TechSparks 2025: நிறுவனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 சக்தி வாய்ந்த பாடங்கள்!

05:30 PM Nov 19, 2025 | YS TEAM TAMIL

அடுத்த அலை புதுமையாக்கத்தை இந்தியா உருவாக்குமா? அல்லது அதை நுகரும் நிலையில் மட்டும் இருக்குமா? - இந்த கேள்வி தான், டெக்ஸ்பார்க்ஸ் 2025 மாநாடு அரங்குகளில் எதிரொலித்தது.

More News :

டெக்ஸ்பார்க்ஸ் தொழில்நுட்ப மாநாட்டின் இந்த பதிப்பு தொழில்நுட்ப சொற்களை விலக்கி கொண்டு, நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏஐ நுட்பத்தின் இன்னமும் முடியாத வாக்குறுதி, ஆழ்நுட்பத்தின் நீளமான பாதை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினர். அதோடு, பெரும்பாலான தொழில்முனைவோர் அடுத்த பெரிய விஷயத்தை துரத்தும் பயணத்தில் ஏன் தங்கள் பாதையை இழக்கின்றனர் எனும் தேடலிலும் கவனம் செலுத்தினர்.

முகேஷ் பன்சல் ஏஐ நுட்பத்தின் தற்போதைய நிலையை விவாதித்தார், ரோனி ஸ்க்ருவாலா மறு கண்டுபிடிப்பு பற்றி பேசினார், குணால் கபூர் நோக்கத்திற்கு உண்மையாக இருப்பது பற்றி உரையாடினார். இந்த மாநாட்டில் பகிரப்பட்டு கருத்துகள் மதிப்பு மிக்கவையாக அமைந்தன.

டெக்ஸ்பார்க்ஸ் 2015 மாநாட்டில் பகிரப்பட்ட, தொழில்முனைவோர் அறிய வேண்டிய 7 முக்கிய பாடங்கள் வருமாறு:

ஏஜிஐ உண்மையான இலக்கு, ஆனால் பயணம் தொடர்கிறது.

ஏஐ நுட்பம் முக்கிய பாய்ச்சல்களை நிகழ்த்தியிருந்தாலும், ஏஜிஐ (AGI) எனப்படும் பொது செயற்கை நுண்ணறிவுக்கான வேட்கை தொடர்கிறது.

"ஏஐ வியக்க வைக்கிறது. எனினும், இறுதி பலனில், நம்பகத்தன்மையில், மனித நுண்ணறிவுக்கு நிகரான தன்மையில், முடிவெடுத்தலில் இன்னமும் அந்த இடத்தில் இல்லை. இதற்கு காலம் ஆகும் என நினைக்கிறேன்,” என்று தொடர் தொழில்முனைவோர், ஏஐ ஸ்டார்ட் அப் ’நூரிக்ஸ் ஏஐ’ நிறுவனர், சி.இ.ஓ.முகேஷ் பன்சல், யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ.ஷ்ரத்தா ஷர்மாவுடனான உரையாடலில் தெரிவித்தார்.

எனினும், இதன் நீண்ட கால வாய்ப்புகள் குறித்தி மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளார்.

‘ஏஜிஐ தான் உண்மையான இலக்கு’ என்று குறிப்பிட்டவர், ஏஜிஐ நுட்பத்தை ஒரு சாத்தியமாக கொண்டோம் என்றால், ஏஐ துறையில் இன்று குவிந்து கொண்டிருக்கும் முதலீடுகளை புரிந்து கொள்ளலாம் என்றார். பாதை சவாலாக இருந்தாலும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏதிர்காலத்திற்கு ஏற்கனவே தயாராகி வருகின்றன,” என்றார்.

முக்கிய பாடம்: ஏஐ நுட்பத்தின் தற்போதைய ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளவும், ஆனால், ஏஜிஐ எதிர்கால சாத்தியம், இப்போது உடனடி யதார்த்தம் அல்ல என்பது மனதில் கொள்ளவும்.

மறு கண்டுபிடிப்பு ஒரு திட்டம் அல்ல, மனநிலை

"மறு கண்டுபிடிப்பு என்பது இன்று எல்லோருக்கும் மிகவும் தேவையானது,” என ஷ்ரத்தா சர்மா உடனான உரையாடலில், அப்கிரேடு மற்றும் ஸ்வதேஷ் பவுண்டேஷன் இணை நிறுவனர் ரோனி ஸ்க்ருவாலா கூறினார்.

“தொழொலிமுனைவோர்களுக்கு ஒரு முறை நிகழ்வாக அல்லாமல், தினசரி சிந்தனையில் பின்னி பினைந்திருக்க வேண்டும்,” என்றும் கூறினார்.

தன்னுடைய நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்கும் விதம் பற்றியும், ஒவ்வொரு அனுபவமும் அடுத்த நிறுவனத்திற்கு தகவல் அளிப்பது பற்றி பேசினார். அவரது படைப்பூக்க பணிகள், ஊடக கதை சொல்லலுக்கு ஊக்கம் அளித்தது. இது, கல்விக்கான அணுகுமுறையில் தாக்கம் செலுத்தியது. ஆக, தனித்தனி மறு துவக்கமாக அல்லாமல் கூட்டு விளைவை உருவாக்கின.

முக்கிய பாடம்: மறுகண்டுபிடிப்பை தொடர் மனநிலையாக கருதவும், இது சில முறை செயல்பாடு அல்ல. அமைதியற்ற தன்மை, உங்கள் தொழில்முனைவு பயணத்தில் தொடர்ந்து பரிணாமத்திற்கு ஊக்கம் அளிக்கட்டும்.

தொழில்முனைவு பயணத்தில் குறிக்கோள் தான் உங்களுக்கான வழிகாட்டி

குணால் கபூர் மற்றும் வாணி கோலா, நீடித்த தன்மை கொண்ட வர்த்தகத்தை உருவாக்குவதில் குறிக்கோளின் பங்களிப்பு பற்றி பேசினர். இந்தி நடிகர்- தொழில்முனைவோர் மற்றும் கிரவுட்சோர்சிங் மேடை ’கெட்டோ’ இணை நிறுவனர் வெளிப்புற நெருக்கடிகள் வரும் போது எப்படி இலக்கை தவறவிட நேரிடும், என தெரிவித்தார்.

"ஸ்டார்ட் அப்’களை நீங்கள் ஒரு குறிக்கோளுடன், ஏதேனும் ஒன்றை மாற்ற, அரத்தமுள்ள ஒன்றை உருவாக்க துவங்குகிறீர்கள். பின்னர் ஒரு முதலீட்டாளர் உங்கள் பாதையில் மாற்றம் தேவை என்று கூறினால் அல்லது போட்டி காரணமாக செலவை குறைக்க வேண்டியிருந்தால் உங்கள் கதை நீர்த்துப் போக துவங்குகிறது. நீங்கள் மற்ற எல்லோரும் போல ஆகி விடுகிறீர்கள். இது மிகவும் ஆபத்தான பரப்பு,” என்று அவர் கூறினார்.

இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில், கலாரி கேபிடல் நிர்வாக இயக்குனர் வாணி கோலா, குறிக்கோள் என்பது பல்வேறு பங்குதாரர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை நிறுவனர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

"குறிக்கோள் பல பரிமானங்களை கொண்டது. இது உங்கள் ஆன்மிக நோக்கத்தை கண்டறிவது தொடர்பானது மட்டும் அல்ல, நுகர்வோர், முதலீட்டாளர்கள் மற்றும் உங்களுக்கு நிறுவனத்தின் நோக்கம் என்ன என கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

முக்கிய பாடம்:  அனைத்து பங்குதாரர்கள் நோக்கிலும் உங்கள் குறிக்கோளை வரையறை செய்து, நெருக்கடிகளின் போது வழிகாட்டை அதை பயன்படுத்தவும்.

நீண்ட் கால இலக்குடன் செயல்படும் இந்திய ஆழ்நுட்ப சூழல்

கர்நாடக மாநில அமைச்சர் பிரியங் கார்கே, இலட்சிய நோக்கிலான திட்ட வரைவை வெளியிட்டார். புதுமையாக்கத்தை விரிவாக்கி, மாநிலத்தை ஆசியாவின் ஆழ்நுட்ப தலைநகராக முன்னிறுத்துவதற்கான ரூ.600 கோடி ஆழ்நுட்ப நிதி மற்றும் ரூ.1000 கோடி உள்ளூர் பொருளாதார ஆக்சலேட்டர் திட்டம் (LEAP) பற்றி பேசினார்.

"இதை ஆழ்நுட்ப பத்தாண்டு என குறிப்பிடுகிறோம்” என்று ஷ்ரத்தா சர்மாவுடனான உரையாடலில் குறிப்பிட்டவர், ஆழ்நுட்பம், ஏஐ மற்றும் பிற வளரும் நுட்பங்கள் சரியான முதலீடு, வழிகாட்டுதல், உள்கட்டமைப்பை பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்றார்.

காத்திருக்கும் கால அளவு பற்றிய பார்வையை முகேஷ் பன்சல் பகிர்ந்து கொண்டார்.

“இந்திய முக்கிய திருப்பு முனை புள்ளியில் உள்ளது. நம் ஆழ்நுட்ப சூழலை மீண்டும் கட்டமைப்பதற்கு காலம் ஆகும், குறைந்தது ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆகும். ஆனால், நீண்ட கால பயன் குறித்து நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்று கூறினார்.

முக்கிய பாடம்: ஆழ்நுட்பத்திற்கு பொறுமையான முதலீடு மற்றும் நீண்ட கால நம்பிக்கை தேவை. இந்த பரப்பில் உள்ள தொழில்முனைவோர் வளரும் உள்கட்டமைப்பை சாதகமாக்கி கொள்ளும் நிலையில் நேரில்லாத வளர்ச்சியையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

சுகாதாரத்துறையில் ஏஐ-க்கு துல்லியம், வேலி தேவை

இல்ல நோய்க்கூறு கண்டறிதல் நிறுவனம் இனிடோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஆயுஷ் ராஜ், சுகாதார ஏஐ நுட்பத்தில் உறுதிப்படுத்தல் அவசியம் என்றார்.

"சுகாதார துறையில் உங்கள் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். நாம் கட்டுப்பாடுகள் கொண்ட துறையில் செயல்படுகிறோம். எனவே முதலில் பரிசோதனை செய்வது அவசியம்,” என்று குறிப்பிட்டவர், மொழி மாதிரிகள் நோய்க்கூறு முடிவெடுப்பது தொடர்பான வேலிகள் தேவை,” என்றார்.

முக்கிய பாடம்: ஏஐ மற்றும் பிற கட்டுப்பாடுகள் கொண்ட துறைகளில் உறுதிப்படுத்தல், அறம் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு முக்கியம்.

குரல் மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை இந்தியாவின் வாய்ப்பாக அமைகின்றன

டெக்ஸ்பார்க்ஸ் 2025 மாநாட்டில், மிகவும் கவனிக்கத்தக்க விவாதங்களில் ஒன்றாக, குரல் வழி நுட்பம் எப்படி மொழி எல்லைகளை கடந்து, அனைவரையும் உள்ளடக்கிய அனுபவத்தை அளிக்க வல்லதாக இருப்பது தொடர்பாக அமைந்தது.

"இந்திய மொழிகளில் டைப் செய்வது வலி மிகுந்தது. இதை குரல் வழி சேவை முற்றிலும் மாற்றுகிறது,” என்று மேக்மைடிரிப் குழும சி.டி.ஓ.சஞ்சய் மோகன் கூறினார்.

நிறுவனத்தின் குரல் வழி உதவியாளர் மைரா, தமிழ், தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் சேவை அளிக்கிறது.

மக்கள் டைப் செய்வதை விட அதிகம் பேசுவதால், இது நிறுவனங்களுக்கு மேலும் நீளமான இயல்பான உரையாடலை அளிக்கிறது, பயனாளிகள் நோக்கத்தை புரிந்து கொள்ளவும் உதவுகிறது என்றும் கூறினார். இதை அனைவரையும் உள்ளடக்கிய தனிப்பட்ட தன்மை என்று குறிப்பிட்டார். பயனர் என்பதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் தொடர்பு கொள்ளும் தன்மைக்கு ஏற்ப தொழில்நுட்பம் தன்னை அமைத்துக்கொள்கிறது.

என்விடியா தெற்காசிய நிர்வாக இயக்குனர் விஷால் துபர் கூறுவது போல,

“22 மொழிகளுக்கு மேல் பேசும், தங்கள் சொந்த பொது அறிவு மற்றும் உணர்வுகள் கொண்ட 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும். இதை மேற்கில் இருந்து செய்ய முடியாது, இங்கிருந்தது தான் செய்ய வேண்டும்.”

முக்கிய பாடம்: இந்தியாவின் மொழியில் பன்முகத்தன்மை ஒரு சந்தை வாய்ப்பு. குரல் வழி சேவை சார்ந்த அனுபவம் அடுத்த 100 கோடி பானாளிகளை அளிக்கும்.

வேகம், ஏஐ ஏற்பு புதிய சாதகங்களை அளிக்கிறது

புதுமையாக்கம் மற்றும் தாக்கத்திற்கு இடையிலான இடைவெளியை ஏஐ குறைத்து, அர்த்தமுள்ள பலனை எத்தனை வேகமாக அளிக்க முடியும், என ஸ்டார்ட் அப்களை சிந்திக்க வைத்துள்ளது.

"ஏஐ நேரத்தை சுருக்குகிறது என்று கூறிய வாணி கோலா, நெட்பிளிக்ஸ் 200 மில்லியன் பயனாளிகளை அடைய 3.5 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில் சாட்ஜிபிடி அறிமுகமான சில வாரங்களை இதை அடைந்ததை சுட்டிக்காட்டினார்.”

வேகம் நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதை பாக்கெட் எப்.எம் சி.இ.ஓ.ரோகன் நாயக் விளக்கினார்.

"90 சதவீதத்திற்கு மேலான உள்ளடக்கம் ஏஐ உருவாக்கம். எங்கள் மார்க்கெட்டிங் வீடியோக்கள் 100 சதவீதம் ஏஐ ஆக்கங்கள். ஜெர்மனி மற்றும் லத்தீன் அமெரிக்காவில், உள்ளூர் குழு இல்லாமல் ஏஐ துணையோடு அறிமுகமாகி லாபமாக செயல்படுகிறோம்,” என்று கூறினார்.

நிறுவனம் 2025 துவக்கத்தில் ரொக்கத்தை அதிகம் செலவிட்டது. எனினும், ஏஐ முயற்சியால் எல்லாவற்றையும் மாற்றியது.

"ஏஐ வளர்ச்சி அடைந்துள்ளதை பார்த்தோம் ஏனெனில் எங்கள் எழுத்தாளர்களிடம் இருந்து மகத்தான நிகழ்ச்சிகள் வந்தன, இவை புதிய பார்வையாளர்களை ஈர்த்து, அதிகமானவர்களை தக்க வைத்தது. எங்கள் லாபத்திலும் 20 சதவீதம் தாக்கம் செலுத்தியது,” என்றார்.

முக்கிய பாடம்: சந்தைக்கு செல்லும் வாய்ப்புகளை மிக வேகமாக ஏஐ அளிக்கிறது. பாரம்பரிய வழிகளை விட, உள்ளடக்க உருவாகம், உள்ளூர்மயம், செயல்பாடுகளுக்கு ஏஐ நுட்பத்தை நாடும் நிறுவனங்கள் வேகமாக லாபம் அடைகின்றன.

டெக்ஸ்பார்க்ஸ் 2025 ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்தியது: ஏஐ, குறிக்கோள் மற்றும் வேகம் ஒருங்கிணைந்து இதுவரை இல்லாத வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய புள்ளியில் இந்திய ஸ்டார்ட் அப் சூழல் உள்ளது. ஆழ்நுட்பம், நிதிநுட்பம் அல்லது நுகர்வோர் சேவைகள் என எதை உருவாக்கினாலும், இந்திய முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அளிக்கும் இந்த பாடங்கள், ஏஐ இயக்கும் அடுத்த பத்தாண்டுகளை எதிர்கொள்ள வழிகாட்டும்.

ஆங்கிலத்தில்: காயத்ரி குஹா, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan