'அனிகட் கேபிடல்' மற்றும் தில்லியைச் சேர்ந்த 'தர்யாகஞ்ச் ஹாஸ்பிடாலிட்டி' (Daryaganj Hospitality) நிறுவனங்கள் வியூக நோக்கிலான முதலீடு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அறிவித்துள்ளன. தர்யாகஞ்ச் பிராண்ட் சார்பில் செய்யப்படும் முதல் நிறுவன நோக்கிலான முதலீடாக இது அமைகிறது.
இதற்கு முன் ’தர்யாகஞ்ச்- பை தி இன்வெண்டர்ஸ் ஆப் பட்டர் சிக்கன் & டால் மக்கானி’ என அழைக்கப்பட்ட தர்யாகஞ்ச் ஹாஸ்பிடாலிட்டிஸ் நிறுவனம், ரூ.100 கோடி ஆண்டு வருவாய் கொண்ட ரெஸ்டாரண்ட் பிராண்டாக விளங்குகிறது. இதன் வருவாயில் 26 சதவீதம் டெலிவரி மூலம் வருகிறது.
பட்டர் சிக்கன் மற்றும் டால் மக்கானியை உருவாக்கிய குந்தன் லால் ஜக்கியின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக ராகவ் ஜக்கி மற்றும் அவரது நண்பர் அமீத் பக்காவில் துவக்கப்பட்ட தர்யாகஞ்ச், பாரம்பரியம் மற்றும் நவீன உணவு வழங்கலை இணைக்கும் பிராண்டாக விளங்குகிறது.
ராகவ் ஜக்கி மற்றும் அமீத் பக்கா
பழைய கால உணவு சுவை மற்றும் ரகசியமாக காக்கப்படும் சமையல் குறிப்புகளை கொண்டு, புதுமையாக்கம் கொண்ட குழு மூலம், அந்தக் காலத்தை நினைவூட்டும் சிறந்த உணவு அனுபவத்தை அளிக்கிறது. நேர்த்தியான வட இந்திய பஞ்சாபி உணவுச்சுவையை விரும்பும் பல வகையான உணவு பிரியர்கள் இந்த ரெஸ்டாரண்டை நாடி வருகின்றனர்.
தர்யாகஞ்ச்; இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 15 ரெஸ்டாரண்ட்களை கொண்டுள்ளது. பாங்காக்கில் முதல் சர்வதேச ரெஸ்டாரண்ட் இந்த ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது. தெற்காசியா, யு,கே உள்ளிட்ட பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தில்லி –என்சிஆர் பகுதிகளில் வலுவான இருப்பு கொண்ட இந்த பிராண்ட், அடுத்த சில ஆண்டுகளில் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முன்னணி 8 நகரங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன் தர்யாகஞ்சி கோல்ட் கருத்தாக்கத்தை ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.
வளர்ச்சிப் பாதையில் கவனம் செலுத்தும் இந்நிறுவனம், இந்த பிராண்டை ரூ.100 கோடியில் இருந்து ரூ.1000 கோடிக்கு கொண்டு செல்லும் வியூக நோக்கிலான முதலீட்டிற்கு தயாராக உள்ளது. பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், மாற்று சொத்து நிர்வாக பிரிவில் செயல்பட்டு வரும் அனிகட் கேபிடலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
”இது எங்களுக்கு மைல்கல் தருணம். அனிகட் கேபிடல் எங்களின் முதல் நிறுவன முதலீட்டாளராக அமைகிறது. நிர்வாக ஆற்றல் மற்றும் உண்மையான நுகர்வோர் முதலீடு அறிவை கொண்டு வருகிறது. புதிய வடிவங்கள் மற்றும் புதிய நகரங்களுக்கு இது மிகவும் ஏற்றது. இந்த முதலீடு மற்றும் ஆலோசனை பாரம்பரியத்தை காத்து, வளர்ச்சிக்கு உதவும்,” என நிறுவனர் ராஜீவ் ஜக்கி கூறியுள்ளார்.
”அனிகட் கேபிடலை வரவேற்கிறோம். இந்த முதலீடு எங்கள் தொலைநோக்கு மற்றும் வலுவான வர்த்தகத்திற்கான அங்கீகாரமாக அமைகிறது. ரூ.100 கோடி வருவாயை கடந்த நிலையில், அடுத்த கட்ட விரிவாக்கத்திற்கு தயாராக உள்ளோம்,” என்று இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அமீத் பக்கா கூறியுள்ளார்.
”தர்யாகஞ்ச் பிராண்டை ஆதரிப்பதில் உற்சாகம் கொள்கிறோம். இந்த பிராண்ட் அதன் அடையாளமான பாரம்பரியம் மிக்க பட்டர் சிக்கனுடன் நவீன, வளரும் தன்மை கொண்ட உணவு வழங்கல் முறையை வெற்றிகரமாக இணைத்துள்ளது,” என அனிகட் ஆரம்ப நிலை பாட்னர் அஜய் ஆனந்த் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan