
ஓபன்ஏஐ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் மிகவும் மேம்பட்ட பெரிய மொழி மாதிரி (LLM) GPT-5-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ChatGPT இன் இலவச அடுக்கில் உள்ளவர்கள் உட்பட, அனைத்து பயனர்களுக்கும் இந்த மேம்பட்ட மொழி மாதிரி ஜிபிடி-5 கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, எழுத்து, குறியீட்டு முறை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பயன்பாடுகள் போன்ற பல்வேறு பணிகளில் பகுத்தறிவு மற்றும் செயல்திறனில் பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவருகிறது. இது செயற்கை நுண்ணறிவின் முந்தையப் பயன்பாட்டையும், ஓபன் ஏஐ-யின் முந்தைய முன்னேற்றங்களையும் ஒருங்கிணைத்து அதனையும் விஞ்சி நிற்கிறது.
பல ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்காவிற்குப் பிறகு OpenAI இன் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது என்றும், அதன் மிகப்பெரிய சந்தையாக மாறக்கூடும் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டார்.
அதாவது, எந்த நேரத்திலும் நம்முடன் பிஹெச்.டி முனைவர் பட்டம் பெற்ற நிபுணர்கள் அருகிலேயே இருந்து வழிநடத்துவது போல் இந்த ஜிபிடி-5 வழி நடத்தும் திறன் கொண்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“முப்பத்திரண்டு மாதங்களுக்கு முன்பு, நாங்கள் ChatGPT ஐ அறிமுகப்படுத்தினோம். அப்போதிருந்து, மக்கள் AI-ஐ பயன்படுத்தும் ஒரு இயல்பு வழியாக இது மாறிவிட்டது. GPT5 என்பது GPT4 ஐ விட ஒரு பெரிய மேம்பட்ட வடிவமாகும். மேலும், செயற்கை பொது நுண்ணறிவு (AGI)-க்கான எங்கள் பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இது ஒரு முழு கணினி நிரலையும் புதிதாக எழுத முடியும். இது ஒரு விருந்தை திட்டமிடவும், உங்கள் சுகாதாரத்தைப் புரிந்துகொள்ளவும், நீங்கள் விரும்பும் தலைப்புகள் குறித்த தகவல்களை வழங்கவும் உதவும். பிஹெச்.டி. பட்டம் பெற்ற நிபுணர்கள் உங்கள் பாக்கெட்டில்,” என்று ஆல்ட்மேன் தெரிவித்தார்.

GPT-5 இன் முக்கிய புதுப்பிப்புகளில் ஒன்று அதன் குறைக்கப்பட்ட மாயத்தோற்ற வீதமாகும், அதாவது, இந்த மாதிரி தவறான அல்லது ஜோடிக்கப்பட்ட பதில்களை உருவாக்கும் வாய்ப்பு குறைவு. பயன்படுத்துவதற்கு முன்பு 5,000 மணிநேர பாதுகாப்பு சோதனையை நடத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய மாடல் வியாழக்கிழமை முதல் Free, Plus, Pro மற்றும் குழு பயனர்களுக்கு வெளியிடப்படும். குறிப்பாக, இலவச பயனர்கள் ஒரு பகுத்தறிவு மாதிரியை அணுகுவது இதுவே முதல் முறை. பயன்பாட்டு உச்சவரம்பை எட்டிவிட்டால், அவர்கள் GPT-5 மினிக்கு மாற்றப்படுவார்கள்.
தற்போது, 5 மில்லியனுக்கும் அதிகமான கட்டண பயனர்கள் ChatGPT வணிக தயாரிப்புகளை நம்பியுள்ளனர் என்று நிறுவனம் தெரிவிக்கின்றது. டெவலப்பர்களைப் பொறுத்தவரை, OpenAI அதன் API மூலம், செயல்திறன் மற்றும் செலவின் வெவ்வேறு நிலைகளுக்காக உருவாக்கப்பட்ட GPT-5, GPT-5 மினி மற்றும் GPT-5 நானோ ஆகிய மூன்று பதிப்புகளை வழங்குகிறது.
GPT-5 அறிமுகத்துடன், OpenAI ChatGPT-க்கு புதிய தனிப்பயனாக்க அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் தங்கள் உடையாடல் இண்டர்ஃபேஸின் கலர் தீம்களைப் தனிப்பயனாக்க முடியும், இது அவர்களின் தொடர்புகளுக்கு ஒரு பெர்சனல் டச் கொடுக்கும். இதோடு பெரிய ஆளுமைகளின் ஆராய்ச்சி முன்னோட்டத்தையும் வெளியிட்டது, இதில் பல்வேறு உரையாடல் பாணிகளுடன் கூடிய ChatGPT இன் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்புகளும் அடங்கும்.
கூடுதலாக ஜிமெயில் மற்றும் கூகிள் காலண்டர் போன்ற வெளிப்புற சேவைகளுடன் AI சாட்போட்டை இணைக்க முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழில்: முத்துகுமார்