+

‘கிரேட் இந்தியன் திருவிழா 2025’ - கட்டண சலுகை அறிவித்து சிறு வணிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன அமேசான்!

இந்தியாவின் பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில் சிறு வணிகர்களை ஆதரிக்கும் விதமாக கட்டணங்களை குறைத்து அமேசான் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நவராத்திரி விழா, தீபாவளி என அடுத்தடுத்து வரும் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025'-ஐ முன்னிட்டு, அமேசான் இந்தியா, சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு (SMEs) பெரும் ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ள. இந்த ஆண்டு 1.7 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையாளர்கள் மிகப்பெரிய விற்பனைப் பருவத்திற்குத் தயாராகி வரும் நிலையில், அமேசான் அவர்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது.

சிறு வணிகர்களின் லாபத்தை அதிகரிக்க, அமேசான் பல முக்கிய கட்டணங்களைக் குறைத்துள்ளது. குறிப்பாக, ₹300-க்கும் குறைவான விலையுள்ள 1.2 கோடிக்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ரெஃபரல் கட்டணங்கள் (referral fees) முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற அதிக விற்பனையாகும் பொருட்களுக்கான கட்டணங்களும் குறைந்துள்ளன. இவை செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றன. அமேசானின் இந்த அறிவிப்பால் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்க உதவும்.

amazon

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் AI கருவிகள்

விற்பனையாளர்களின் செயல்பாடுகளை எளிதாக்க அமேசான், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Generative AI: ஒரு சில விநாடிகளில் தயாரிப்புப் பட்டியல்களையும், படங்களையும் உருவாக்க உதவும் AI தொழில்நுட்பம்.
  • “samriddhi Dashboard": சரக்கு இருப்பை திட்டமிட உதவும் புதிய டேஷ்போர்டு.
  • "Sell More Save More": ஒரே வாடிக்கையாளர் பல பொருட்களை வாங்கும்போது, விற்பனையாளர்களுக்குக் கட்டணக் குறைப்பை அளித்து, மொத்த விற்பனையை ஊக்குவிக்க முடியும்.

அதிக விற்பனை என்கிற இலக்கை வைத்துள்ள அமேசான் எதிர்பார்க்கப்படும் ஆர்டர் எண்ணிக்கையை சமாளிக்க, தனது விநியோக அமைப்புகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது. முன்ஏற்பாடுகளாக 12 புதிய கிடங்குகள் மற்றும் 6 புதிய வகைப்படுத்தும் மையங்கள் (sortation centres) தொடங்கப்பட்டுள்ளன. 1,50,000 தற்காலிகப் பணியாளர்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அழைப்பு வசதி மூலம், விற்பனையாளர்கள் நேரடியாக விநியோகப் பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொருட்களை எளிதாக டெலிவரி செய்யும் வசதியையும் அமேசான் இந்தியா ஏற்படுத்தியுள்ளது.

2024-ஆம் ஆண்டு பண்டிகை கால விற்பனையின் போது அமேசானில் 40 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். 70% அதிகமான விற்பனையாளர்கள் ரூ.1 கோடிக்கும் மேலான விற்பனையை செய்திருந்தனர். இது 2023ம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகமாகும். இவர்களில் 85% வாடிக்கையாளர்கள் மெட்ரோ நகரங்களைச் சேராதவர்களே என்று அதன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு விற்பனையாளர்கள் லாபம் பெற முடிகிறது என்று குறிப்பிட்டு விருந்தாவனத்தைச் சேர்ந்த ஊதுபத்தி உற்பத்தியாளரான ரமேஷ் சரஸ்வத் போன்ற விற்பனையாளர்களின் வெற்றி கதைகளை அமேசான் பகிர்துள்ளது.

“அமேசானில் இணைந்த பிறகு விற்பனை 500% அதிகரித்துள்ளது, 15 உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளேன்,” என்று ரமேஷ் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அமேசானின் இந்தக் கட்டணக் குறைப்புகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் மேம்பட்ட தளவாடங்கள், சிறு வணிகர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

facebook twitter