
இன்றைய டிஜிட்டல் உலகில் மோசடியாளர்கள் பல்வேறு வழிகளில் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். அதில் ஒன்றுதான் ‘போலி இ-சலான் மோசடி’. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு மின்னணு முறையில் அபராதம் கட்ட சொல்லி ‘இ-சலான்’ (e-challan) அனுப்பப்படுவது வழக்கம். அதை பயன்படுத்தி அபராத தொகையை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் ஆன்லைனில் செலுத்த முடியும். இத்தகைய சூழலில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மோசடியாளர்கள் அதன் மூலம் ஆதாயம் ஈட்டி வருகின்றனர்.
சென்னையில் அரங்கேறிய ‘இ-சலான்’ மோசடி சம்பவம்
சென்னை - பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் இ-சலான் மூலம் பணம் இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட அவரது மனைவியும், அவரது உறவினரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
வீட்டுக்கு வந்த ஒரு சில விநாடிகளில், அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவர்களின் வாகனம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ‘Vahan Parivahan’ என்ற மொபைல் செயலிக்கான லிங்க் வந்துள்ளது. அதை அந்த நபர் கிளிக் செய்ததும் சில செயலிகள் அவரது போனில் இன்ஸ்டால் ஆகியுள்ளது. அதன் பின்னர், அவரது போன் ‘ஹேங்’ ஆகியுள்ளது.
பின்னர், அவர் போனை ‘ரீ-ஸ்டார்ட்’ செய்ததும் அவரது போனுக்கு தொடர்ந்து ஓடிபி வந்துள்ளது. அதற்குள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 12,600 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இ-சலான் மோசடி என்றால் என்ன?
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக சொல்லி டிஜிட்டல் பயனர்களுக்கு மெசேஜ் ஒன்று வரும். அதில், அவர்களிள் வாகனம் போக்குவரத்து தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து, அபராத தொகையை ஆன்லைன் மூலம் உடனடியாக செலுத்துவதற்கான லிங்க் அல்லது மொபைல் செயலி இன்ஸ்டால் செய்வதற்கான ‘apk’ தரப்பட்டு இருக்கும்.
அதை கிளிக் செய்ததும் போனில் சில தேர்ட் பார்ட்டி செயலிகள் இன்ஸ்டால் ஆகும். அதன் மூலம், அந்த போனை ஹேக் செய்து, போனை பயன்படுத்தும் நபரின் தனிப்பட்ட தரவுகளை திரட்டி, வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு போன்வற்றில் இருந்து பணம் எடுப்பார்கள்.
இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம்?
Phishing Messages: மோசடியாளர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு வழிகளை பயன்படுத்துவது உண்டு. அதில் ஒன்றுதான் ஃபிஷிங் ஸ்கேம். அந்த வகையில் இந்த இ-சலான் மோசடியில் பயனர்களை நம்ப வைக்கும் நோக்கில் மோசடியாளர்கள் அனுப்பும் மெசேஜ் அப்படியே அசல் தன்மையோடு இருக்கும். நீங்கள் வாகன விதிமீறலில் ஈடுபட்டு உள்ளீர்கள், அதற்கான அபராத தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். உடனே பதறிப்போய் நீங்கள் பணத்தை செலுத்த அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்.
போலி லிங்க்: அந்த மெசேஜில் சலான் குறித்த விவரம் மற்றும் அபராத தொகையை செலுத்துவதற்கான லிங்க் இருக்கும். சிலருக்கு மொபைல் செயலிக்கான ‘ஏபிகே’ லிங்க் இருக்கும். அதை பயனர்கள் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கும். அந்த லிங்க் அல்லது apk செயலியை இன்ஸ்டால் செய்தால் பயனர்களின் லாக்-இன் விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், ஆதார் விவரங்கள், வங்கி சார்ந்த விவரங்கள் போன்றவற்றை சேகரிக்கும். இது பயனர்களின் சாதனத்தில் தகவல்களை திரட்டுவதற்கான மால்வேர் போல செயல்படும்.

இதை தவிர்ப்பது எப்படி?
- இ-சலான் குறித்து லிங்க் உடன் வரும் டெக்ஸ்ட் மெசேஜ்கள் அல்லது மின்னஞ்சலை கிளிக் செய்வது அல்லது மொபைல் செயலிகளை டவுன்லோட் செய்வதை தவிர்க்கலாம். குறிப்பாக அவசரம் அல்லது மிரட்டும் தொனியில் இருக்கும் மெசேஜ்களை தவிர்த்து விடலாம் என சைபர் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- இ-சலான் குறித்த அசல் தகவல்களை தெரிந்து கொள்ள உள்ளூர் போக்குவரத்து ஆணையம் அல்லது அவர்களின் வெப்சைட், தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை சரி பார்க்கலாம்.
- மொபைல் செயலிகள் அல்லது வெரிபை செய்யப்படாத லிங்குகளை தனிப்பட்ட விவரங்களை ஷேர் செய்யாமல் இருக்கலாம்.
- பொதுவாக இணையவழியில் இ-சலான் செலுத்துவதற்கான லிங்குகளின் டொமைன் ‘gov.in’ என முடியும். அதை இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டியது அவசியம்.
- இ-சலான் அசலாகவே வந்து இருந்தால் அந்த விவரங்களை சரிபார்த்து, பயனர்கள் அதற்கான அபராத தொகையை செலுத்தலாம்.
பெருநகர சென்னை போக்குவரத்து காவல் பிரிவு சொல்வது என்ன?
பெருநகர சென்னை போக்குவரத்து காவல் பிரிவின் லோகோ உடன் போலி சலான் கட்டணம் செலுத்துவது தொடர்பாக மெசேஜ் வாட்ஸ்அப்பில் வலம் வருவதாக தெரிகிறது. அதனால் அது மாதிரியான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். மேலும், அந்த மெசேஜ் வந்தால் காவல்துறைக்கு தெரியப்படுத்துமாறு மக்களிடம் கூறியுள்ளது பெருநகர சென்னை போக்குவரத்து காவல் பிரிவு.
பெற்றோர்களின் பணத்தை சுருட்டும் 'கல்வி உதவித்தொகை மோசடி' - தப்பிப்பது எப்படி?
Edited by Induja Raghunathan