+

Chenab Rail Bridge: 17 ஆண்டுகள் உழைத்து ‘பொறியியல் அதிசயத்தை’ உருவாக்கிய பெண் இன்ஜினீயர் மாதவி லதா !

ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார்.

பொறியியல் துறையின் அதிசய படைப்பாகவும், இந்தியாவின் பொறியியல் திறமையை உலகுக்கு உயர்வாக எடுத்துக் காட்டும் பாலமாகவும் கொண்டாடப்படும் செனாப் ரயில் பாலத்தை, கடந்த வெள்ளியன்று (ஜூன் 6ம் தேதி) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

செனாப் நதிப்படுகையில் இருந்து சுமார் 359 மீட்டர் (அதாவது, 1,178 அடி உயரத்தில்) கட்டப்பட்டுள்ள இந்த செனாப் பாலம் சுமார் 1,315 மீட்டர் நீளமுள்ளது. இதில், சுமார் அரை கிலோமீட்டர் நீளப்பகுதி கீழே தூண்கள் ஆதரவற்ற எஃகு வளைவைக் கொண்டுள்ளது.

இந்தப் பாலமானது ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால்-கவுரி பகுதிகளை இணைக்கும் வகையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் ஒரு பகுதியான இந்த பாலம், காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.

உலகின் மிக உயரமான பாலமாக வடிவமைக்கப்பட்டுள்ள இது, பூகம்பம், வெடிகுண்டு தாக்குதல் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் திறமையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. செனாப் பாலத்தைப் பற்றித் தெரியாதவர்கள், ரயில் பாலம் கட்டுவதில் என்ன சவால், ஏற்கனவே நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ரயில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளனவே, என நினைக்கலாம்.

ஆனால், அதற்கு முன்னர், செனாப் ரயில் பாலத்தின் புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் அது எத்தகைய சூழலில், எவ்வளவு சவால்களுக்கு மத்தியில், எப்படியெல்லாம் திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கும், அதன் பின்னணியில் எத்தனை பேர் உழைத்திருப்பார்கள் என யோசிக்கத் தோன்றும்.

Chenab river

செனாப் நதி

இப்படி உலகே வியந்து பார்க்கும் வகையில், இந்தப் பாலத்தை இந்தியா கட்டி முடிக்கக் காரணமாக, செனாப் பாலத் திட்டத்தின் அஸ்திவாரமாக செயல்பட்டவர்தான் பேராசிரியை மாதவி லதா.

தற்போது செனாப் பாலம் திறக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அந்த பாலத்தின் பெருமைகளோடு, அதனை வலுவாக, நீடித்து நிற்கும் வகையில் திட்டமிட்டுக் கட்டிக் கொடுத்த பேராசிரியை லதாவும் பேசுபொருளாகி இருக்கிறார்.

யார் இந்த மாதவி லதா?

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஏடுகுண்டலபாடு என்ற சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் மாதவி லதா. அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்த அவர், மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தார். ஆனால், பொருளாதாரப் பிரச்சினையால் அவரால் மருத்துவம் படிக்க இயலவில்லை. எனவே, பெற்றோரின் அறிவுரைப்படி பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்தபின், வாரங்கலில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்டெக் படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு, ஐஐடி மெட்ராசில் பாறை பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் தொடர்ச்சியாக, 2004ம் ஆண்டு தனது துறையில் முதல் பெண் ஆசிரியையாக ஐஐடி குவஹாத்தியில் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறையில் பேராசிரியையாக பணியில் சேர்ந்தார்.

அவர் பணியில் சேர்ந்த ஓராண்டில்தான், அதாவது, 2004ம் ஆண்டு செனாப் பாலத்தின் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டன. பாலத்தின் உறுதித்தன்மை குறித்த கேள்விகள் எழுப்பட்டதால், சிமெண்ட் தூண்கள் கட்டப்பட்ட நிலையில், பாலத்தின் கட்டுமானப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தப் பாலத்தைக் கட்டி எழுப்புவதற்கு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் உதவி கோரப்பட்டது. அங்குள்ள சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியையும், பாறை கட்டுமானத் துறை நிபுணருமான மாதவி லதாவிடம் இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

chenab railway bridge

லதா போட்டுத் தந்த திட்டம்

பாறை கட்டுமானத் துறை நிபுணரான லதா, தனது குழுவினருடன் செனாப் நதிப் பகுதிக்குச் சென்று, அங்குள்ள பாறைகளைக் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர், பாறைகளின் இடுக்குகளை பிளவுகளை அஸ்திவாரமாகப் பயன்படுத்தி, இரும்புத் தூண்களால் அந்தப் பாலத்தைக் கட்ட அவர் பரிந்துரை செய்தார். இதற்கான கட்டுமான வரைபடத்தையும் அவர் தயார் செய்து கொடுத்தார்.

முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான அப்கான்ஸ், லதாவின் இந்த கட்டுமான வரைபடம் மற்றும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றி இந்தப் பாலத்தை கட்டி முடித்துள்ளது. லதாவின் திட்டத்தின்படி, பாறைகளின் இடுக்குகளில் பிரமாண்ட இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு, அவை உறுதியாக நிற்க, பிரத்யேக சிமெண்ட் கலவைகள் கொண்டு, துளைகள் மூடப்பட்டன.

அந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில்தான் தற்போது செனாப் ரயில் பாலம் உலகின் வலுவான பாலங்களில் ஒன்றாக, செனாப் நதியின் மீது, கம்பீரமாக உருவாகி நிற்கிறது.
chenab rail bridge

17 ஆண்டுகால அர்ப்பணிப்பு

ஆற்றுப் படுகையிலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள செனாப் பாலம், ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது. பெரும் சேதத்தை விளைவிக்கும் 8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலோ, 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினாலும்கூட இந்தப் பாலத்தை தகர்க்க முடியாது. அதேபோல்,

266 கி.மீ வேகத்தில் காற்று வீசினாலோ, பாலத்தின் சில தூண்கள் சேதமடைந்தாலோகூட இந்த பாலம் உடையாது. 120 ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என இந்தப் பாலத்திற்கு தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொறியியல் சாதனையை செய்து முடிப்பதற்காக, 2005ம் ஆண்டு தொடங்கி, 2022ம் ஆண்டு வரை, லதா சுமார் 17 ஆண்டுகாலம் உழைத்துள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐஐஎஸ்சி நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,

“செனாப் பாலத்தைக் கட்டி முடிக்க மாதவி லதாவும், அவரது குழுவினரும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். மிகவும் சவாலான மலைப் பகுதிகளில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. சரிவான மலைப் பகுதிகளில், பாறைகளையே அஸ்திவாரமாகப் பயன்படுத்தி, இந்த பிரமாண்ட இரும்பு பாலத்தைக் கட்டி முடித்துள்ளனர். மாதவி லதா மற்றும் அவரது குழுவினரின் சாதனைக்காக பெருமிதம் கொள்கிறோம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
chenab rail bridge

குவியும் பாராட்டு

மருத்துவராக ஆசைப்பட்டு, நினைத்த துறை கிடைக்காவிட்டாலும், கிடைத்த துறையில் தன் தனித் திறமையை வெளிக்காட்டி, இன்று உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வலுவானதாகவும் வடிவமைத்து, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்திருக்கும் மாதவி லதாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தற்போது ஐஐஎஸ்சி-யில் நிலையான தொழில்நுட்ப மையத்தின் (CST) தலைவராக மாதவி லதா பதவி வகித்து வருகிறார். 2021ம் ஆண்டின் இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால் சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருதைப் பெற்றுள்ள இவர், 2022ம் ஆண்டில் STEAM-இல் இந்தியாவின் சிறந்த 75 பெண்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

facebook twitter