+

‘மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு மார்பக மறுசீரமைப்பு அழகுக்கல்ல; அவசியமானது’ - சென்னை மருத்துவர்கள் வலியுறுத்தல்

மேற்கத்திய நாடுகளில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சையோடு, உடனடியாக அதனை சீரமைக்கும் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அந்த நிலை இல்லை. மார்பக மறுசீரமைப்பு அழகுக்கானதல்ல என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.

சர்வதேச மார்பக மறுசீரமைப்பு தினத்தையொட்டி, சென்னை மார்பக மையம் சார்பில், 'மார்பகப் புற்றுநோயைக் கடந்து: வாழ்க்கையை மீட்டெடுத்தல்' என்ற சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மார்பக மறுசீரமைப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, மார்பகப் புற்றுநோயை வென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மார்பக மறுசீரமைப்பு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மார்பக மையத்தின் (Chennai Breast Centre) மூத்த ஆலோசகரும், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) மற்றும் சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன் மற்றும் முதுநிலை மருத்துவ ஆலோசகரும், புற்றுநோய் ஒட்டுறுப்பு (ஆன்கோபிளாஸ்டிக்) மார்பக அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தாங்கள் கடந்து வந்த பயணங்களையும், அனுபவங்களையும் நிகழ்வில் பகிர்ந்துகொண்டனர். மார்பகப் புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை குறித்த காணொலி விளக்கப் படங்களும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்டன.

International Breast Reconstruction Day

உலக மார்பக சீரமைப்பு நாள் (BRA day)

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. புற்றுநோய்க்குள்ளாகும் பெண்களில் 30 சதவீதம் பேருக்கு அந்த வகை பாதிப்பே உறுதி செய்யப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 1,92,020 பேருக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகும் பெண்களில், 60% க்கும் அதிகமானோர் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலேயே பாதிப்பை கண்டறிகின்றனர்.  அந்த தருணத்தில் மார்பகங்களை முழுமையாக நீக்கும் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. அந்த சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு இழந்த மார்பகங்களை மீண்டும் மறுசீரமைத்துக் கொள்ள 99 சதவீத பெண்கள் முன்வருதில்லை.

கலாச்சார ரீதியான கட்டுப்பாடுகளும், பொருளாதார சிக்கல்களுமே அதற்கு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் இந்த சூழல் இல்லை. அங்கு ஏறத்தாழ 65% க்கும் அதிகமான பெண்கள் மார்பக மறுசீரமைப்பு சிகிச்சைகளை விருப்பத்துடன் மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில், மார்பகப் புற்றுநோய்க்குள்ளாகும் 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களது மார்பகங்களை மட்டும் இழப்பதில்லை. மாறாக, தன்னம்பிக்கையும், சுய மதிப்பையும் சேர்த்தே இழக்கின்றனர். எனவே, மார்பகப் புற்றுநோய் சிகிச்சையுடன் சீரமைப்பு சிகிச்சையும் ஒருங்கிணைப்பதே இதற்கு சிறந்த தீர்வு. இதன் மூலம் நோயைக் கண்டறிவது முதல் குணமடைவது வரை ஒருங்கிணைந்த சிகிச்சையைப் பெற முடியும்.

இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு அக்டோபர் 15ம் தேதி உலக மார்பக மறுசீரமைப்பு நாள் (BRA Day)  கடைப்பிடிக்கப்படுகிறது.

International Breast Reconstruction Day

மீட்டுருவாக்கம்

மார்பக நீக்க அறுவை சிகிச்சைக்கு (Mastectomy) பிறகு, அந்த இடத்தில் மீண்டும் மார்பகங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கு செயற்கை உபகரணங்களை (Implants) பயன்படுத்தலாம். இல்லையெனில், நோயாளியின் வயிறு, முதுகு அல்லது தொடைப் பகுதிகளிலிருந்து திசுக்களை எடுத்து மார்பகங்களை மறுசீரமைப்பு செய்யலாம்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சீரமைப்பு நிபுணர்களுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் அதிக திறமையான மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்க இயலும்.

அதேபோன்று, மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையை ஒரு அழகியல் (aesthetic) நடைமுறையாகப் பார்க்காமல், மருத்துவச் சிகிச்சையாகக் கருதி காப்பீடு வழங்குவதும் அவசியம். மேலும், பரிசோதனை, அறுவை சிகிச்சை, சீரமைப்பு ஆகிய அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒருங்கிணைந்த மையங்களை நிறுவுவது சிகிச்சையை எளிதாகவும், மலிவாகவும் மாற்றும்.

மேற்கூறிய இந்த கருத்துக்களை வலியுறுத்தி, ’சென்னை மார்பக மையம்’ (Chennai Breast Centre) சார்பில், 'மார்பகப் புற்றுநோயைக் கடந்து: வாழ்க்கையை மீட்டெடுத்தல்' என்ற சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா,

“தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான பட வழிகாட்டுதல் (இமேஜிங்) ஆகியவை தொடக்கநிலையிலேயே நோயைக் கண்டறிவதை சாத்தியமாக்கியுள்ளன. இதன் பயனாக பல பெண்களின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படுகிறது,” என்றார்.

மேற்கத்திய நாடுகளில், மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் பெண்களுக்கு உடனடியாகச் சீரமைப்புச் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அந்த நிலை இல்லை. இதன் விளைவாக, புற்றுநோயிலிருந்து மீண்டாலும், உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த உளைச்சலுடன் வாழ நேரிடுகிறது. புற்றுநோய் சிகிச்சையுடன் சீரமைப்பு சிகிச்சையை ஒருங்கிணைப்பது அவசியம் என்பதையே அது உணர்த்துகிறது, எனத் தெரிவித்தார்.

International Breast Reconstruction Day

எண்ணற்ற நன்மைகள்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன், பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர் ஆவார். கடந்த 40 ஆண்டுகளாக லண்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

மார்பக மறுசீரமைப்பு குறித்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் ,

“மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை நுட்பங்கள் மகத்தான முன்னேற்றத்தை எட்டியுள்ளன. நோயாளியின் திசுக்களைப் பயன்படுத்தியே மறு சீரமைப்பு செய்ய முடியும். இதற்குக் கூடுதலாக இரண்டு மணி நேரம் மட்டுமே செலவிட வேண்டியிருக்கும். அனுபவமும், ஆற்றலும் நிறைந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் சீரமைப்பு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும்போது அதன் வெற்றி விகிதம் 99% க்கும் மேல் உள்ளது. அதுமட்டுமல்லாது சில தருணங்களில், மார்பக நீக்கம் மற்றும் சீரமைப்பு சிகிச்சைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்போது, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய கதிரியக்கச் சிகிச்சைக்கான தேவையும் குறைகிறது,” என்றார்.

சீரமைப்பு சிகிச்சைகளுக்காக வயிற்றுப் பகுதியில் உள்ள திசுக்களைப் பயன்படுத்துவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது. இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் இதில் நிறைந்திருப்பது குறித்த விழிப்புணர்வு மேம்பட்டால் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்களுக்கு ஆக்கப்பூர்வமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்,” எனத் தெரிவித்தார்.

டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன், இதுவரையிலும் மார்பக கேன்சர் பாதிப்பால், மார்பகங்களை இழந்த 10 ஆயிரம் மகளிருக்கு இந்த அறுவை சிகிச்சையை செய்து, அவர்களின் வெளித் தோறறத்தில் இயல்பான நிலையை மீட்டுத் தந்தவர் ஆவார்.

breast cancer

விழிப்புணர்வு தேவை

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் இந்த ’ரீகன்ஸ்ட்ரக்டிவ் அறுவை சிகிச்சை’ (Reconstructive Surgery) மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. மார்பக கேன்சர் பாதித்த பெண்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து மார்பகங்களை அகற்றிய பின், மார்பக மறுசீரமைப்பு - ரீகன்ஸ்ட்ரக்டிவ், செய்ய அறிவுறுத்த வேண்டும் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள வழிகாட்டு நெறிமுறை.

இதை அந்த நாடுகளின் அரசு மற்றும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. மார்பக கேன்சர் பாதித்து மார்பகங்களை இழந்த பெண்களில் 70 சதவீதம் பேர் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்கின்றனர்.

தவிர்க்க முடியாத வேறு மருத்துவக் காரணங்கள், உடல் ரீதியிலான கோளாறுகள், குடும்பத்தில் ஒப்புக் கொள்ளாதது போன்ற தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர, மார்பக கேன்சர் பாதித்த 70 சதவீத பெண்கள் மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை செய்து கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது.

“பொதுவாக இந்த மார்பக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சையை அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை என்றே தவறாக நினைக்கின்றனர். மார்பகத்தை இழந்தது சம்பந்தப்பட்ட பெண்ணின் பிரச்சினையே தவிர மற்றவர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை.

புற்றுநோய் பாதிப்பால் மார்பகத்தை இழந்து, அந்த இடத்தில் பெரிய தழும்புடன் இருக்கும் பெண்ணின் மனநிலை நிச்சயம் பாதிக்கப்படும். தோற்றத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை மறைக்க, சிலிக்கனில் செய்த உள்ளாடை அணியலாம். செயற்கையாக எது செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வது அத்தனை எளிதல்ல.

மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றும் போதே, நாங்கள் அடிவயிற்றில் இருந்து மார்பகத்தின் எடைக்கு எற்ற வகையில் கொழுப்பு திசுக்களை எடுப்போம். மார்பகங்களும் கொழுப்புத் திசுக்களால் உருவான உறுப்பு தான். அதை மார்பக வடிவத்தில் வடிவமைத்து நுண்ணிய ரத்த நாளங்கள், ரத்தக் குழாயுடன சேர்த்து மார்பகத்தில் உள்ள ரத்த குழாயுடன் இணைத்து விடுவோம்.

”மார்பகத்தை அகற்ற இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், மறுசீரமைப்பு செய்ய கூடுதலாக இரண்டு மணி நேரம் தேவைப்படும். ஆனால் அதனால் ஏற்படும் நிம்மதி, மகிழ்ச்சி வாழ்நாள் முழுவதும் இருக்கும்,” என்கிறார் டாக்டர் வெங்கட் ராமகிருஷ்ணன்.

More News :
facebook twitter