இனி நீண்டநேரம் காத்திருக்காமல் ஏழுமலையானை விரைவாக தரிசிக்கலாம் - திருப்பதி கோயிலில் AI தொழில்நுட்பம்!

03:00 PM Aug 23, 2025 | Chitra Ramaraj

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ளது திருப்பதி ஏழுமலை திருத்தலத்துக்கு, இங்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால், இந்தியாவிலேயே அதிக காணிக்கைகள் கிடைக்கும் அதிக வருமானம் கொண்ட வழிபாட்டுத்தலமாகவும் திருப்பதி கோயில் உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தரிசனத்திற்காக பல மணி நேரம் மக்கள் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படும் சூழலும் உள்ளது. அதோடு, அதிக காணிக்கைகளைக் கொண்டு வரும் பக்தர்களிடம் கயவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, தரிசனம் மற்றும் லட்டு பிரசாதம் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுவதும் அதிகமாக உள்ளது.

இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்ய, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளது ஆந்திர அரசு. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவரான பி.ஆர்.நாயுடு,

“பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன்மூலம் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே பக்தர்கள் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஏஐ தொழில்நுட்பம் மட்டுமின்றி, ஏழுமலையான் தரிசனம் மற்றும் லட்டு பிரசாத விற்பனையில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையிலும் திருமலையில் சைபர் செக்யூரிட்டி லேப் தொடங்கப்பட உள்ளதாகவும்’ பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.

கூகுளுடன் ஒப்பந்தம் செய்த திருமலா தேவஸ்தானம்

திருமலையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்தர்களுக்கு தரமான சேவையை வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளை திருமலை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமலையில் ஏஐ தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுவதன் மூலம் பக்தர்கள் தங்களது தங்குமிடம், வரிசை மேலாண்மை உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகளை, முன்பு போல் சிரமம் இல்லாமல் எளிதில் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.

அதோடு, கூடுதலாக, உள்ளூர் விதிமுறைகள், தரிசன நடைமுறைகள் மற்றும் ஆடைக் கட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கும் பக்தர்களுக்கு இந்த ஏஐ தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கு அலைச்சல் குறையும்

பக்தர்களுக்கு மட்டுமின்றி, இந்த ஏஐ தொழில்நுட்பம் தேவஸ்தானத்திற்கும் பயனுள்ளதாகவே இருக்கும். ஏனென்றால், பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் காலங்களில், அவர்களின் விபரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம், கூட்ட நெரிசலைத் தடுத்து, தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் எளிதாக செய்து கொள்ள முடியும்.

கூகுளின் இந்த ஏஐ தொழில்நுட்ப அமைப்பு திருமலையில் செயல்படுத்தப்பட்டவுடன், கூகுள் மேப்ஸ் மூலம் உடனுக்குடன் கூட்ட நெரிசலை பக்தர்கள் தெரிந்து கொள்ள இயலும். மேலும், திருமலையில் உள்ள தங்கும் அறைகள், பொது விசாரணை அலுவலகம், சுகாதார மையங்கள், அன்ன பிரசாத மையங்கள் மற்றும் முடி காணிக்கை இடங்கள் போன்றவற்றையும் பக்தர்கள் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும். இருந்த இடத்திலேயே செல்போன்கள் மூலம் இந்தத் தகவல்களை அவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இதனால் பக்தர்களுக்கு அலைச்சல் குறையும், நேரமும் மிச்சமாகும்.

சிறப்பு கேமராக்கள்

திருமலையில் ஏஐ தொழில்நுட்ப அமைப்பிற்காக முக்கியமான இடங்களில் கேமராக்களை நிறுவ தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள், குற்றச் செயல்கள் போன்றவற்றை போலீசாரால் எளிதாக கண்காணித்து, தடுக்க இயலும். மேலும், தரகர்கள் மூலம் பக்தர்கள் மோசடி வலையில் சிக்காமல் இருக்கவும் இந்த ஏஐ அமைப்பின் கேமராக்கள் உதவி செய்யும்.

இந்தத் திட்டத்தை முதலில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் அதனை நிரந்தரமாக்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தனித்துவமான நிரந்தர அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவும், அவர்களது முகத்தை அடையாளம் கண்டு கொள்ளவும் தேவையான வசதிகளையும் செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. இந்த வசதி மூலம் பக்தர்கள் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் சுலபமாக முன்பதிவு செய்து கொள்ள இயலும்.