவலையடைந்துள்ள மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவன நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

Moneycontrol அறிக்கையின் படி, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு போன்ற எழுச்சி பெறும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக டிசிஎஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய ஐடி அமைச்சகம் நிலவரங்களை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது.

வெளியே அனுப்பப்படும் ஊழியர்களில் பெரும்பாலும் மிடில் மற்றும் சீனியர் கிரேடு ஊழியர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. இதனையடுத்து, மத்திய அமைச்சகம் கவலை கொண்டுள்ளது, மேலும் இந்த நடவடிக்கையைத் தூண்டிய அடிப்படைக் காரணங்களை ஆராயவும் முடிவு செய்து நெருக்கமாக நிலைமைகளை அவதானித்து வருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, டிசிஎஸ் பங்குகள் திங்களன்று சந்தை முடிவில் 1.76% சரிவுடன் முடிந்துள்ளது. அதாவது, பங்கு விலை ரூ.3079.75 ஆகச் சரிந்தது.

இதற்கிடையில், புதிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் செனட் (NITES) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியாவை அணுகி, அரசாங்கம் TCS நிறுவனத்திற்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கை நெறிமுறையற்றது, மனிதாபிமானமற்றது, முற்றிலும் சட்டவிரோதமானது என்று ஐடி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஊழியர்கள் சங்கம் கூறும்போது,

“ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய எந்தவொரு ஊழியரையும், நிறுவனம் ஒரு மாத அறிவிப்பு அல்லது ஊதியத்தை வழங்காவிட்டால், சட்டப்பூர்வ ஆட்குறைப்பு இழப்பீட்டை வழங்காவிட்டால், அரசாங்கத்திற்கு அறிவிக்காவிட்டால், பணிநீக்கம் செய்ய முடியாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. TCS இந்த சட்டத் தேவைகள் எதையும் பின்பற்றவில்லை," எனச் சாடியுள்ளது.
TCS

இதுபோன்ற நடவடிக்கைகளின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என்று NITES தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. குடும்பம், மாதாந்திரத் தவணைப் பொறுப்புகள், பிற நிதிப்பொறுப்புகளைச் சுமந்து ஆயிரக்கணக்கானோர் அல்லல்படுகின்றனர், இந்நிலையில், பணி நீக்கம் என்பது அவர்களது வாழ்வாதாரத்தை இழக்கச் செய்வதாகும் என்று சங்கம் சாடியுள்ளது. மேலும் டிசிஎஸ் மட்டுமல்ல பணி நீக்கம் செய்யும் பல நிறுவனங்களும் ஆட்குறைப்பை மறு சீரமைப்பு என்றும் அமைப்பு ரீதியான அட்ஜெஸ்ட்மெண்ட் என்றும் திசைத்திருப்பி வருகின்றன. டிசிஎஸ் செய்வது மறுசீரமைப்பெல்லாம் இல்லை என்று என்.ஐ.டி.இ.எஸ் தாக்கியுள்ளது.

“அதாவது, பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையை கார்ப்பரேட் மாயச்சொல்லினால் மூடி மறைக்கப்பார்க்கிறது. டிசிஎஸ் போன்ற பெரு நிறுவனம் இத்தனை பேர்களை வேலையை விட்டு அனுப்புவதை இத்தனை சுலபமாக சட்ட விரோதமாகச் செய்ய முடியும் என்றால் இது தவறான முன்னுதாரணமாகி விடும், அபாயகரமான முன்னுதாரணமாகி விடும், என்று சங்கம் எச்சரித்துள்ளது.

இப்படி இந்த நிறுவனம் செய்தால் பணி பாதுகாப்பின்மையை இயல்பாக மாற்றுவதாகி விடும். ஊழியர்கள் உரிமையை அரித்துவிடும். இந்திய வேலைவாய்ப்புச் சுற்றுச்சூழலையே சிதைத்து விடும், என்கிறது என்.ஐ.டி.இ.எஸ்.

அனைத்து பணிநீக்கங்களையும் உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும், TCS ஆல் கட்டாய வெளியேற்றங்கள், தாமதமான ஆட்சேர்ப்பு மற்றும் சட்டவிரோத ஆட்குறைப்புகளின் முறையான முறை குறித்து விசாரணையைத் தொடங்கவும் நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு NITES அரசை வலியுறுத்தியுள்ளது.

என்.ஐ.டி.இ.எஸ். மேலும் தெரிவிக்கும் போது,

"இந்த அநீதி உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால், NITES, இந்தியா முழுவதும் உள்ள அதன் கூட்டணி ஐடி ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாடு தழுவிய போராட்டங்கள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் பொது ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்."

TCS நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 1.3% அதிகரித்து ரூ.63,437 கோடியாகவும், நிகர லாபம் 5.9% அதிகரித்து ரூ.12,760 கோடியாகவும் உள்ளது.

lay-off

2024, 2025-ம் ஆண்டுகள் மோசம்:

உலகளாவிய தொழில்நுட்பத் துறையின் பணிநீக்கங்களைக் கண்காணிக்கும் ஒரு தளமான Layoffs.fyi இன் படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 169 தொழில்நுட்ப நிறுவனங்களில் 80,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், 551 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

ஊழியர்களை வெளியேற்றும் ஐடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களினால்தான் வெளியேற்றி வருகின்றன. இதற்கு பல்வேறு பெயர்கள் இட்டு அழைக்கின்றனர், ஆனால் விளைவு என்னவோ ஒன்றுதான், அது ‘ஆட்குறைப்பு’ என்பதே என்று ஐடி ஊழியர்கள் பலர் கருதுகின்றனர்.

உண்மையில், உலகளவில் Nvidia-விற்கு பிறகு இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க பங்குச்சந்தைப் பட்டியலிடப்பட்ட நிறுவனமான மைக்ரோசாப்ட், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, இது நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களில் 7% ஆகும்.

கடந்த வாரம் 2,00,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மெமோ கொடுத்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, இந்த ஆண்டு பணிநீக்கங்கள் தனக்கு "மிகவும் அழுத்தம் தருகிறது," என்று கூறினார்.

தகவல் உதவி: பிடிஐ

facebook twitter