3D கட்டுமான தொழில்நுட்பத்தை முன்னேற்ற சென்னை ஸ்டார்ட்அப் Tvasta உடன் CEPT பல்கலைக்கழகம் கூட்டு!

11:07 AM Dec 13, 2025 | muthu kumar

சென்னையில் உள்ள 3D கான்கிரீட் பிரிண்டிங் நிபுணத்துவம் பெற்ற டீப் டெக் ஸ்டார்ட்அப் 'த்வஸ்தா மேனியூஃபாக்ச்சரிங் சால்யூஷன்ஸ்' (Tvasta Manufacturing solutions) அகமதாபாத் CEPT பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இந்தியாவில் 3D கட்டுமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதுமையை வலுப்படுத்த தேசிய தளத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

More News :

இந்த கூட்டாண்மையின் கீழ், CEPT வளாகத்தில் ஒரு மேம்பட்ட அடிட்டிவ் மேனியூஃபாக்ச்சரிங் (Additive Manufacturing) ஒர்க்‌ஷாப் உருவாக்கப்படுகிறது.

இதில், த்வஸ்தா வழங்க உள்ள ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் சிக்கலான கான்கிரீட் வடிவங்களை 3D பிரிண்ட் செய்யும் திறன் கிடைக்கிறது. இதன் மூலம் கட்டிடக்கலை, வடிவமைப்பு, பொருள் அறிவியல், கட்டுமான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு CEPT சில முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறவிருக்கிறது.

இரு அமைப்புகளின் ஆய்வாளர்கள் இணைந்து 3D பிரிண்டட் முகப்புகள் (facades), கட்டுமான கூறுகள், ஒருங்கிணைந்த கட்டமைப்பு அமைப்புகள் (சுவர், கூரை, ஸ்லாப் ஆகியவை ஒரே பிரிண்ட் செய்யப்பட்ட அலகாக) போன்ற துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர். வளிமண்டல சூழலுக்கு எதிரான 3D பிரிண்டட் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதையும், தளத்திற்கு வெளியே பிரிண்ட் செய்து சிக்கலான நிலத்தில் கொண்டு சென்று அமைக்கக்கூடிய கூறுகளை உருவாக்குவதையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுகுறித்து CEPT பல்கலைக்கழகத்தின் கல்வி துணை முதல்வர் பேரா.சிறயு பட் கூறும்போது,

“கட்டுமான துறையின் எதிர்காலத்திற்கான தொழில்நுட்ப மாற்றம் எங்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாகும். த்வஸ்தாவுடன் இந்த கூட்டணி உருவாகியது மிக முக்கியமான முன்னேற்றம். மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் புதுமைகளை நேரடியாக பரிசோதிக்கவும், புதிய கட்டுமான முறைகளை சிந்திக்கவும் வாய்ப்பு அளிக்கிறது,” என்றார்.

த்வஸ்தா CTO கல்யாண் வைத்யநாதன் பகிர்கையில்,

“இந்த கூட்டாண்மையின் மூலம் DFAM (Design for Additive Manufacturing) பாடநெறிகள் நடத்தப்படும். மாணவர்கள் வடிவமைக்கும் திட்டங்கள் நிஜத்தில் 3D பிரிண்டர் மூலம் உருவாக்கப்படும். ஆற்றல் திறன், கட்டமைப்பு வலிமை போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகளும் நடைபெறும்,” என்றார்.

Tvasta கட்டிய 3டி வீடு

இந்த புதிய ஆய்வகத்தால், CEPT மாணவர்களுக்கு ரோபோட்டிக் பிரிண்டிங், பொருள் பரிசோதனை, வேகமான மாற்று முன் - மாதிரி அல்லது முன் - வடிவ (rapid prototyping) நிஜ கட்டுமான சோதனைகள், நீண்டகால ஆராய்ச்சி திட்டங்கள் என பல துறைகளில் செயல்முறை அனுபவம் கிடைக்கும்.

CEPT மாணவர்கள் ஏற்கனவே த்வஸ்தாவின் சென்னை மற்றும் பிவாண்டி தொழில்நுட்ப மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றுள்ளனர். புதிய வளாக ஆய்வகம் இந்த கற்றலை மேலும் விரிவுபடுத்தும்.

2016 ஆம் ஆண்டு ஐஐடி மதராஸ் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட த்வஸ்தா, தானியங்கியாக்கப்பட்ட 3D பிரிண்டிங், வேகமான மற்றும் செலவுக்குறைந்த கட்டுமானம், நிலைத்தன்மை கொண்ட கட்டுமான உற்பத்தி போன்ற துறைகளில் 'Made in India' முறையில் முன்னணி வகிக்கிறது.