‘கரூர் டு துபாய்’ - 19 கிளைகள்; ரூ.5 கோடி டர்ன்ஓவர் - ‘The Falooda Shop’ வெற்றிக்குப் பின்னால் பிரதீப் கண்ணன்

06:00 PM Apr 29, 2026 | Journo Prasanth

19 கிளைகளுடன் The Falooda Shop – கரூர் டூ துபாய் வரை சாதித்தது எப்படி?

ஐஸ்கிரீம், டிரை ஃபுரூட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ‘Falooda’ தொழிலில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்ய முடியுமென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், ஒன்றல்ல இரண்டல்ல 19 கிளைகளை ஆரம்பித்து சாதித்துள்ளார் ‘The Falooda Shop’ நிறுவனர் பிரதீப் கண்ணன்.

கரூர் அருகே சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவெடுத்த பிரதீப் கண்ணன், பல தடைகள் தோல்விகளைச் சந்தித்து இன்று தமிழ்நாடு, கர்நாடகா மட்டுமின்றி துபாயில் ஒரு கிளை துவங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

‘மத்தவங்கள ஜெயிக்கவெச்சா போதும் நாமும் அவங்களோட சேர்ந்து ஜெயிப்போம், தோல்வியே சந்திக்க மாட்டோம்’ என்பதை தன் தொழிலின் Principleஆக வைத்து, ‘The Falooda Shop’ வெற்றிப்பாதையில் கொண்டு செல்வது எப்படி? என நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரதீப் கண்ணன்…

The Falooda Shop நிறுவனர் பிரதீப் கண்ணன்

‘The Falooda Shop’ உருவான கதை என்ன?

‘‘என் அப்பா ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ மற்றும் பாரம்பரிய விவசாயி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் National Institute of Fashion Technology-யில் (NIFT) 2007ம் ஆண்டு B.F.Tech முடித்துவிட்டு, கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னையில் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பெற்று அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

1.5 ஆண்டுகள் வேலை செய்த பிறகு நான், Bombay சென்று அங்கு Executive MBA முடித்தேன். அங்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை பெற்று, துபாய் சென்று அங்கு இரண்டு ஆண்டுகள் FMCG நிறுவனத்தில் Supply Chain Managerஆக பணியாற்றி வந்தேன்.

2012ல் அங்கிருந்து மீண்டும் இந்தியாவிற்கு வந்த போது, பெங்களூரில் ஐந்தாண்டுகள் Apparel கம்பெனியில் பணியாற்றினேன். இப்படியே அங்கும் இங்குமாக பணியாற்றிக் கொண்டே நாட்கள் செல்ல, காதல் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி M.Sc Nursing முடித்துவிட்டு பெங்களூரில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

”அப்போது, எங்கள் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடக்கூடாது என நினைத்த நான் புதியதாக தொழில் துவங்க வேண்டுமென நினைத்தேன், இந்த சிந்தனை தான் என்னுடைய இத்தனை வளர்ச்சிக்குமான துவக்கப்புள்ளி,’’ என்கிறார் அவர்.

வேலை பார்த்துக்கொண்டே தொழில் துவங்கினேன்!

‘‘வேலை பார்த்துக்கொண்டே தொழில் துவங்க நினைத்த நான், பெங்களூரில் ‘Lets Kulfi’ என்ற பெயரில் குல்பி கடை துவங்கினேன். அப்போது, கடை நன்றாக சென்ற நிலையில் ரோடு விரிவாக்கத்திற்காக கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின், South Indian உணவு வழங்கும் ஒரு பேமஸ் ஹோட்டலுடன் Tie-up செய்து 5 இடத்தில் கடை திறந்தேன். அது ஓரளவுக்கு விற்பனையானது, இருந்தும் மற்றவர்கள் எப்படி தொழில் செய்கிறார்கள் என்பதை அறிய பெங்களூரின் ரோடுகள் தோறும் பைக்கில் சுற்றுவேன்.

ஒரு கட்டத்தில் குல்பி தொழில் நான் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, வேலைக்குச் சென்றதால் என்னால் முழு நேரமாக அந்தத்தொழிலை தொடரவும் முடியவில்லை. அப்போது, அந்தத்தொழிலை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாழ்வில் முதன் முதலாக துவங்கிய சிறு தொழிலை மூடிவிட்டேன்.

ஆனால், குல்பி தொழில் எனக்கு நிறைய பாடங்களையும், தொழில் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்ததால், 2019ம் ஆண்டு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்த என் வேலையையே விட்டுவிட்டு, ஒரு ‘The Falooda Shop’ துவங்கி அதை முழுநேரமாக நடத்த திட்டமிட்டேன்.

”எப்போதும் நான் கற்றுக்கொண்ட அனுபவம், கற்றறிந்த கல்வி அறிவு மேல் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது. எத்தகைய தோல்வியை சந்தித்தாலும் என்னால் மீண்டும் எழுந்து வர முடியும், மீண்டும் வேலைக்குச் சென்றாவது வாழ முடியுமென்ற என்ற நம்பிக்கை இருந்தது.”

இதனால், தொழில் துவங்க திட்டமிட்டு மனைவி மற்றும் பெற்றோரிடம் இதைச் சொன்னதும் அவர்கள் எனக்கு பெரும் உறுதுணையாக நின்றனர். ஏனெனில், நான் தான் எங்கள் குடும்பத்தில் முதல் தொழில்முனைவோர்.

பெற்றோர், மனைவியின் நகை, சேமிப்புகளை வைத்து 6 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்தியாவின் முதல் Organized Falooda Shop, 2019ம் ஆண்டு கரூர் காந்திகிராமம் அருகே அமைத்தேன். என் மனைவியும் தன்னுடைய வேலைகளை விட்டுவிட்டு எனக்கு முழுநேரமாக உதவினார்.

நான் கடையை துவங்கும்போதே எனக்குத்தெரியும் இது நாளை பெரிய உயரங்களை எட்டும் அதை நோக்கி நான் நகர்த்துவேன் என்பதால், துவங்கும் போதே ‘The Falooda Shop’ என்ற பெயரில் Franchise Outlet (கிளை) என்பதை குறிப்பிட்டு துவங்கினேன்,’’ என்கிறார் பிரதீப்.

19 கிளைகளை எட்டியுள்ள ‘The Falooda Shop’

‘The Falooda Shop’ எப்படி செயல்படுகிறது, மற்ற போட்டியாளர்களிடம் இருந்து தான் எந்த இடத்தில் வேறுபடுகிறேன் என்பதை விளக்குகிறார் பிரதீப்.

‘‘நான் முதலில் இந்தத்தொழிலை துவங்க திட்டமிட்டதும் Falooda தொழில் குறித்து R&D செய்த போது, இந்தியாவில் பல இடங்களில் Falooda தொழில் இல்லை. பிளேவர், டேஸ்ட் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுபாடாக இருக்கும். ஒரு டேஸ்ட், பிளேவர், Look அனைத்து அனைத்து இடங்களிலும் கிடைக்காது. இதனை தகர்த்து Falooda வின் டேஸ்ட் ஒரே போல இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு ஐடம்லயும் ஒரு Formula போல உருவாக்கியுள்ளோம். இதனால், எந்த கிளையில் Falooda சாப்பிட்டாலும் ஒரே மாதிரியான சுவை, தரம் இருக்கும்,’’ என்கிறார் அவர்.

பிரதீப் கண்ணன் கரூரில் துவங்கிய ஒரு கடை இன்று 19வது கிளையை எட்டியிருக்கிறது, அதிலும், இந்தியாவைத் தாண்டி துபாயில் சமீபத்தில் ஒரு கிளை துவங்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பு என்னவென்றால் கிளைகளைத் துவங்கியதில் பெருபாலானோர் ‘The Falooda Shop-இன் வாடிக்கையாளர்கள் தான்.

‘‘எங்களின் வெற்றி என்னவென்றால் எங்களிடம் Franchise எடுத்தவர்கள் எல்லாம் எங்களின் வாடிக்கையாளர்கள் தான். நாங்கள் எப்போதும் டயர்2, டயர்3 சிட்டிகளில் தான் கவனம் செலுத்துகிறோம். தொடர்ச்சியாக கடைக்கு வருவோர் எங்கள் தொழில், அணுகுமுறை, கூட்டத்தைப் பார்த்து கிளைகள் கேட்டனர். எங்களின் முதல் கிளையை எங்கள் வாடிக்கையாளரான ஒருவர், 2020ம் ஆண்டு கரூர் நகரப்பகுதியில் துவங்கினார்.

இப்படி படிப்படியாக கிளைகள் கரூர், கோவை, ஈரோடு, உடுமலை எனப்பரவியது. 2025ம் ஆண்டு 17வது கிளை துபாயில் துவங்கப்பட்டது. இருப்பினும், நான் தோற்ற இடத்தில் காலூன்ற வேண்டுமென நினைத்து 19வது கிளையை கடந்த ஜனவரி மாதம் பெங்களூரில் எனது சொந்த கிளையாக துவங்கியுள்ளேன்.

ஒவ்வொரு கிளையை நான் துவங்கும்போதும் அவர்களிடம் One Time Franchise Fee ஆக 3 லட்சம் ரூபாயை பெற்றுக்கொள்வேன். பின் மாதத்தின் மொத்த விற்பனையில் 5 சதவீதம் Royalty-யாக பெற்றுக்கொள்வேன். கிளை துவங்க நினைப்போருக்கு கடையை செட் செய்து, மூலப்பொருட்கள் வழங்கி, ஒவ்வொரு வகை Falooda உருவாக்குவது குறித்த பயிற்சி கொடுத்து, எங்களின் SOP – Standard Operating Procedure ஃபாலோ செய்ய வைத்து, தொழில் நல்ல முறையில் பயணிக்க அனைத்தையும் கவனித்துக்கொள்வோம், இதற்கென தனியாக ஒரு டீம் வைத்துள்ளேன். ஒருவேளை முதலீடு குறைவாக உள்ளவர்கள் என்றால் நானே மீதமுள்ள முதலீடு செலுத்தி கிளையை துவங்கி வைக்கிறேன்.

கிளைகள் துவங்கியதும் அனைத்துமே பெரிய ஹிட் அடித்தது, சில இடங்களில் லாபம் குறைந்தாலோ வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அதையும் சரிசெய்து கொண்டு செல்கிறேன்.

”ஆரம்பத்தில் நான் துவங்கிய எனது கடை ஓராண்டில் 30 லட்சம் ரூபாய் Turnover எட்டியது. 2025ம் ஆண்டில் மட்டுமே 19 கிளைகள் மொத்தமாக 5 கோடி ரூபாய் Turnover செய்துள்ளன. இதில், 15 சதவீதத்திற்கு மேல் லாபத்தை பெற்றுள்ளன,’’ என்கிறார் அவர்.

‘மத்தவங்கள ஜெயிக்கவெச்சாப் போதும் நாமும் அவங்களோட சேர்ந்து ஜெயிப்போம், தோல்வியே சந்திக்க மாட்டோம்,’ என்பதை எப்படி தொழிலின் ரகசியமாக வைத்துள்ளார் என்பதையும் விளக்குகிறார் பிரதீப்.

‘‘மத்தவங்கள ஜெயிக்கவைப்பது என்பது நம்முடன் சேர்ந்து பயணிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தொழில்புரியும் பார்ட்னர்ஸ். இவர்களை நான் ஒரு போதும் தோல்வியைத் தழுவ விட்டதில்லை, அவர்களுக்கு தொழில் ஓடவில்லை, எடுத்த கிளையில் லாபம் வரவில்லை என்றால் என்னுடைய சொந்த பணத்தை செலவழித்து கூட அவர்களை ஜெயிக்க வைத்துள்ளேன். அவர்கள் லாபகரமாக இயங்குவதால், அந்தக்கடையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிறது, பலருக்கும் வேலை கிடைக்கிறது, லாபம் அதிகரித்து அனைவரும் நன்றாக இருக்கிறோம். இந்தத்தொழிலில் நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேனோ இல்லையோ நல்ல அன்பான மனிதர்களை சம்பாதித்துள்ளேன்.

என்னுடைய கடையில் வேலை செய்வோருக்கு குறைந்தபட்ச சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் தருகிறேன், ஆண்டுதோறும் Salary Hike தருகிறேன், என்கிறார்.

என்னுடைய கடையில் பணியாற்றும் ஒருவர் வெறும் தொழிலாளியாக இருக்கக்கூடாது, அவர்கள் தொழில்முனைவோர்களாக மாற்ற வேண்டுமென்பது என் கனவு,’’ என்கிறார் அவர்.

மேலும் பேசிய பிரதீப் கண்ணன்,

‘‘நான் தொழில் துவங்கிய போது, West Bengal பகுதியைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்களான தாலிம், ரகுமான் என் கடையில் பணியாற்றினார்கள். அவர்களுக்கு பெரிய குடும்பம், தொழில் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அதிகம், ஆனால் அவர்களிடம் முதலீடு இல்லை. தொழிலாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் முயற்சியாக, இந்த இருவருக்கும் கரூரில் உள்ள எனது இரண்டு சொந்த கடைகளை கொடுத்துவிட்டேன். அதனுடைய ஒட்டுமொத்த முதலீடும் என்னுடையது. கடையை நல்ல முறையில் நடத்தி லாபத்தை எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டேன், அங்கிருந்து நான் எதையும் எடுப்பதில்லை.”

தற்போது, இந்த இரண்டு கடைகளையும் அவர்கள் நன்றாக நடத்தி லாபம் சம்பாதித்து நன்றாக வாழ்கிறார்கள். இப்படி என்னுடைய கடையில் ஓராண்டு பணியாற்றிய ஒருவர், தொழில் துவங்க நினைத்தால் அவர்களுக்குத் தொழில் துவங்கித்தருகிறேன்,’’ என்கிறார் மகிழ்ச்சியுடன்.

ஆட்கள் வேலைக்கு வரவில்லை என்றாலும் கடை தடையின்றி செயல்படும் என்கிறார் பிரதீப்.

‘‘ஒருமுறை என் கடையில் பணியாற்றிய இருவர் திடீரென லீவ் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடை முழுவதிலும் கூட்டம் என்ன செய்வதெனறே தெரியவில்லை நானே Falooda தயாரித்தேன். அப்போது தான் யோசித்தேன், நம்முடைய ஒரு கிளையில் கூட இந்த நிலை வரக்கூடாது என்று. Falooda தயாரிப்பு ஒரு Skill Based தொழிலாளியைக் கொண்டு உருவாக்கக்கூடாது என்று. இதற்காகத்தான் ஒவ்வொரு Falooda உருவாக்கவும் ஒரு SOP – Standard Operating Procedure உருவாக்கியுள்ளேன். இதனை ஃபாலோ செய்து யார் வேண்டுமானாலும் அந்த அளவிற்கு மூலப்பொருட்களைப் போட்டு Falooda தயாரிக்கலாம். சுவை, தரம் என எதுவுமே மாறாது. இதனால், ஆட்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் தொழில் தடையின்றி நடக்கும்,’’ என்கிறார் அவர்.

தெளிவான சிந்தனை, நம்மீதான நம்பிக்கையுடன் எந்தத்தொழிலை கற்றுக்கொண்டு செய்தாலும் வெற்றி நமதே என்கிறார் பிரதீப் கண்ணன்.