
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், சாட்ஜிபிடி அளித்த ஆலோசனையை பின்பற்றி கிரெடிட் கார்டு கடனை திரும்பி செலுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பணத்தை பொறுப்பாக கையாள முடியாமல் தடுமாறி வந்தவர், தனது செலவுகளை குறைக்க சாட்ஜிபிடி உதவியோடு 30 நாள் சவாலை மேற்கொண்டு பலன் அடைந்திருப்பதாக அமெரிக்க இணைய இதழ் நியூஸ்விக்கிடம் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் டெலாவேர் பகுதியைச்சேர்ந்த ஜெனிபர் ஆலன் எனும் அந்த பெண்மணி ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றி வந்தார். சமூக ஊடகத்தில் உள்ளடக்க உருவாக்கத்திலும் ஈடுபட்டிருந்தார்.

பணத்தை சரியாக நிர்வகிக்க முடியாமல் தடுமாறி வந்தவர், கிரெடிட் கடனிலும் சிக்கியிருந்தார்.
“நான் போதிய அளவு சம்பாதிக்காமல் இல்லை. ஆனால், நிதி கல்வியறிவு பெறவில்லை. பட்ஜெட்டை பின்பற்றுவதை தவிர்த்தேன். கடினமாக உழைத்தால் இதில் இருந்து வெளிவந்துவிடலாம், என நினைத்தேன். ஆனால், இது சரியாக வருவதாக தோன்றினாலும் , இறுதியில் பிரச்சனை ஆனது,” என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அவருக்கு பெண் குழந்தை பிறந்த பின் பிரச்சனை பெரிதானது.
“உணர்வு நோக்கில் முடங்கிய நிலையில், நிலைமையை சமாளிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்த துவங்கினேன். ஆடம்பரமாக செலவிடவில்லை. ஆனால், கடன் சேர்ந்து கொண்டே போனது,” என்றும் அவர் தனது அனுபவத்தை கூறியிருக்கிறார்.
இந்நிலையில், பலரும் 30 நாள் சவாலை மேற்கொள்வதை பார்த்தவர், தானும் அதே வழியை பின்பற்ற தீர்மானித்து, ஒரு மாதத்தில் கிரெடிட் கார்டு கடனை அடைக்க சாட்ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டு அதை தினமும் செய்து பார்க்க முடிவு செய்தார்.

சாட்ஜிபிடி அவருக்கு செலவை குறைக்க அல்லது பகுதி நேர வருமானத்திற்கு ஆலோசனை அளித்தது. நாள்தோறும் ஒரு செயலை பரிந்துரைத்தது. தேவையில்லாத சந்தாக்ககளை ரத்து செய்வது, பழைய கணக்குகளில் உள்ள பணத்தை சரி பார்ப்பது, கைப்பையில் உள்ள சில்லறைகளை சேகரிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சாட்ஜிபிடி வழங்கியது.
இதன் மூலம், 100 டாலர்களுக்கு மேல் ஈட்ட முடிந்தது. மேலும், பழைய கணக்கில் 10,000 டாலர் இருப்பதை தெரிந்து கொண்டார். இப்படி தொடர்ந்து சாட்ஜிபிடி ஆலோசனைகளை பின்பற்றியவர், 30 நாள் சவாலின் முடிவில், 12,000க்கு மேலான கிரெடிட் கார்டு கடனை அடைத்துவிட்டார். இந்திய மதிப்பில் இது பத்து லட்சம் ரூபாய்க்கு மேல். சாட்ஜிபிடியின் தொடர் ஆதரவு தனது உதவியது, என்று கூறியுள்ளார்.
"இது ஒன்றும் பெரிய நிதி சாகசம் அல்ல. பணத்தை தினமும் எதிர்கொண்டு, அதை கவனித்து, பேசுவது மற்றும் பார்ப்பது ஆகும். நான் எண்களை பார்த்து பயப்படுவதை நிறுத்திக்கொண்டேன். கடனை கண்காணித்தேன். முதல் முறையாக வாழ்க்கையில் அவமானமாக உணரவில்லை. அதிகாரம் அளிக்கப்பட்டது போல உணர்ந்தேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan