'சுதேசி பொருட்களை ஊக்குவியுங்கள்’ - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை சுதேசி பிரச்சாரம் செய்ய மோடி அறிவுரை!

12:25 PM Sep 08, 2025 | muthu kumar

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், "இந்தியாவில் தயாரிப்போம்" மற்றும் "உள்ளூர் பொருட்களுக்கான குரல்" ஆகியவற்றை ஊக்குவிக்கவும் பிரச்சாரங்களை வழிநடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணும் இந்தியா, தற்போது "தன்நிறைவு இந்தியா" என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. இதனை முன்னிறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை 'தேசிய ஆசிரியர் விருது' பெற்ற ஆசிரியர்களுடன் நடைபெற்ற உரையாடலில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து 'சுதேசி' பொருட்கள் பிரச்சாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் முன்னோடி ஆக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது,

"நான் உங்களுக்கு ஒரு 'வீட்டுப்பாடம்' கொடுக்கிறேன். மாணவர்கள் வீட்டிலிருந்து சுதேசி பொருட்களை கொண்டு வந்து, அவற்றைப் பற்றி விவாதிக்க வேண்டும். பள்ளிகளில் 'சுதேசி தினம்' அல்லது 'சுதேசி வாரம்' கொண்டாடப்பட வேண்டும். மாணவர்கள் கிராமங்களில் ஊர்வலம் சென்றுக்கொண்டு சுதேசிப் பொருட்களை ஆதரிக்கும் பதாகைகளை ஏந்திக் கொண்டு நடக்கலாம். இது ஒரு நல்ல மனநிலையை உருவாக்கும்.

Prime Minister Narendra Modi. Picture credit: PTI

மாணவர்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்கள் இடையே உரையாடல் இருக்க வேண்டும். அதன்மூலம் பாரம்பரிய உற்பத்திகள் மற்றும் இந்தியாவின் கைத்தொழில்களின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு புரியும். பிறந்தநாள் போன்ற சந்தர்ப்பங்களில் 'மேட் இன் இந்தியா' பரிசுகள் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பின் மதிப்பு போன்றவை வளர்த்தெடுக்கப்படும்.

இப்போது அந்தக் கடமையை இந்நாள் தலைமுறைகள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் 'நான் என்ன செய்கின்றேன் என் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய?' என கேட்க வேண்டும். இந்த நாடு நம்மை முன்னேற்றுகிறது, நமக்கு பலன்கள் தருகிறது. ஆகவே, நாம் எப்போதும் நம்முடைய நாட்டுக்கு என்ன கொடுக்கலாம் என்பதை சிந்திக்க வேண்டும்,” என்றார்.

Edible oil (எண்ணெய்) இறக்குமதிக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவழிக்கப்படும் நிலை குறித்து கவலை வெளியிட்ட மோடி,

“நாம் விவசாய நாடு. இந்த ரூ.1 லட்சம் கோடி நாட்டுக்குள் இருந்திருந்தால் எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டிருக்கும், எத்தனை வாழ்க்கைகள் மாற்றப்பட்டிருக்கும்? எனவே, சுயநிறைவை நாம் வாழ்வியல் மந்திரமாக கொண்டு புதிய தலைமுறைக்கு ஊக்கம் தர வேண்டும்," என்று கூறினார்.

இத்தகைய முயற்சிகள், மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றும், உழைப்பையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வழியைத் திறக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.