ஜூன் மாத UPI பரிவர்த்தனை எண்ணிக்கையில் CRED-ஐ முந்திய 'WhatsApp Pay'

12:46 PM Jul 25, 2026 | muthu kumar

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையில் நிலவும் கடும் போட்டியை எடுத்துக்காட்டும் வகையில், மாதாந்திர யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பரிவர்த்தனை எண்ணிக்கையில் WhatsApp Pay முதல்முறையாக CRED-ஐ முந்தியுள்ளது.

இந்த முன்னேற்றம், யுபிஐ துறையின் முன்னணி நிறுவனங்களின் ஆதிக்கத்தை மாற்றவில்லை என்றாலும், பல ஆண்டுகளாக நீடித்த ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் மந்தமான பயன்பாட்டுக்குப் பிறகு, இந்தியாவில் வாட்ஸ் ஆப்பின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முயற்சிகள் வேகம் பெறத் தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது.

CRED நிறுவனத்தில் ஏற்பட்ட தலைமை மாற்றத்துடன் இந்த தரவரிசை மாற்றமும் நிகழ்ந்துள்ளது. இந்த மாதத்தில், அந்நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, CRED-ஐ விட்டு விலகி வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, மிதேன் சம்பத், CRED நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் வாட்ஸ் ஆப் பணம் செலுத்தும் செயலி மூலம் 150.48 மில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. CRED 141.78 மில்லியன் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தது.

இதற்கிடையில், 10.48 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஃபோன் பே தொடர்ந்து மிகப்பெரிய முன்னிலையில் உள்ளது. கூகுள் பே 7.41 பில்லியன் பரிவர்த்தனைகளுடனும், பேடிஎம் பில்லியன் பரிவர்த்தனைகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய யுபிஐ சூழலை ஒப்பிடும்போது வாட்ஸ் ஆப் பே மற்றும் CRED இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவானதே. நாட்டின் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் பரிவர்த்தனை மதிப்பு ஆகிய இரண்டிலும் முதல் மூன்று செயலிகள் தொடர்ந்து பெரும்பகுதியைத் தக்க வைத்துள்ளன.

ஜூன் மாதத்தில் போன் பே சுமார் ₹14.2 லட்சம் கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டது. கூகுள் பே சுமார் ₹9.7 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளையும், பேடிஎம் சுமார் ₹1.9 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளையும் கையாண்டன. இதனுடன் ஒப்பிடுகையில், CRED சுமார் ₹55,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டது. வாட்ஸ் ஆப் பே அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்திருந்தாலும், அதன் பரிவர்த்தனை மதிப்பு சுமார் ₹11,400 கோடியாக மட்டுமே இருந்தது.

NPCI உருவாக்கிய யுபிஐ மொபைல் செயலிகளின் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாக பணத்தைப் பரிமாறிக்கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வேகமான, பல்வேறு வங்கிகள் மற்றும் செயலிகளுக்கு இடையே இயங்கக்கூடிய, நுகர்வோருக்கு பெரும்பாலும் இலவசமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை வழங்கி, இந்தியாவின் சில்லறை பணப்பரிவர்த்தனை துறையை யுபிஐ மாற்றியுள்ளது. இன்று, தனிநபர்-தனிநபர் பணப் பரிமாற்றம் முதல் அருகிலுள்ள சிறு கடைகள் மற்றும் பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வணிகப் பணப்பரிவர்த்தனைகள் வரை பல்வேறு சேவைகளுக்கு இது ஆதரவளிக்கிறது.

வாட்ஸ் ஆப் பே-இன் முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒழுங்குமுறை மாற்றமும் காரணமாக உள்ளது. 2024 டிசம்பர் இறுதியில், அந்தச் சேவையில் புதிய பயனர்களை இணைப்பதற்கான கட்டுப்பாடுகளை NPCI நீக்கியது. இதன் மூலம், முன்பு விதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இயங்கிய வாட்ஸ் ஆப், இந்தியாவில் யுபிஐ சேவைக்கு தகுதியுள்ள தனது முழு பயனர் அடிப்படைக்கும் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது.

சமீபத்திய முன்னேற்றம் இருந்தபோதிலும், சந்தையின் முன்னணி நிறுவனங்களை சவால் செய்ய வாட்ஸ் ஆப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக வணிகர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளும் திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர்களை ஈர்த்தல் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை மையமாகக் கொண்ட நிதிச் சேவைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஃபோன் பே மற்றும் கூகுள் பே மேற்கொண்ட முதலீடுகள், அவற்றின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகின்றன.

கடந்த ஓராண்டில் அதிகரித்த ஒழுங்குமுறை கண்காணிப்புக்கு மத்தியிலும் பேடிஎம் தொடர்ந்து முக்கியமான நிறுவனமாக உள்ளது. குறிப்பாக, இந்திய ரிசர்வ் வங்கி Paytm Payments Bank மீது விதித்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகும், யுபிஐ சந்தையில் பேடிஎம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்தியாவின் ஃபின்டெக் துறையில் போட்டி தற்போது வெறும் பணப்பரிவர்த்தனைகளைத் தாண்டி விரிவடைந்து வருகிறது. கடன், காப்பீடு, செல்வ மேலாண்மை மற்றும் வர்த்தக சேவைகளை வழங்குவதற்கான நுழைவாயிலாக UPI-யை நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

Navi, super.money மற்றும் பல்வேறு வங்கி செயலிகள் போன்ற புதிய நிறுவனங்களும் தங்களது சந்தைப் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளன. இருப்பினும், அவற்றின் பரிவர்த்தனை அளவுகள் சந்தையின் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளன.

கொள்கை ரீதியாக, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்பின் வலிமையையும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் மேம்படுத்துவதில் ஒழுங்குமுறை அமைப்புகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் NPCI, UPI சூழலில் பல்வேறு மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

UPI மூலம் கடன் வசதி, பிரதிநிதி மூலம் பணப்பரிவர்த்தனை மற்றும் வணிகர்களுக்கான விரிவாக்கப்பட்ட பயன்பாடுகள் உள்ளிட்ட பல புதிய வசதிகள் இதில் அடங்கும். அதேவேளை, பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் மீது வலுவான கண்காணிப்புடன் புதுமைகளை ஊக்குவிக்க இந்திய ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.