பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் ஒரு வருடத்திற்கு, குறிப்பாகத் திருமணங்களுக்காகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று நேற்று வலியுறுத்தினார்.
அதிகரித்து வரும் உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் பரந்த வேண்டுகோளின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் ஒரு வருடத்திற்கு, குறிப்பாகத் திருமணங்களுக்காகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அதிகப்படியான தங்க இறக்குமதி மதிப்புமிக்க அந்நியச் செலாவணியை இழக்கச் செய்கிறது என்றும், நிச்சயமற்ற உலகளாவிய சூழ்நிலைகளில் பொருளாதாரக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து அவர் இந்த அறிவிப்பில் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மோடியின் அறிவுறுத்தலுக்கு என்ன காரணம்?
திருமணங்களுக்காக ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்காமல் இருக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோள் முதலில் பலருக்கும் ஆச்சரியமாக தோன்றியது. இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல; அது பாரம்பரியம், குடும்ப மரியாதை, சேமிப்பு மற்றும் பாதுகாப்பான முதலீடு போன்றவற்றோடு இணைந்ததாகும்.
ஆனால், இந்த வேண்டுகோளின் பின்னால் பெரிய பொருளாதார கவலை ஒன்று உள்ளது. உலகளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் பலவீனம் மற்றும் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்படும் அழுத்தம் ஆகியவை அரசை கவலைப்படுத்துகின்றன.
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணைச் சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் ஒரு பேரல் 70 டாலர் இருந்த கச்சா எண்ணெய் தற்போது 126 டாலர் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இதனால்தான் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் மக்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
“உலகம் முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. அதை வாங்க வெளிநாட்டு நாணயம் அதிகமாக செலவாகிறது. எனவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி அந்நியச் செலாவணியை பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில்,
“திருமணங்களுக்காக ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்காமல் இருந்தால் நல்லது” என்ற அவரது வேண்டுகோள் அதிக கவனத்தை ஈர்த்தது.
தங்கம் வாங்குவது ஏன் பிரச்சனை?
இந்திய பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்திற்கு ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது. இவை இரண்டும் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், அவற்றுக்கான கட்டணம் அமெரிக்க டாலரில் செலுத்தப்படுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதேபோல் உலகின் மிகப்பெரிய தங்க இறக்குமதி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இதனால் இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்தால் பிரச்சனை தீவிரமாகிறது: ஒன்று, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும். தங்க இறக்குமதி உயர்வும் சேர்ந்து இந்தியாவுக்கு அதிக அளவில் டாலர் தேவைப்படும் சூழ்நிலையை உருவாக்கும். இதனால் நாணய சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைய தொடங்கும்.
தங்கம் வாங்கினால் ரூபாய் மதிப்பு குறைவது எப்படி?
பொருளாதார நிபுணர்கள் பார்வையில் தங்கம் ஒரு சாதாரண நுகர்வுப் பொருள் அல்ல. எண்ணெய் போல அது தொழில்துறைக்கும் அன்றாடத் தேவைக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. பெரும்பாலும் மக்கள் சேமிப்பு அல்லது பாதுகாப்பான முதலீடாகவே தங்கத்தை வாங்குகிறார்கள்.
ஆனால், உலகளாவிய நெருக்கடி நேரங்களில் மக்கள் அதிகமாக தங்கம் வாங்க ஆரம்பித்தால், நாட்டிலிருந்து அதிக டாலர் வெளியேறுகிறது.
இதனால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) அதிகரிக்கலாம். அதாவது, நாட்டின் வருவாயை விட அதிக வெளிநாட்டு நாணயத்தை செலவிடும் நிலை உருவாகும்.
இது ரூபாயை மேலும் பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் எண்ணெய் விலை உயர்வு, போர் பதற்றம் அல்லது ரூபாய் வீழ்ச்சி போன்ற சூழ்நிலைகளில் அரசுகள் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த மாற்று நடவடிக்கைகளில் மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன:
- தங்க இறக்குமதி வரி உயர்த்துதல்
- இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தல்
- Sovereign Gold Bond போன்ற மாற்று திட்டங்களை ஊக்குவித்தல். ஆகிய நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கும்.
இந்த வேண்டுகோளின் டைமிங் சரியானதா?
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலக சந்தையில் ஏற்கனவே பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது; விநியோக பாதிப்பு அச்சம் அதிகரித்துள்ளது; வளரும் நாடுகளின் நாணயங்கள் பலவீனமடைந்துள்ளன
இந்தச் சூழ்நிலையில் இந்திய ரூபாயும் அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், தங்க இறக்குமதியும் அதிகரித்தால் ரூபாய் மீது மேலும் அழுத்தம் உருவாகலாம். அதோடு பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ரூபாய் மதிப்பு குறைந்தால், எண்ணெய் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களும் இந்தியாவில் இன்னும் அதிக விலையாக மாறும். இதனால் பொருளாதாரத்தில் ஒரு தீவிரச் சுழற்சி உருவாகும் அபாயம் உள்ளது.
பிரதமரின் முழு செய்தியும் ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டது — உலகளாவிய நெருக்கடி காலத்தில் அந்நியச் செலாவணியை பாதுகாப்பது என்பதே அவர் கூற வருவதன் சாராம்சம்.
தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், அவர் மேலும், சாத்தியமான இடங்களில் Work From Home முறையை மீண்டும் பயன்படுத்தவும் தேவையற்ற பயணங்களை குறைக்கவும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தவும்
மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இது மத்திய கிழக்கு பிரச்சனையால் உலக பொருளாதாரத்தில் உருவாகும் நிச்சயமற்ற சூழ்நிலைக்கு இந்தியாவும் தயாராகிக்கொண்டிருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஆகவே, ஒரே ஒரு குடும்பம் தங்கம் வாங்காமல் இருந்தால் ரூபாயின் மதிப்பில் பெரிய மாற்றம் ஏற்படாது என்பது உண்மை. ஆனால் பொருளாதார நிபுணர்கள் தனிப்பட்ட நடவடிக்கையை அல்ல, கோடிக்கணக்கான குடும்பங்களின் மொத்த தேவையைத்தான் கவனிக்கிறார்கள்.
இந்தியா ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக திருமண காலங்களில் மற்றும் பொருளாதார அச்சநிலைகளில் மக்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதி அதிகமாக வாங்குவார்கள்.
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதி செலவு ஏற்கனவே அதிகரித்து இருக்கும் நேரத்தில், தங்க இறக்குமதியால் கூடுதல் டாலர் வெளியேறுவதைத் தவிர்க்கவே அரசு முயற்சிக்கிறது.
அரசு தவிர்க்க முயல்வது என்ன?
கொள்கை அமைப்பாளர்களின் மிகப்பெரிய கவலை பின்வரும் காரணிகள் ஒரே நேரத்தில் மோசமடைவதுதான்:
- உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
- அதிகரிக்கும் இறக்குமதி செலவு
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
- உயரும் பணவீக்கம்
- அந்நியச் செலாவணி கையிருப்பில் அழுத்தம்
இந்த அனைத்தும் சேர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும் அபாயம் உள்ளது.
அதனால் பிரதமர் மோடியின் வேண்டுகோள் திருமணங்கள் அல்லது நகை வாங்குதலை எதிர்ப்பதற்காக அல்ல; உலகளாவிய எரிசக்தி அதிர்ச்சியின் மத்தியில் இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.