
சர்வதேச அளவில் ஏவியேஷன் மென்பொருள் சேவை வழங்கும் ராம்கோ சிஸ்டம்ஸ், தனது 'இபிளேன் 200எக்ஸ்' மூலம் நகரபுற போக்குவரத்தில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கம் கொண்ட ஸ்டார்ட் அப் இபிளேன் (ePlane) நிறுவனத்துடன் (Ubifly Technologies Limited.) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இபிளேன் நிறுவனம் தனது இ200எக்ஸ் ஏர்டாக்சி, ஏர் ஆம்புலனஸ் மற்றும் ஏர் கார்கோவின் முழு வாழ்நாள் நிர்வாகத்தை மேற்கொள்ள ராம்கோவின் ஏவியேஷன் மென்பொருளை பயன்படுத்த அடித்தளமாக அமையும்.
e200X; சான்றிதழ் செயல்முறை, கட்டுபாடு அனுமதிகள் பெறுவதில் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இதன் உற்பத்தி மற்றும் வர்த்தக சேவை பயணத்துடன் பொருந்தும் வகையில், ராம்கோ ஏவியேஷன் மென்பொருளை அமல் செய்ய ராம்கோ மற்றும் இபிளேன் இணைந்து செயல்படும். இந்த கூட்டு, தனது செயல்பாடுகளுக்கான துடிப்பான டிஜிட்டல் அடித்தளத்தை அமைக்க இபிளேனுக்கு உதவும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ராம்கோ ஏவியேஷன் மென்பொருளின் மொத்த மாதிரிகளும், இ200எக்ஸ்-க்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். பொறியியல், பராமரிப்பு, விற்பனை, விமான செயல்பாடு, தரக்கட்டுப்பாடு, ஊழியர் நிர்வாகம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
”இந்தியாவின் முதல் மின்சார டாக்சியை உருவாக்க பொறியியல் மேன்மை மட்டும் போதாது, இத்துறையின் நுணுக்கங்களை புரிந்து கொண்ட தொழில்நுட்ப பார்ட்னரும் தேவை. பொறியியல், செயல்பாடு, விதிகள் ஆகியவற்றை நிர்வகிக்க, ராம்கோ சிஸ்டம்ஸ் மேடை எங்களுக்கு உதவும்,” என்று இபிளேன் நிறுவனர் பேராசிரியர்.சத்யா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

“மின்சார வான் போக்குவரத்து இனியும் தொலைதூர கருத்தாக்கம் அல்ல. வேகமாக நடைமுறைக்கு வருகிறது. கார்பன் நீக்கத்திற்கு ஏற்ப வான் போக்குவரத்து மாற வேண்டும். நகர்புற போக்குவரத்து சிக்கலை, மின் விமான பத்து நிமிட பயணங்களின் மூலம் தீர்வு காணும் இபிளேனின் தொலைநோக்கு துணிச்சலானது. இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பதில் ராம்கே மகிழ்கிறது,” என ராம்கோ சிஸ்டம்ஸ் ஏவியேஷன் பிரிவு தலைவர் சாம் ஜேக்கப் கூறியுள்ளார்.
ராம்கோ சிஸ்டம்ஸ் மென்பொருள் சர்வதேச அளவில் 4,000க்கும் மேலான விமானங்களை நிர்வகிக்க பயன்படுகிறது. 90க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நிலையில், ஏர்லைன்ஸ்களின் முன்னணித்தேர்வாக விளங்குகிறது.
ஐஐடி மெட்ராஸில் இன்குபேட் செய்து உருவாக்கப்பட்ட இபிளேன் ஸ்டார்ட்-அப், மிகவும் வாகாக வடிவமைக்கப்பட்ட eVTOL விமானம் மூலம், நகர்புற போக்குவரத்தில் மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறது. 2019ல் பேராசிரியர் சத்யா சகர்வர்த்தியால் துவக்கப்பட்ட நிறுவனம், 140 க்கும் மேலான வல்லுனர்கள் குழுவை கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan