ஓலா எலக்ட்ரிக் வணிக பயன்பாட்டு மின்சார ஸ்கூட்டருக்கு ஒழுங்குமுறை அனுமதி!

11:04 AM May 29, 2026 | muthu kumar

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் வணிக மின்சார இருசக்கர வாகன சந்தையில் காலடி எடுக்கத் தயாராகி வருகிறது. நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டருக்கு அரசு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் உணவு டெலிவரி, க்விக்-காமர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் நகர்ப்புற வணிக போக்குவரத்து சேவைகளுக்கான மின்சார ஸ்கூட்டர் பிரிவில் ஓலா நிறுவனம் விரைவில் நுழையலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வாகனத்திற்கு 2026 பிப்ரவரியில் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கமான Automotive Research Association of India அனுமதி வழங்கியுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த ஹோமோலோகேஷன் சான்றிதழ், 4 கிலோவாட் மோட்டார் திறன் கொண்ட மற்றும் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடிய L1 வகை மின்சார ஸ்கூட்டருக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர், நிறுவனத்தின் தற்போதைய Ola S1 தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது வணிக பயன்பாட்டை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக டெலிவரி பணியாளர்கள் மற்றும் ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்குத் தேவையான குறைந்த இயக்கச் செலவு, அதிக பயண தூரம் மற்றும் அதிகப்படியான தினசரி பயன்பாடு போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹோமோலோகேஷன் பொதுவாக வாகன அறிமுகத்திற்கு முன் கடைசி கட்ட ஒழுங்குமுறை செயல்முறைகளில் ஒன்றாக கருதப்படுவதால், இந்த ஸ்கூட்டர் விரைவில் சந்தைக்கு வரக்கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், ஹார்மஸ் ஜலசந்திப் பகுதியைச் சுற்றியுள்ள பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், டெலிவரி மற்றும் கிக்-வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடையே மின்சார வாகனங்களுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும், டெல்லி அரசின் வரைவு மின்வாகனக் கொள்கை 2026-இல், புதிய பெட்ரோல் இருசக்கர வாகன பதிவுகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டுப்படுத்தும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது வணிக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேலும் வேகப்படுத்தும், என பார்க்கப்படுகிறது.

தொழில்துறை ஆய்வாளர்கள் கருத்துப்படி, அதிக தினசரி பயன்பாடு மற்றும் விரைவான வாகன மாற்றச் சுழற்சி காரணமாக வணிக மின்சார இருசக்கர வாகன சந்தை எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பைக் கொண்டதாக மாறியுள்ளது.

சமீபத்தில் பாவிஷ் அகர்வால் தனது X பதிவில்,

எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கிக்-வேலைகளில் உள்ளவர்களிடையே மின்சார இருசக்கர வாகனங்களுக்கான ஆர்வம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் புதிய வணிக ஸ்கூட்டர் தொடர்பாக அவர் நேரடியாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த புதிய ஸ்கூட்டர் இந்த காலாண்டிலேயே அறிமுகமாகும் பட்சத்தில், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வணிக மின்சார போக்குவரத்து சந்தையில் ஓலா எலக்ட்ரிக்கின் நுழைவு போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.