+

'Time100 AI 2025' பட்டியலில் இடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் - யார் இந்த மிதேஷ் காப்ரா?

ஐஐடி மெட்ராஸ் இணைப் பேராசிரியர் மிதேஷ் காப்ரா, டைம் (TIME) இதழின் AI துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் பெரிய தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள் உலகளாவிய தயாரிப்புகளில் பணிபுரியும் நிலையில், காப்ரா இந்தியாவின் கோடிக்கணக்க

செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜிக்காக பில்லியன் டாலர் நிறுவனங்களை நடத்தும் உலகப் பெரும்புள்ளிகள் மத்தியில் இந்தியாவின் பேராசிரியர் மிதேஷ் காப்ரா டைம்ஸ்ன் AI 2025 பட்டியலில் இடம் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சென்னையின் பரபரப்பான சாலையில் அமைந்துள்ளது சிறப்புமிக்க ஐஐடி மெட்ராஸ் வளாகம். தொழில்நுட்பம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்கிற பேராசிரியரின் தனித்துவமான கனவு முளைவிட்ட இடம் அது. அந்தக் கனவின் நாயகன், பேராசிரியர் மிதேஷ் காப்ரா. அவரது கனவு, தொழில்நுட்பம் என்பது சில மேதைகளின் கைகளில் மட்டும் இருக்கக் கூடாது. அது இந்தியாவின் கடைக்கோடியில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் குரலாகவும் ஒலிக்க வேண்டும் என்பதுதான்.

பில்லியன் டாலர் நிறுவனங்களை நடத்தும் உலகப் பெரும்புள்ளிகளுடன் ஒப்பிடும்போது, மிதேஷ் காப்ராவின் பணி மிகவும் எளிமையானது. ஆனால், அதன் தாக்கம் அளவிட முடியாதது. இந்திய மக்களின் தாய்மொழிகளில் பேசும், கேட்கும், சிந்திக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.

அன்றாட வாழ்வில், நாம் Google Maps-ஐ பயன்படுத்தும்போது வழிகளைக் கேட்கிறோம். நாம் அதை ஆங்கிலத்தில் செய்வது போல, நம் தாய்மொழியில், உதாரணமாக, தமிழ் அல்லது மராத்தியில் கேட்டால் அது புரியுமா? இந்த எளிய கேள்விக்கான விடையை தேடினார் மிதேஷ் காப்ரா. உலக அளவில் பயன்பாட்டில் உள்ள AI மாதிரிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டன. இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும், அவர்களது 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கும் ஒரு தொழில்நுட்பத் தீர்வு தேவை என்பதை அவர் உணர்ந்தார்.

" align="center">mithesh khapra

மிதேஷ் காப்ரா, பேராசிரியர், ஐஐடி மெட்ராஸ்

அனைத்து மொழியிலும் AI

இந்தக் கனவை நனவாக்க, 2019ம் ஆண்டில் அவர் தனது மாணவர்களுடன் சேர்ந்து AI4Bharat என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார். AI4Bharat-இன் பணி எளிதானது அல்ல. இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தும், நூற்றுக்கணக்கான வட்டாரங்களிலிருந்தும் பேச்சுத் தரவுகளைச் சேகரிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தனி உச்சரிப்பு, தனி வட்டார வழக்கு. கடின உழைப்பின் மூலம், இந்தியாவுக்கான மிகப்பெரிய திறந்த-மூல (open-source) தரவுத்தொகுப்பை அவர்கள் உருவாக்கினர். இந்தத் தரவுகளை AI ஆய்வாளர்களுக்கும், ஸ்டார்ட்அப்களுக்கும் இலவசமாக வழங்கினார்.

இந்த முயற்சி, இந்தியா முழுவதும் ஒரு புதிய அலைகளை உருவாக்கியது. இதுவரை ஆங்கிலம் மட்டுமே அறிந்திருந்த பலருக்கு, தங்கள் தாய்மொழியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. விவசாயிகள், கைவினைஞர்கள், சிறு தொழில்முனைவோர் எனப் பலதரப்பட்ட மக்களுக்கும் AI-இன் பலன்கள் சென்றடைந்தன.


கல்வித்துறையிலிருந்து தேசிய தாக்கம் வரை

IIT மெட்ராஸில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியரான காப்ரா, AI கற்பிக்கப்படும், ஆராயப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் விதத்தில் மாற்றத்திற்கான ஒரு உந்துசக்தியாக மாறியுள்ளார். இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) ஆகியவற்றில் அவரது பணி, பல தலைமுறை மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. அவர்களில் பலர் இப்போது உலகின் முன்னணி AI நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர்.

தான் உருவாக்கிய AIக்கு உரிமை கோராமல் உலகளாவிய நிறுவனங்கள் கூட இந்தத் தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அனைவருக்கும் வழங்கியுள்ளார். இந்தி, மராத்தி அல்லது தமிழ் மொழிகளில் தங்கள் AI மாதிரிகளை மேம்படுத்தினால், இந்தியாவுக்குப் பலன் கிடைக்கும் என்பது காப்ராவின் எண்ணம். AI சகாப்தத்தின் வளர்ச்சி ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்கிறார்.

மிதேஷ் காப்ராவின் இந்த அர்ப்பணிப்புக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. டைம் (TIME) இதழ் வெளியிட்ட AI துறையின் 100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில், எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர்களுடன் மிதேஷ் காப்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்த தனிப்பட்ட மரியாதை மட்டுமல்ல. அது, தொழில்நுட்பம் என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல, அது ஒரு சமூகப் பணி என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

mithesh


உலக அரங்கில் அங்கீகாரம்

காப்ராவின் பணி AI-யில் "இந்தியாவின் கல்வி ஆராய்ச்சியை மறுவடிவமைக்கிறது" என்று டைம் பத்திரிகை அவரைப் பாராட்டியுள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தாலும், ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியிருப்பதாக விமர்சிக்கப்படும் நிலையில், மிதேஷ் காப்ராவுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா, சிலிக்கான் பள்ளத்தாக்கைப் பிரதிபலிக்காமல், அதன் மக்களுக்குத் தனித்துவமான பிரச்னைகளுக்கான தீர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உலகளாவிய AI நிலப்பரப்பிற்கு இணையாக வளர்ந்து வருகிறது என்பதற்கான பங்களிப்பைச் செலுத்துகிறது.

AI-யில் செல்வாக்கு செலுத்த எப்போதும் ஒரு யூனிகார்ன் ஸ்டார்ட்அப் அல்லது பில்லியன் டாலர் மதிப்பு தேவை இல்லை என்பதை காப்ரா நிரூபித்துள்ளார். ஒரு பெரிய கனவு, கடின உழைப்பு மற்றும் சமூக அக்கறை இருந்தால், ஒரு தனி மனிதனாலும் உலகை மாற்ற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இவர். மதிப்போ, பெரும் புகழோ இல்லாமல், அமைதியான ஆனால் ஆழமான முறையில் ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே அவர் வடிவமைத்திருக்கிறார். அவரது பணியின் தாக்கம், இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

facebook twitter