3 நாளில் 100 மடங்கு பதிவிறக்கங்கள் – வைரலாகும் ZOHOவின் 'அரட்டை' ஆப்!

10:44 AM Sep 30, 2025 | Gajalakshmi Mahalingam

இந்திய மென்பொருள் நிறுவனம் ZOHO உருவாக்கிய ‘அரட்டை’ (Arattai) மெசேஜிங் ஆப், கடந்த மூன்று நாட்களில் 100 மடங்கு அதிகமான பதிவுகளை பெற்றுள்ளது. நாளொன்றுக்கு சராசரி 3,000 பதிவுகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது தினசரி 3.5 லட்சம் பேர் பதிவு செய்து வருகின்றனர்.

More News :

அரட்டை செயலி முதன்முதலில் 2021ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 3 நாட்களில் இதன் பயனாளர்கள் அதிகரித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வெம்பு,

“நீண்டநாள் பொறுமையுடன் மேற்கொண்ட முயற்சியின் பலன் கிடைத்துள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் சிறந்த மெசேஜிங் அனுபவத்தை வழங்க உறுதிபூண்டுள்ளோம். இன்னும் பல புதுமைகள் வரஉள்ளது – காத்திருங்கள்!” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலி மூலம் குறுந்தகவல்கள், வாய்ஸ் நோட்கள், ஆடியோ/வீடியோ கால், புகைப்படங்கள் மற்றும் ஆவண பகிர்வு போன்றவற்றை செய்து கொள்ளலாம். ரஷ்யன், துருக்கியம், ஜப்பானியம், வியட்னாமியம் உள்ளிட்ட 16 மொழிகளில் கிடைக்கிறது.

வாட்ஸ்அப், சிக்னல் போன்ற பிரபல ஆப்’களுக்கு இணையான அம்சங்கள் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு செயலிகளையே பயன்படுத்தி வரும் நிலையில், Zohoவின் இந்த செயலி ’Made in India’ அடையாளத்துடன் இருப்பதால் அதிக பயனாளர்ளை ஈர்த்து வருகிறது.

மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த ஆப்பை திறம்படப் பாராட்டியுள்ளனர்.

“இந்த ஆப் ஒரு சுலபமான, பாதுகாப்பான, இலவச இந்திய தயாரிப்பு,” என்று தர்மேந்திர பிரதான், ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“வெற்றிகரமான அறிமுகம் செய்த ZOHOவிற்கு பாராட்டுகள்!” என Perplexity நிறுவன இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பதிவிட்டுள்ளார்.

ஆப்பின் செயல்திறன் பெரிதும் பாராட்டப்பட்டாலும், மொழிபெயர்ப்பு வசதிகள் மற்றும் வீடியோ அப்லோடு போன்ற சில அம்சங்களில் மேம்பாடு தேவை என பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பயனாளர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு இந்தச் செயலியில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கங்கள் அதிக அளவில் நடந்திருப்பதால் தேவை அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் உட்கட்டமைப்பு உருவாக்கப் படுவதாக ஜோஹோ தெரிவித்துள்ளது. கம்பைலர்கள், டேட்டாபேஸ்கள், இயங்குதளம், பாதுகாப்பு, ஹார்ட்வேர், சிப் வடிவமைப்பு, ரோபோட்டிக்ஸ் போன்ற துறைகளில் பல ஆழமான ஆராய்ச்சி முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஜோஹோ குறிப்பிட்டுள்ளது.