'70 மணிநேர வேலை செய்ய 35 மணிநேர சம்பளம்' - இந்திய சூழலை புரிந்து கொள்ளாத நாராயண மூர்த்திக்கு பதிலடி!

03:31 PM Nov 25, 2025 | muthu kumar

“சீனாவைப் போல வேலை செய்யலாம், ஆனால், 2011 போலவே இன்னமும் அதே சம்பளத்தைக் கொடுப்பதா?"- இந்தக் கேள்விதான் இப்போது சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

More News :

நிறுவனங்கள் ஊழியர்களிடம் சமரசம் பேசியோ, மிரட்டியோ வேலையை விட்டுத் துரத்தும் காலத்தில் இருப்பவர்களை வைத்து அதிக வேலையை வாங்கும் சாதுரியத்தை நாராயண மூர்த்தி இந்த வாசகங்களில் வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

லிங்க்டுஇன் பதிவு ஒன்று மாறிவரும் இந்தியப் பணிப் பண்பாட்டை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊழியர்கள் மீது எதிர்பார்ப்புகள் மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, ஆனால், உழைப்பிற்கேற்ற ஊதிய அளவு, உயர்வு பற்றி பேச்சே எழுவதில்லை என்ற நியாயமான குரல்தான் இப்போது கேட்டு வருகிறது. காரணம் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் ‘70 மணி நேர வேலை 35 மணி நேர சம்பளம்’ என்ற வாசகம்தான்.

லிங்க்ட்இனில், சார்ட்டர்ட் அக்கௌண்டென்ட் மற்றும் கல்வியாளர் மீனல் கோயல் எழுதிய பதிவு ஆயிரக்கணக்கான இளம் தொழில்முனைவோரின் மனசை தொட்டுள்ளது.

“35 மணிநேர சம்பளத்தில் 70 மணிநேர வேலையை யாரும் எதிர்ப்பார்க்க முடியாது,” என்று அவர் கடும் விமர்சனம் எழுப்பினார்.

இந்த பதிவு, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சமீபத்தில் பாராட்டிய சீனாவின் ‘9-9-6’ வேலை முறை — காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் ஆறு நாள் — குறித்த சர்ச்சைக்குப் பிறகு வந்தது. ஆனால், அந்த கலாசாரம்; சம்பளம், வளர்ச்சி, பணியிட அமைப்பு அனைத்தும் ஒத்திசைவாக இருக்கும் நாடுகளில்தான் செயல்படும், என கோயல் வாதித்தார்.

“இந்தியாவில், சம்பளத்தை, வளர்ச்சி வாய்ப்புகளை, பணியிட கலாசாரத்தை சரிசெய்யாமல் 70 மணிநேர வேலை கேட்டால் அது ஆசை அல்ல, அச சமத்துவமின்மையே,” என்று அவர் பதிவு செய்தார்.

இந்த கருத்து பலரின் அனுபவத்தைச் சரியாக பிரதிபலித்துள்ளது. இக்விட்டி ரிசர்ச் நிபுணர் ராஜ் சங்க்வி தனது பதிலில்,

“இந்தியாவின் பிரச்சினை உழைப்பல்ல; பொருந்தாத எதிர்பார்ப்புகள் தான். நீண்ட நேர வேலை, ஆனால் நின்றுவிட்ட சம்பளம் — இது புதுமையையும், நம்பிக்கையையும் உருவாக்காது,” என்று எழுதியுள்ளார்.

ஆட்டமேஷன் லீட் ஜப்னீத் சச்சதேவா, “நியாயமான சம்பளமில்லாமல், வளர்ச்சி வாய்ப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்வது ஒரு பெரிய பிரச்சினை… இது இருவழி பயணம்தான்,” என்று குறிப்பிட்டார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் fresher சம்பளம் 2011 முதல் சுமார் ₹3 லட்சம் என்பதில் இன்னும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார் கோயல். இந்திய நிறுவனங்களின் ‘லட்சியம்’ மற்றும் நிஜ வாழ்க்கை சூழ்நிலை இடையே உள்ள மாபெரும் இடைவெளியைக் காட்டும் தெளிவான பதிவு வைரலாகி வருகிறது.

“மக்கள் கடினமாக வேலை செய்யத் தயங்கவில்லை,” என்று அவர் முடித்தார். அவர்கள் தங்களை மதிக்காமல் நடத்தப்படும் வேலைகளைத் தான் தவிர்க்கிறார்கள்,” என்று காட்டமாக எழுதியுள்ளார்.