
தமிழ்நாட்டின் தற்போதைய ஸ்டார்ட்அப் அலை மாறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது, வெறும் அதிகமான உற்பத்தியை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர்கள் இப்போது புத்திசாலித்தனமான, மேலும் சிறப்பாகச் செயல்படும் வழிகளை வடிவமைக்கிறார்கள். பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க முயல்கிறார்கள். பழைய நடைமுறைகளில் நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகளுக்கு தீர்வுகாணும் வகையில், எளிதில் விரிவாக்கக்கூடிய துமையான முடிவுகளைக் கொண்டு வருகிறார்கள்.
‘தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு (TNGSS 2025)’-ல் இந்த புத்தாக்கத்தை நோக்கிய மாற்றம் மைய இடத்தைப் பெறுகிறது. Unibose, De Drone World, Mycoblooms, and Boxfile போன்ற நிறுவனங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.
இந்த ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு துறையில் இருந்தாலும், அவை அனைத்துக்கும் ஒரு பொதுவான நோக்கம் உள்ளது. அவை இன்றைய முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில், நாளைய தொழில்களுக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆபத்தை தடுக்கும் ரோபோக்கள் உருவாக்கும் Unibose
ஒவ்வொரு வருடமும், சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அபாயகரமான ஆபத்தாக சொல்லப்பட்ட இடங்களான எண்ணெய் தொட்டிகள், ரசாயன உலைகள் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் போன்ற குறுகிய இடங்களுக்கு, அங்குள்ள அபாயங்களைத் தெரிந்துகொண்டே உள்ளே செல்கின்றனர். அவர்களில் சிலர் திரும்பி வருவதில்லை, அதேநேரம், வேறு சிலர் நீண்ட கால ஆரோக்கியப் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். பல ஆண்டுகளாக, இதுபோன்ற இடங்களுக்கு மனிதர்கள் உள்ளே செல்வது தவிர்க்க முடியாத உண்மை எனத் தொழில்துறைகள் ஏற்றுக்கொண்டிருந்தன.
2016-ம் ஆண்டு மணிக்கண்டன் தக்ஷிணாமூர்த்தி, சமயராஜ் துரைராஜ், மற்றும் சக்திவேல் பன்னீர்செல்வம் ஆகியோரால் நிறுவப்பட்ட, மறைமலைநகரைச் சேர்ந்த ’யூனிபோஸ் டெக்னாலஜி’ (Unibose Technology), இந்த நிலைமையை மாற்றுகிறது. இந்த நிறுவனம், ஆசியாவிலேயே முதன்முறையாக ATEX Zone-0 சான்றிதழ் பெற்ற ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோக்கள் வெடிக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் சுத்தம் செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள யூனிபோஸின் இந்த ரோபோக்கள், உலகச் சந்தை விலையில் கிட்டத்தட்ட பாதி விலைக்குக் கிடைக்கின்றன. இதன் அதிநவீன அமைப்பு குறுகிய இடங்களிலும் எளிதாகச் சென்று, அங்கு நடப்பதை நேரலையில் வீடியோ காட்சிகளாகவும், சென்சார் தகவல்களாகவும் வழங்கக்கூடியவை. இதன் மூலம் இரண்டு வகையான சாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. மனிதர்களுக்கு ஆபத்தே இல்லை, தொழில்சாலை வேலை நிறுத்தம் 40 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது என்பதுதான் அவை.
"ரோபோக்கள் மனிதர்களுக்குப் பதிலாக வேலை செய்யாது. ஆனால், ஆபத்தான குறுகிய இடங்களுக்குள் தங்கள் பிழைப்புக்காகச் செல்லும் நூற்றுக்கணக்கான மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்," என்கிறார் இதன் நிறுவனர் தட்சிணாமூர்த்தி.
இந்த நிறுவனத்தின் இந்த மாபெரும் கண்டுபிடிப்பு அனைத்து தொழில்துறைகளிலும் கவனத்தை ஈர்த்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், யூனிபோஸின் இந்த புதிய சிந்தனையை ’2020 ஆம் ஆண்டின் சிறந்த யோசனை’ என்று அங்கீகரித்தது. இந்தியன் ஆயில், CPCL, மற்றும் அபுதாபியில் உள்ள Borouge போன்ற நிறுவனங்களில் வெற்றிகரமாக இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, அதன் திறன் நிரூபிக்கப்பட்டது.
2023 ஜனவரியில் StartupTN-யிடம் இருந்து ரூ.2.5 கோடி முதலீட்டைப் பெற்ற யூனிபோஸ், இப்போது இந்தியாவில் 'Robot-as-a-Service' என்ற புதிய சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இதன் மூலம், உலகத் தரத்திலான குறுகிய இட ஆய்வுத் தொழில்நுட்பத்தை ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் மற்றும் தொழிற்சாலையும் எளிதில் பயன்படுத்த முடியும். இதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் உலக அளவில் விரிவடையத் திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பத்தைத் தாண்டி, யூனிபோஸ் (Unibose) நிறுவனம் நேரடியாக 16 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இந்த ரோபோட்டிக் கருவிகளைப் பற்றிய பயிற்சி அளிப்பதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் 'டீப்டெக்' சூழலைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். உள்ளூரிலேயே உருவாக்கப்பட்ட ரோபோட்டிக் கண்டுபிடிப்புகள் உலகத் தரத்திற்கு இணையாகச் செயல்பட முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது.
டி ட்ரோன் (De Drone):
இந்தியாவில் தற்போது ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் சில பொதுவான சவால்கள் உள்ளன. அதாவது, பயிற்சி பெற்ற விமானிகள் பற்றாக்குறை, மலிவான உள்நாட்டு ட்ரோன்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் மற்றும் வேலைவாய்ப்பு வழிகள் சீராக இல்லாமல் சிதறிக் கிடப்பது ஆகியவை அவற்றில் அடங்கும். இந்தச் சவால்களை எதிர்கொள்ள, 2022-ல் ஓய்வுபெற்ற விங் கமாண்டர் ஏ.சதீஷ் குமார் அவர்களால் கோயம்புத்தூரில் நிறுவப்பட்ட நிறுவனம் தான் 'டி ட்ரோன் வேர்ல்ட் சொல்யூஷன்ஸ்' (De Drone World Solutions).
இந்த நிறுவனம் பயிற்சி, உற்பத்தி, மற்றும் ட்ரோன் சேவைகள் ஆகிய மூன்றையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம், கண்டுபிடிப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை இணைத்து, இந்தியாவை உலக அளவில் ட்ரோன் துறையில் முன்னணியில் வைக்கும் நோக்குடன் செயல்படும் அடுத்த தலைமுறை ட்ரோன் நிறுவனமாகும்.
இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகமான DGCA அங்கீகாரம் பெற்ற இவர்களின் பயிற்சி வகுப்புகள் ஏஐ மூலம் இயக்கப்படும் உருவகப்படுத்துதல்களையும் மற்றும் பிராந்திய மொழிக் கற்றலையும் ஒருங்கிணைத்துள்ளன. இது, ட்ரோன் தொழில்நுட்பக் கல்வியில் ஒரு புதுமையான முயற்சியாகும்.
உற்பத்திப் பக்கத்தில் பார்த்தால், இவர்களின் 'மேட்-இன்-இந்தியா' ட்ரோன்கள் பொழுதுபோக்கு, கல்வி மற்றும் சிறப்பு நோக்கங்களுக்கான பயன்பாடுகளுக்காகத் தயாரிக்கப்படுகின்றன. சேவைப் பக்கத்தில், பயிற்சி பெற்ற ட்ரோன் ஓட்டுநர்களே தாங்கள் தயாரிக்க உதவிய ட்ரோன்களை இயக்குகிறார்கள். மேலும், ட்ரோன்களை உருவாக்கியவர்களே இயக்குவதால், சேவை மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.
இந்த நிறுவனத்தால் இளைஞர்கள் தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெறுகிறார்கள். உள்ளூர் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உதிரி பாகங்களை வழங்குவதன் மூலம் சந்தை வாய்ப்பைப் பெறுகின்றன. தொழில்துறைகள் குறைந்த விலையில் டிரோன் தீர்வுகளை அணுக முடிகிறது. டி ட்ரோன் வேர்ல்ட் நிறுவனம், DGCA அங்கீகரிக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் மாநிலத் திறன் மேம்பாட்டுத் திட்டமான "நான் முதல்வன்" உடன் இணைந்து 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது.
"நாங்கள் இயக்கும் ஒவ்வொரு விமானமும், அளிக்கும் ஒவ்வொரு பயிற்சியும், மேற்கொள்ளும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும், நம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, ஒரு சுய-சார்புள்ள நாட்டை வடிவமைக்கும் நோக்கிய ஒரு படியாகும்," என்று கூறுகிறார் இதன் நிறுவனர் குமார்.
ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள இந்த நிறுவனம், விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் தனது ட்ரோன் மாதிரியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகாரத்துடன், இந்த நிறுவனம் இப்போது தமிழ்நாட்டை ட்ரோன் உற்பத்தி மற்றும் பயிற்சி மையமாக மாற்றி, வேகமாக வளர்ந்து வருகிறது.
மைக்கோப்ளூம்ஸ் (Mycoblooms):
மிகவும் மதிப்புமிக்க மருத்துவ குணம் கொண்ட காளானான 'கார்டிசெப்ஸ்' (Cordyceps) வளர்ப்பது நீண்ட காலமாகச் சவாலாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணங்கள், நிலையான விளைச்சல் இல்லாதது, மாசுபடும் அபாயம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை நம்பியிருப்பது, சீரற்ற கைகளால் செய்யும் நடைமுறைகள் ஆகியவை. கோயம்புத்தூரைச் சேர்ந்த 'மைக்கோப்ளூம்ஸ் மஷ்ரூமரி' (Mycoblooms Mushroomery) என்ற நிறுவனம், ரஃபானா ஷாகுல் மற்றும் டாக்டர் ஏ.கே. பிரியா ஆகியோரால் நிறுவப்பட்டது. இவர்கள், கார்டிசெப்ஸ் வளர்ப்பதை எளிதில் விரிவாக்கக்கூடியதாகவும் நிலைத்தன்மை கொண்டதாகவும் மாற்றி வருகின்றனர்.
இவர்களின் கண்டுபிடிப்பான 'கார்டிப்ளூமர்' என்பது ஒரு அதிநவீன வளரும் அறையாகும். இது வெப்பநிலை, ஈரப்பதம், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஒளிச் செறிவு போன்றவற்றைத் தானியங்கியாகக் கட்டுப்படுத்துகிறது. இதனால், விளைச்சல் நிலையானதாகவும், மாசுபடுவது இல்லாததாகவும் உறுதி செய்யப்படுகிறது. முக்கியமாக, இந்த அறையின் வடிவமைப்பு விரிவாக்கக்கூடியது. எனவே, மிகச் சிறிய தொழில்கள் முதல் பெரிய வணிகப் பண்ணைகள் வரை அனைவராலும் இதைப் பயன்படுத்த முடியும்.
"எங்கள் நிறுவனத்தின் புதுமை என்பது, பாரம்பரியமான காளான் வளர்ப்பு முறையை, அனைவரும் எளிதாக, அதிக அளவில் செய்யக்கூடிய ஒரு லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில், மலிவு விலை தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதே..." என்கிறார் இதன் நிறுவனர் ஷாகுல்.
'மைக்கோப்ளூம்ஸ்' நிறுவனம் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. மேலும், உள்ளூர் இளைஞர்கள், பயோ-டெக் பட்டதாரிகள் மற்றும் கிராமப்புற விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம், மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில், குறிப்பாகப் பெண்களையும், இளம் தொழில்முனைவோரையும் இலக்கு வைக்கிறது. வணிக இலக்குக்கு அப்பால், மைக்கோப்ளூம்ஸ் நிறுவனம், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத இயற்கை மற்றும் நிலைத்தன்மை கொண்ட நடைமுறைகள் மூலம் ஒரு கிராமப்புற பொருளாதாரத்தை கட்டமைத்து வருகிறது.
மைக்கோப்ளூம்ஸ் நிறுவனம், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசின் உயிரித்தொழில்நுட்பக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், நிலையான விவசாயம் லாபம் தருவதுடன், சமூக நோக்கத்துடனும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், விவசாயம், உயிரித்தொழில்நுட்பம் மற்றும் சமூக தொழில்முனைவு ஆகிய துறைகளை இணைக்கிறது.
பாக்ஸ்ஃபைல் (Boxfile):
தணிக்கை மற்றும் ஒழுங்குமுறை செயல்முறைகள் பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல், துண்டு துண்டாக உள்ளன. மேலும், இதற்காக ஸ்பெரெட்ஷீட்கள் மற்றும் பழமையான அமைப்புகளை நம்பி இருப்பதுதான் காரணம். இதனால், வேலையில் திறனின்மை, உறுதியை அளிப்பதில் தாமதம் மற்றும் மோசடி ஏற்படும் அதிக ஆபத்து போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்த ஒட்டுமொத்தப் பணிச் சூழலையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், 2020-ம் ஆண்டு ஜோசப் கிறிஸ்டி, செந்தில்குமார் மல்லையா ஜெகதீஸ்வரன், மற்றும் வெங்கடேஷ் ஜெகந்நாதன் ஆகியோரால் சென்னையில் 'பாக்ஸ்ஃபைல் வெப் சர்வீசஸ்' (Boxfile Web Services) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், கிளவுட் அடிப்படையிலான 'சாஸ்' (SaaS) தளத்தின் மூலம் தணிக்கை மேலாண்மைப் பணிகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டு வந்து, செயல்முறைகளை எளிமையாக்கியுள்ளது.
பாக்ஸ்ஃபைலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அதன் இரட்டைச் செயல்பாடுதான். அதாவது, ஒரே ஒருங்கிணைந்த தளமாக இருந்தாலும், இது பெருநிறுவனங்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி வேலை முறைகளுடன் சேவை செய்கிறது. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கித் தொழில்நுட்பம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும், விரைவான ஒத்துழைப்புக்கும் மற்றும் நிகழ்நேர உறுதிப்பாட்டிற்கும் உதவுகிறது.
இந்தத் தளம், முன்னணி தணிக்கை நிறுவனங்கள் மற்றும் NSE/BSE-ல் பட்டியலிடப்பட்ட மற்றும் NASDAQ-ல் பட்டியலிடப்பட்ட பெரிய பெருநிறுவனங்கள் உட்பட, பல முக்கிய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
"மோசடிகளைத் தடுக்கவும், உடனுக்குடன் உறுதியான முடிவுகளைப் பெறவும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தணிக்கை முறையை டிஜிட்டலாக மாற்றி, நம்பிக்கையின் எதிர்காலத்தை நாங்கள் வடிவமைக்கிறோம்," என்கிறார் இதன் நிறுவர்னர் கிறிஸ்டி.
பாக்ஸ்ஃபைல், தனது தயாரிப்புகளுக்கு அப்பாற்பட்டு, உயர் தொழில்நுட்பத் துறைகளிலும் வாடிக்கையாளர் சேவையிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியத் திறமையாளர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
StartupTN-இன் ஆதரவு மற்றும் NITI ஆயோக்கின் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்றுள்ள பாக்ஸ்ஃபைல், நிதித் தொழில்நுட்பம் மற்றும் தணிக்கைத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிதாக உருவாகி வரும் ஒரு பெரிய மாற்றத்தின் அடையாளமாக இருக்கிறது.
StartupTN
இந்த நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளில் செயல்பட்டாலும், அவை ஒரு முக்கியமான அம்சத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைச் சந்தைக்கு ஏற்ற தீர்வுகளாகவும், விரிவாக்கக்கூடிய செயல்பாடுகளாகவும் மாற்றியமைக்க உதவிய, ஆரம்ப நிலையில் கிடைத்த ஆதரவு தான் அந்த முக்கிய அம்சமாகும். இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசின் StartupTN-ன் TANSEED திட்டம் மிகவும் முக்கியமான ஆரம்பக்கட்ட நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது.
டான்சீட் திட்டம் என்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு மானிய அடிப்படையில் நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் ஆகும். பணமில்லை என்ற காரணத்தால் தொழில்முனைவோர் மனப்பான்மை முடங்கிவிடக் கூடாது என்பதற்காக புதுமைகளை கொண்டு வர அரசாங்கம் தரும் ஒரு ஆதரவு இது.
StartupTN-ன் டான்சீட் திட்டம் மூலம் ஒவ்வொரு நிறுவனமும் ரூ.10 லட்சம் நிதியுதவியைப் பெறுகின்றன. அதே நேரத்தில், பெண்கள் தலைமை வகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைகளை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை நிதியுதவியைப் பெற முடியும். இந்த நிதி ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் கூட்டணி, சர்வதேச சந்தைகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளுக்கு அணுகலை பெற உதவுகின்றன.
எதிர்கால கட்டமைப்பை உருவாக்குதல்:
ஆபத்தான வேலைகளை ரோபோக்களுக்குக் கொடுப்பது, ட்ரோன் பயிற்சியை எளிதாக்குவது, காளான் விவசாயத்தை நவீனமாக்குவது, மற்றும் ஆடிட் பணிகளை டிஜிட்டல் ஆக்குவது என... இந்த நிறுவனர்கள் அனைவரும், அதிக உற்பத்தி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்ற இலக்குகளைச் சாத்தியமாக்கி, எதிர்கால கட்டமைப்பை உருவாக்குகிறார்கள்.
2030-க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் இலக்குடன் செல்லும்போது, இந்த நிறுவனங்கள் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கின்றன. ரோபோக்கள் பாதுகாப்பு, ஏஐ நிர்வாகம், உலகளாவிய உற்பத்தி மற்றும் கிராமப்புற தொழில்முனைவு போன்ற புதிய தொழில்துறை அடையாளங்களை இவை உருவாக்குகின்றன. தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழல், உலக கண்டுபிடிப்புகளைப் பின்பற்றுவது மட்டுமல்ல, முக்கியமான துறைகளில் தலைமைப் பொறுப்பையும் ஏற்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.
டெக் உதவியுடன் மனிதம் தழைக்க வைக்கும் மகத்துவமான 4 தமிழக ஸ்டார்ட்அப்கள்!
Edited by Induja Raghunathan