சென்னை மின்வாகன ஸ்டார்ட் அப் Raptee தொழில்நுட்ப வளர்ச்சி வாரிய நிதி பெற்றுள்ளது!

10:45 AM Sep 25, 2025 | cyber simman

மின்சார காரின் அதிக வோல்டேஜ் திறனை இரு சக்கர வாகனங்களில் பயன்படுத்த வழி செய்யும் சென்னையைச் சேர்ந்த முன்னோடி ஸ்டார்ட் அப் நிறுவனம் ராப்டீ.எச்வி’ (Raptee.HV) இந்திய அரசின் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்திடம் இருந்து நிதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்திடம் இருந்து நிதி பெறும் நாட்டின் முதல் மின் பைக் மூல தயாரிப்பு நிறுவனமாக ராப்டீ விளங்குவதாக நிறுவனம் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் ஆய்வை முதன்மையாக கொண்ட அணுகுமுறை மற்றும் போக்குவரத்து நுட்பத்தில் புதுமையாக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இது அமைகிறது, என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி, நிறுவனத்தின் அதிக வோல்டேஜ் நுட்பத்தை மேலும் மேம்படுத்த அதிக திறன் கொண்ட மின் பைக் பிரிவை பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சியை வேகப்படுத்தவும் உதவும், என்று நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

“தொழில்நுட்ப வளர்ச்சி வாரியத்தின் இந்த ஆதரவு, உலகிற்காக இந்தியாவில் செயல்திறன் கொண்ட மின்வாகன போக்குவரத்தை மாற்றி அமைப்பதன் நிறுவன நோக்கத்திற்கு கிடைத்த ஆதரவாக அமைகிறது. அதிக வோல்டேஜ் மின் பைக்கிற்கான சூழல் இல்லாத நிலையில் சமரசம் இல்லாத பொறியியல் வாயிலாக சொந்த நுட்பத்தை உருவாக்கினோம். முன்னதாக கனரக தொழில் துறை அமைச்சகம் ARAI-AMTIF மூலம் அங்கீகரித்து ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது,” என இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.தினேஷ் அர்ஜுன் கூறியுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி வாரிய ஆதரவின் மூலம், டாடா இண்டிகா, பாரத் பயோடெக் கோவிட் தடுப்பூசி ஆகிய இந்தியாவின் மதிப்பு மிகு புதுமையாக்கங்கள் பட்டியலில் நிறுவன நுட்பமும் இணைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற மின்வாகன நிறுவனங்கள் போல ஏற்கனவே உள்ள மேடையை பயன்படுத்தாமல், ராப்டீ நிறுவனம் தனது சொந்த நுட்பத்தை ஆறு ஆண்டுகள் தீவிரமாக முயற்சி செய்து உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கார்களின் அதிக வோல்டேஜ் நுட்பம் கொண்டு இயங்கும் இந்தியாவின் ஒரே மின் பைக்கை உருவாக்கியுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் சாத்தியம் இல்லாதது என கருதப்பட்டது இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது, என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய இருசக்கர வாகன சந்தையில் பைக் முக்கிய பங்கு வகிப்பதால் மின்சார வாகனங்கள் ஏற்பில் இத்தகைய புதுமையாக்க தாக்கம் செலுத்தும், என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் டெஸ்லா ஊழியரான தினேஷ் அர்ஜுன், 2019ல் மற்ற மூன்று இணை நிறுவனர்களுடன் இணைந்து இந்த ஸ்டார்ட் அப்பை துவக்கினார். சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஸ்டார்ட் அப், ஆழ் நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. அதிக வோல்டேஜ் கட்டமைப்பின் மீது நிறுவனம் தனது நுட்பத்தை சொந்தமாக உருவாக்கியுள்ளது.

120 ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம் 4.5 ஏக்கர் பரப்பிலான ஆலையை கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகன உற்பத்தி திறன் கொண்டுள்ளது. மேலும் விரிவாக்கத்திற்காக செய்யாறு அருகே 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.

நிறுவனம் இதுவரை ஏ சுற்றுக்கு முந்தைய சுற்றில் 5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. சமபங்கு மற்றும் கடன் கலந்து 20 மில்லியன் டாலர் ஏ சுற்று நிதி திரட்டும் கட்டத்தில் உள்ளது.


Edited by Induja Raghunathan